

முக்கியமான விருதுகள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும்போதுதான், அந்த விருதுகள் மரியாதை பெறுகின்றன. இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுக்குப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை கரவொலி எழுப்பிப் பாராட்டத் தோன்றுகிறது.
விருதுகளும் பட்டங்களும் அப்போதைக்கு அந்த விருதாளருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கக் கூடுமே தவிர, அதனால் மட்டுமே அவரது புகழ் நிலைத்துவிடாது. ஒருவரின் நிலைத்த புகழுக்கு, அவரது படைப்புகளும், செயல்பாடுகளும்தான் காரணமாக இருக்கும்.
சாகித்திய அகாதெமியின் விருது வழங்கப்படாமல் இருந்தாலும், பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி பாரதி குறித்தும், வ.உ.சி. குறித்தும் செய்திருக்கும் ஆய்வுகளும், கண்டுபிடித்து வழங்கியிருக்கும் புதிய தகவல்களும் அவரைத் தவிர்க்க முடியாத தமிழ் ஆளுமைகளில் ஒருவராக, வரலாறு பதிவு செய்திருக்கும்.
அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது, அவரது பணிகளுக்கு இந்திய சமுதாயம் செலுத்தும் நன்றி, அவ்வளவே. அவருக்கும், அவரைப் போன்ற ஆய்வாளர்களுக்கும் தங்கள் பணியை மேலும் தொடர ஊக்கமாக இதுபோன்ற விருதுகள் அமையும் என்றும் சொல்லலாம்.
பாரதியார் குறித்து மட்டுமல்ல, அண்ணல் காந்தியடிகள் குறித்த தவறான கருத்து நீண்டகாலமாக நிலவிவந்தது. அல்லது, உருவாக்கப்பட்டிருந்தது. 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி.க்காகத் தென்னாப்பிரிக்காவில் திரட்டப்பட்ட நிதியை அவர் வ.உ.சி.யிடம் ஒப்படைக்கவில்லை என்பதுதான் அந்தத் தவறான பரப்புரை. அந்தக் குற்றச்சாட்டு தவறானது என்று தகுந்த தரவுகளுடன் நிரூபித்தவர் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி.
'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்கிற அவரது ஆய்வு நூல் சாகித்திய அகாதெமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஏனைய சில பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறை குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் அந்த நூல் விரிவான ஆய்வைப் பதிவு செய்திருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்த ஆ.இரா. வேங்கடாசலபதி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர். பாரதியார் குறித்தும், வ.உ.சி. குறித்தும், இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்புகள் குறித்தும் இவர் தனது ஆய்வின் மூலம் பாய்ச்சி இருக்கும் புது வெளிச்சங்கள் ஏராளம்.
''ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கி இருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று யாராவது என்னைக் கேட்டால், நான் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும் - ''திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக செயல்பாடுகளில் நேர்மை உள்ளிட்டவற்றுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது!''
இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெறும் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வாழ்த்துக்கள்!
சங்க இலக்கியத்தில் ஆர்வம் இருந்தாலும் ஊன்றிப் படித்தவனல்ல நான். பரவலாக அறியப்படும் இரண்டு, மூன்று புறநானூற்று பாடல்கள் மட்டுமே எனக்குத் தெரியும். 'தமிழ்மணி' பகுதியில் வெளிவரும் கட்டுரைகளைப் படித்து நான் தெரிந்து கொண்டவைதான் அதிகம்.
உச்சநீதிமன்ற நீதிபதி மேதகு அரங்க.மகாதேவன் தனது உரைகளில் புறநானூற்றுப் பாடல்களை மேற்கோள் காட்டுவதைக் கேட்ட பிறகுதான், அதன் மீதான ஈர்ப்பு எனக்கு அதிகரித்தது என்கிற உண்மையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
20 ஆண்டுகளுக்கு முன்னால், சங்க இலக்கியங்களை மக்கள் பதிப்பாக வெளியிடும் முயற்சியை கோவிலூர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள் முன்னெடுத்தார். புதிய முறையில் உரைத் திட்டம் வகுத்து, டாக்டர் தமிழண்ணல், டாக்டர் சுப.அண்ணாமலை ஆகியோர் மேற்பார்வையில் வெளியிட்டது கோவிலூர் திருமடம். அதில் இரா.இளங்குமரனாரை உரையாசிரியராகக் கொண்டு 'புறநானூறு' வெளிக் கொணரப்பட்டது. இப்போது அது மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது.
''ஏட்டுச்சுவடி அளவில் இருந்திருப்பின் பொதுமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அந்தக் கருத்துக்கள் போய்ச் சேர்ந்திருக்க இயலாது. ஏட்டுச்சுவடியாக இருந்த புறநானூற்றை கி.பி.1894-இல் பதிப்பித்த தென்மொழிச் செல்வர் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதய்யர் பெரும் பாராட்டுக்குரியவர்.
அவருக்குக் கிட்டாத ஏட்டுச்சுவடிகள் சில கிட்டியமையால், சிதைந்த பகுதிகள் சில திருந்தவும், உரையில்லாத பகுதிகள் உரைபெறவும் 'உரைவேந்தர்' ஒளவை க.துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய உரையும், அதனைப் பதிப்பித்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் பாராட்டுக்கு உரியவை'' என்கிற பதிவுடன் முனைவர் இரா.இளங்குமரனார் 'புறநானூறு' மக்கள் பதிப்புக்கு உரை எழுதி இருக்கிறார்.
புறநானூற்றுப் பாடல்களை இயற்றிய புலவர்களின் வரலாறு; அகர வரிசைப்படுத்தப்பட்ட திணைகள், துறைகள் ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்தப் புறநானூறு உரை. ஒவ்வொரு பாடலும் இயற்றியவர் பெயருடனும், தெளிவுரையுடனும் வரிசையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பண்டிதர்களாக இல்லாமல், தமிழ் ஆர்வலர்களாக இருப்பவர்கள் புறநானூற்றுப் பாடல்களைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டிருக்கும் உரை.
நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான் - படித்துப் பயன் பெறுக!
கவிஞர் யா.சாம்ராஜின் தொகுப்பு 'மகனுக்கு அப்பா என்றும் பெயர்'. அதில் இடம் பெற்றிருக்கும் இந்த ஐந்து வரிக் கவிதையைப் பார்த்தபோது 'தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது' என்று ஒன்றரை வரிக் குறளில் சொல்லிச் சென்ற வள்ளுவப் பேராசானை நினைக்கத் தோன்றியது-
எல்லா வகையிலும்
மகனிடம் மட்டுமே
தோற்றுப் போகச் சொல்லித்
துள்ளிக் குதிக்கிறது
மனசு...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.