அறுபதாண்டுகளுக்கு முன்பு வரை எல்லாக் கவிஞர்களும் மரபுக் கவிதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். அதற்கும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்கள் யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், சூளாமணி நிகண்டு போன்ற நூல்களைக் கற்ற பிறகே கவிதைகள் எழுதினார்கள்.
இன்றைக்குப் பெரும்பாலானவர்கள், அதிலும் இலக்கணம் பயிலாதவர்கள் புதுக்கவிதைகள்தான் எழுதுகிறார்கள். புதுக்கவிதையின் பிதாமகன் என்று யார் யாரையோ பலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மையான புதுக்கவிதையை முதன்முதல் எழுதியவர் கவிக்கோ அப்துல் ரகுமான்தான்.
மதுரை எழுத்தாளர் மன்றம் சார்பில் அன்றைய இராமநாதபுர மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) திருப்புவனத்திற்கு அருகிலுள்ள மணலூரில் ஒரு தென்னந்தோப்பில் 'மண்' என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அந்தக் கவியரங்கத்திற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் புலவர் வேலவன், ஒளவை நடராசன், நான், திருப்பாச்சேத்தி கவியழகன் மற்றும் பலர் கவிதை பாடினோம். அதில் என் கவிதைக்குத்தான் அதிகக் கைத்தட்டல் கிடைத்தது. அன்று அற்புதமான சிந்தனைகளை வெளிப்படுத்திய ஒரே கவிஞர் அப்துல் ரகுமான்தான்.
அப்போது புதுக்கவிதை என்ற சொல் வழக்கத்தில் இல்லை. அதனால் இதை வசன கவிதையென்றோ, உரை வீச்சு என்றோ இளங்கோவடிகள் சொன்னதுபோல் உரைப்பாட்டு மடை என்றோ வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுத்தான் ரகுமான் தொடர்ந்தார். மண் சொல்வது போல் அமைந்தது அந்தக் கவிதை. அதன் சாரம் இதுதான்-
'மனிதர்களே, நீங்கள் என்னைத் தினமும் காலால் மிதிக்கிறீர்கள். அதற்காக நான் கோபம் கொண்டேனா? என் உடலைக் கொழுமுனையால் சீறும்போதும் உங்களுக்குச் சோறு தருகிறேன். மூளையில்லா மனிதனைப் பார்த்து உன் தலையில் என்ன களிமண்ணா என்று கேட்கிறீர்கள். அப்படிக் கேட்கிற நீங்கள் களிமண்ணால் ஆன குடத்தை மட்டும் தலையில் சுமந்து செல்கிறீர்களே அது ஏன்?'
இப்படிப் பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே வந்த அவர், குறிஞ்சிகளே என்கொங்கைகள் முல்லை என் முறுவல் மருதம் என் மயிரின் சிலிர்ப்புகள் நெய்தல் என் கூந்தல் பாலை எனக்கு அடிக்கடி வந்துபோகும் வெயிற்கால வியாதி என்றார். அதைக் கேட்டதும் உடனே நான் கைதட்டினேன். என்னை எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கிருந்தவர்களில் நான்தான் வயதில் இளையவன். அதனால் எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. கை தட்டக் கூடாத இடத்தில் கை
தட்டிவிட்டோமோ? ரசிக்கக் கூடாத இடத்தை ரசிப்புக்குரிய இடமாக நினைத்துவிட்டோமோ? பிறகுதான் புரிந்தது, அங்கிருந்தவர்களில் நான்தான் நல்ல
ரசிகனாக இருந்திருக்கிறேன் என்பதும், அப்துல் ரகுமான் நல்ல கவிஞராக இருந்திருக்கிறார் என்பதும்.
அப்துல் ரகுமான்தான் முதன்முதல் புதுக்கவிதை எழுதினார் என்றாலும் புதுக்கவிதைக்கு விளம்பர வெளிச்சம் கொடுத்தவர் நா.காமராசன்தான். அவரது 'கறுப்பு மலர்கள்' நூல் வெளிவந்த பிறகுதான் புதுக்கவிதை என்ற சொல்லை உதடுகள் உச்சரிக்கத் தொடங்கின. அவர்களுக்கு முன்புவரை மரபுக் கவிதையின் ஆட்சிதான் இந்த மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.