இல்லாது சொன்னேனுக்கு இல்லையென்றான்!

தமிழுக்கும் தமிழ்ப்புலவர்க்கும் இருந்த ஏற்றம் சங்ககாலத்தைப்போல் எக்காலத்தும் இல்லை என்றே கூறலாம்.
இல்லாது சொன்னேனுக்கு இல்லையென்றான்!

தமிழுக்கும் தமிழ்ப்புலவர்க்கும் இருந்த ஏற்றம் சங்ககாலத்தைப்போல் எக்காலத்தும் இல்லை என்றே கூறலாம். சங்ககாலத்தில் மன்னர்கள் வள்ளண்மையும் தமிழ்ப்புலமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவராகத் திகழ்ந்ததைச் சங்க இலக்கியங்களில் தெளிவாகக் காண முடியும். 
அதனால் மன்னர்கள் புலவர்களை மதித்துப் போற்றினர். பகைவர் நுழைய முடியாத மன்னனது அரசவையில் புலவர்கள் செம்மாந்து சென்றனர். இதனைச் செம்மன் நாளவை அண்ணாந்து புகுதல் எம்மன வாழ்க்கை இரவலர்க் கெளிதே (புறம்: 162) என்ற பாடல் வரிகள் உணர்த்தும். 
அக்காலத்தில் வள்ளல்கள், புலவர் நாவால் பாடப்பெறும் தகுதியைப் பெற்றுவிட்டால் விண்ணில் வலவன் (ஓட்டுநர்) ஏவா வானவூர்தி ஏறி சொர்க்கம் புகுவர் என்று நம்பினர். 
அக்காலத்தில் புலவர்கள் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தனர். தம்மை மதியாதவர் மன்னரேயாயினும் அவரைத் துச்சமாகக் கருதினர். வறுமையில் உழன்ற பெருஞ்சித்திரனார், தம்மை மதியாத வெளிமானின் தம்பி, மன்னன் இளவெளிமானை நோக்கி "இரவலர் புரவலை நீயுமல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையு மல்லர்' (புறம்: 162 (12) என்று சினந்து கூறியதோடு அவன் காவல்
மரத்தில் தமக்குப் பரிசாகக் கிடைத்த யானையை அவனுக்குப் பரிசிலாக அளித்து கட்டிவிட்டுச் சென்றார். அத்தகைய துணிவு அக்காலப் 
புலவர்க்கு இருந்தது.
பரிசில் வேண்டி ஒருவர் மேல், அவரிடம் 
இல்லாத உயர் பண்புகளைச் சொல்லி புகழும் பொய்யுரையை இகழ்ந்து உண்மையை மட்டுமே கூறினர் அக்காலப் புலவர். இதனை,வாழ்தல் வேண்டிப் 
பொய் கூறேன் மெய் கூறுவல் (புறம் 139 ( 56) 
என்ற வரிகள் உணர்த்தும். பொருளாசையால் பொய் புனைதல் பெருங்குற்றம் என்பது இங்கு உணர்த்தப்பட  காணலாம்.     
சங்ககாலத்திற்குப் பின் இந்த நிலை மாறத் தொடங்கியது. புலவர்கள் போற்றுவாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். மனிதர்களை அவர்களிடம் இல்லாத பண்புகளை இருப்பதாப் புகழ்ந்து பாடி அதனால் வந்த பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் வறிய நிலைக்கு ஆளாயினர். 
புலவர்கள் பொருள் வேண்டிச் செல்லும் பொருள் உடையாரிடத்து தமிழ்ப்பற்றும் இல்லை ஆர்வமும் இல்லை அதனால் புலமையைப் போற்றத் தெரியும் அறிவும் இல்லாது போயினர். அத்தகையோரைப் பொய் கூறி புகழ்ந்தும், அவமானப்பட்ட நிகழ்வுகளைத் தங்கள் பாடல்களில் பதிவு செய்தனர்.
இல்லாத பண்புகளைப் புலவர் மிகைப்படுத்தி புகழ்ந்து பாடினாலும் வழங்காத புல்லியரைத் தம் தேவாரத்தில் சுந்தரமூர்த்திநாயனார்,
மிடுக்கு இலாதானை, வீமனே 
விறல் விசயனே, வில்லுக்கு இவனென்று 
கொடுக் கிலாதானைப் பாரியே என்று கூறினும்
கொடுப் பாரில்லை என்று குறிப்பிடுவார். புலவர்கள் போக்கில் பொய் புனையும் மாற்றம் இங்கே புலப்படக் காணலாம். 
இரப்பார்க்கு ஈயாத கருமியையும், அக்கருமியிடம் இல்லாத இயல்புகளைப் புகழ்ந்து பாடும் புலவரையும் ஒவ்வொரு காலத்திலும் புலவர்பெருமக்கள் தங்கள் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். 
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்பலவாணக்கவிராயர் எனும் புலவர், ஈயாத கருமியையும், அவரிடம் இல்லாத பண்புகளை மிகைப்படுத்திப் புகழும் புலவரையும் தம் அறப்பளீச்சுவரசதகம் எனும் நூலில் பதிவு செய்திருப்பது குறிக்கத்தக்கதாகும். புலவர்கள் பொருளுக்காக மிகைப்படுத்திப் பாடுதல் இழிவானதன்றோ என கடிந்துரைப்பதையும் அப்பாடலில் காணலாம்.
எழுதப் படிக்கத் தெரியாத கல்வியறிவற்ற ஒருவனை ஒப்புயர்வற்ற ஆதிசேடன் என்றும், ஈகையென்றால் என்னவென்றறியாத கருமியை அவையிலே ஒப்பற்ற கொடையில் சிறந்த கர்ணன் என்றும், அழகற்ற அருவருப்பான தோற்றமுடைய ஒருவனை பேரழகுடைய மன்மதன் என்றும், படைக்கருவிகளைப் பற்றி அறியாத  ஆண்மையற்றவனை வீரத்தில் சிறந்த விசயன் என்றும், பொய் சொல்லியே வாழும் வஞ்சகனை வாய்மை பேசும் அரிச்சந்திரன் என்றும் பொய்யுரைத்து புகழ்வர். 
கவியரசர்கள் இவ்வாறு இவ்வுலகில் உண்மைக்குப் புறம்பாகக் கூறி தகுதியில்லாதாரிடம் இரப்பது நன்றோ? என புலவர்களை நோக்கி, இகழ்ச்சி தோன்ற எடுத்துரைப்பார்.     
இம்மாதிரியான நிகழ்வுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும், நிகழ்ந்திருக்கின்றன என்பதை 19ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்த இராமச்சந்திர கவிராயர்தம் பாடல் ஒன்றில் பதிவு செய்திருப்பது குறிக்கத்தக்கதாம்.
கல்வியறிவற்ற மூடனைக் கற்றறிந்த மேதை என்றேன்; காட்டில் வாழும் காட்டுவாசியை நாடாளும் அரசன் என்றேன்; கொடுமனம் படைத்த பொல்லாத ஒருவனை நல்லவன் என்றேன்; போர் என்றால் என்னவென்றே அறியாத கோழையைப் புலி போலும் வீரம் மிக்கவன் என்றேன்; சூம்பியிருக்கிற தோளை உடையவனை மலை போலும் திண்ணிய தோளுடையவன் என்றேன்; இறந்தோர்க்கு ஈயாத கருமியை வள்ளல் என்úன். அவனிடம் இல்லாத பண்புகளையெல்லாம் அவன்மேல் ஏற்றிப் புகழ்ந்ததால் எனக்கும் இல்லையெனக் கூறினான். பொய் கூறி புகழ்ந்துரைத்தது என் குற்றம் என உணர்ந்து நானும் செல்கின்றேன் என்பதாக அப்பாடல் அமையும். 
இதனை,
கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறியும் மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை
வழங்காத் தகையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை யென்றான்
யானும் என்குற்றத்தால் ஏகின்றேனே
என்ற பாடல் விளக்கும். 
பொருளுக்காக பொய் புனையும் புலவர் போக்கைக் கண்டித்தே இப்பாடல்கள் அமைந்துள்ளன. சங்ககாலத்தில்  போற்றப்பட்ட புலமை காலப்போக்கில் செல்வாக்கு இழந்து இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்ட கொடுமையும் இங்கே உணர்த்தப்பட காணலாம்.
இப்பாடல்களில் புலமையை விற்று வாழும் புலவர்களின் அவலநிலை புலப்படுகிறது. பழங்காலப் பலவர்களைப் போல் தங்களை அவமானப்படுத்திய கருமிகளை இழித்துக் கூறும் துணிவு பிறர்காலப் புலவர்களிடம் இல்லை என்றே தோன்றுகிறது. செல்வந்தருக்கு அடங்கிப் போகும் இயல்பினராகவே புலவர்கள் வாழ்ந்ததை அவர்தம் பாடல்கள் உணர்த்துகின்றன. 
அப்பாடல்கள் புலவர்கள்பால் இரக்க உணர்ச்சியையும், கருமிகளின்பால் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.  தங்களைத் தாங்களே நொந்துகொள்ளும் பச்சாதாப உணர்ச்சியையும் காணமுடிகிறது. "இல்லாது சொன்னேனுக்கு இல்லை யென்றான், யானும் என் குற்றத்தால் ஏகின்றேனே' என்ற வரிகளில் தான் செய்த தவற்றினை எண்ணி வருந்திய வருத்தம் புலப்படுகிறது.
பொய் புனைந்து பாடும் போக்கு புலவர்க்கு இயல்பாகவே இருந்ததால்தானோ என்னவோ "புலவர் சொல்வதும் பொய்யே பொய்யே' என்றும் "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே' என்றும் திரையிசைப் பாடல்களில் குறிக்கப் பெறுவதாயிற்று. 
பொய் புனைந்து பாடி பரிசில் பெறும் நிலை தற்காலத்தில் இல்லாதது தமிழ்நாடு செய்த தவப்பயனாகும். அரசும் தமிழ் அமைப்புகளும் அவ்வப்போது புலமைமிக்காரைக் கண்டறிந்து பாராட்டி விருது வழங்குவதைச் சற்று ஆறுதலாகக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com