அசோகவனத்தில் சிறைப்பட்டிருந்தாள் சீதை. எந்த நேரமும் இராமன் நினைவுகளில் மூழ்கி இருந்தாள். கானகத்தில் ஒன்றாக இருந்தபோது நடந்த நிகழ்வுகளை எண்ணிக்கொண்டிருப்பதைத் தவிர வேறு சிந்தனை இல்லை.
சுற்றியிருந்த அரக்கியர்களின் மிரட்டலுக்கு நடுவே, திரிசடையின் பரிவு மட்டுமே அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அவ்வப்போது சீதைக்கு தைரியமும் ஆறுதலும் தரும் சொற்களைக் கூறிக்கொண்டிருந்தாள் திரிசடை. வீடணனின் மகள் அவள்.
அப்போதுதான் சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தான் அனுமன். ஒரு மரத்தின் மீது அமர்ந்து, சீதை முன் தோன்ற சரியான நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்தான். சிறையில் இருந்த சூழலிலும் சீதையின் பெருமைமிகு தோற்றத்தை அனுமன் வியந்துகொண்டிருந்த நேரத்தில்தான் அது நிகழ்ந்தது.
திடீரென அங்கு இராவணன் தோன்றினான். அவன் தோற்றத்தையும், நடந்து வரும் கம்பீரத்தையும் ரசித்து ரசித்து எழுதுகிறான் கம்பன்.
எப்போது எனக்கு இரங்கப் போகிறாய்?'' என்று கேட்டுக்கொண்டே சீதையை நெருங்கினான் இராவணன். பலவாறு அவளைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டே, தனது தலையின் மீது இரு கைகளையும் குவித்து வணங்கியவாறு, அவள் முன் வீழ்ந்து வணங்கினான்.
துரும்புக்குச் சமமானவனே, சொல்வதைக் கேள்!'' என்று தொடங்கிய சீதை பலவிதத்திலும் அவனுக்கு நல்ல சொற்களைக் கூறினாள். அவற்றுள் ஒன்று, கானகத்துக்கு இராம இலக்குவருடன் அவள் நுழைந்திருந்த நிலையில், முனிவர் பலர் வைத்த கோரிக்கை தொடர்பானது.
குற்றம் ஏதுமில்லாத முனிவர் பலர் இராமனைக் காண வந்திருந்தார்கள். அகத்திய முனிவரும் அவர்களுடன் இருந்தார். "இழிதொழில் செய்யும் அரக்கர்களால் நாங்கள் சொல்லவொணா துன்பங்களை அனுபவிக்கிறோம். அவர்களை நீ கொன்று, எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்கள். என் காதுகளாலேயே அவர்கள் சொன்னதைக் கேட்டேன். அவர்கள் கோரிக்கை சரியானதுதான் என்று எண்ணும் வண்ணம் நீ என்னிடமே நடந்துகொள்கிறாய்'' என்கிறாள் சீதை.
இந்தக் கருத்தை இராவணனிடம் சொன்னதாகக் கம்பன் எழுதிய பாடல்;
தென் தமிழ் உரைத்தோன் முன்னாத்
தீது தீர் முனிவர் யாரும்
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்;
நோற்கிலெம் புகுந்தபோதே
கொன்று அருள்; நின்னால் அன்னார்
குறைவது சரதம்; கோவே!
என்றனர்; யானே கேட்டேன்;
நீ அதற்கு இயைவ செய்தாய்.
"நான் இராமனுடன் கானகத்தில் இருந்தபோது, அங்கு அகத்தியருடன் வந்த முனிவர்கள் இவ்வாறு இராமனிடம் சொன்னார்கள்' என்பதே சீதை சொன்ன கருத்து. இதில், அகத்திய முனிவரைக் குறிக்க கம்பன் பயன்படுத்தும் சொற்கள், "தென் தமிழ் உரைத்தோன்'. "தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியன்' என்று குறிப்பிடுகிறான் கம்பன்.
"அகத்தியம்' என்னும் முதல் தமிழ் இலக்கண நூலைத் தந்தவர் அகத்தியர் என்றே குறிப்பிடப்படுகிறார். அகத்தியர், தமிழுக்கு இலக்கணம் தந்தவர் என்பதையே, "தென் தமிழ் உரைத்தோன்' என்று குறிப்பிடுகிறான் கம்பன்.
ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன்
என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணஞ் செய்து
கொடுத்தான்.
என்று தமிழ்த்தாய் சொல்வதாக பாரதியின் கவிதை உண்டு.