
இராமாயணம் போர் நிகழ்ச்சிகள் நிறைந்த காப்பியம். இராமன் தீயோரை அழித்து நல்லோரைக் காக்க மனிதனாய்த் தோன்றியவன். அவனால் எண்ணற்ற அரக்கர்கள் மட்டுமன்றி, அவர்களுள் பெருவலி படைத்தவர் பலரும் அழிக்கப்பட்டுள்ளனர். தாடகையே முதலில் அவன் அம்புக்கு இலக்கானவள். இராமன் நிகழ்த்திய கன்னிப்போர் அது.
இறுதியில் இராவணன் அவனால் அழிக்கப்படுகிறான். அஃது அவன் நிகழ்த்திய கடைசிப் போர்; கடும்போர். இவற்றிடையே சுபாகு, விராதன், திரிசிரா, தூடணன், கரன், மாரீசன், வாலி, கும்பகருணன், வன்னி, மகோதரன் ஆகியோர் அவனால் அழிக்கப்படுகின்றனர். மேலும், அவன் ஏழு மராமரங்கள்மீது அம்பினை ஏவி அவற்றை வீழ்த்தியுள்ளான்; கடலரசன்மீது கொடிய கணைகளை எய்துள்ளான்.
இச்செயல்களில் சிவன் கணை, அங்கியின் படை, கந்தருவப் படை, ஞானக் கணை, காருடப்படை, நாரணன் கணை, சக்கரப்படை, அயன் படை போன்ற வெவ்வேறு தெய்வப் படைகளைப் பயன்படுத்தியுள்ளான்.
இவற்றுள் ஒன்றே அயன்படை. அது விரிஞ்சன் படை, நான்முகன் படை, திசைமுகன் படை, சதுமுகன் படை, பிரமாத்திரம் என்றும் குறிக்கப்படுகிறது. ஒரு கணையை எடுத்து ஒரு தெய்வத்தின் மந்திரத்தை உருவேற்றி எறியும்போது அக்கணை அத்தெய்வத்தின் கணையாக மாறுகிறது. பிரமனுக்குரிய மந்திரத்தைச் சொல்லி எய்யும்போது அது பிரமாத்திரம் ஆகிறது,
பிரமாத்திரம் வெவ்வேறு வடிவம் கொள்ளும். இந்திரசித்தன் அனுமன்மீது எய்தபோது பாம்பு வடிவில் இருந்தது. அதனைக் கறுத்த மாசுணம் (5803) என்று குறிக்கிறார் கம்பர். இலக்குவன் அதிகாயன்மீது எய்த அப்படை வாளி வடிவில் சென்று அவன் தலையைக் கொய்து சென்றது (7931). இராமன் ஒரு கணையை நான்முகன் மூல மந்திரத்தோடு மூட்டி விடுத்த போது அது புனித வாளியாகச் சென்று இராவணன் மார்பில் புக்கு அவன் உயிரைப் பருகிப் புறம் போயிற்று (9896).
அயன் கணை அணுக்குண்டு போன்றது. பேராற்றல் மிக்கது; மற்றப் படைகளைக் கொண்டு அழிக்க முடியாத நிலையில் பயன்படுத்தப்படுவது; தவிர்க்க இயலாதபோது மட்டுமே எய்தற்குரியது. குரக்குப் படையில் இராமன், இலக்குவன் ஆகிய இருவருக்கும், அரக்கர் படையில் இந்திரசித்தன் ஒருவனுக்கும் மட்டுமே அதனைப் பயன்படுத்தும் ஆற்றல் இருந்தது.
இராவணனுடைய படைக்கருவிகளில் சந்திரகாசம் என்னும் வாளும், சக்தி என்னும் வேலும் சிறந்தன. கும்பகருணனிடம் இருந்த படைகளில் சூலம் வலிமையானது. அதிகாயனிடமிருந்த படைகளில் சிறந்தது எரிமுகப் படை. இந்திரசித்தன் படைகளில் ஆற்றல் மிக்கது பிரமாத்திரம்.
இப்படையினை இலக்குவன் அதிகாயனைக் கொல்வதற்காக ஒருமுறை பயன்படுத்தியுள்ளான். இராமன் கடலரசன்மீதும் இராவணன்மீதும் இதனைச் செலுத்தியுள்ளான். இத்தகவலைக் கம்பர் அவ்விடங்களிலேயே தெரிவித்துள்ளார்.
ஆனால் மராமரங்களைத் துளைக்கவும், வாலியைக் கொல்லவும் இப்படையையே பயன்படுத்தயுள்ளான். இதனை இராவணன்மீது இராமன் எய்யும் அயன் படை குறித்துத் தெரிவிக்குமிடத்துக் குறித்துள்ளார்.
அப்படையே திரிபுரத்தை எரித்ததும், மராமரங்களைத் துளைத்ததும் வாலியை மாய்த்ததும் என்று குறித்துள்ளார் (9895). இதனால் இராமன் இராமகாதையில் நான்கு முறை அப்படையைப் பயன்படுத்தியுள்ளான் என்பது தெரிகிறது.
இராவணன், வாலி, புனலவன் (கடலரசன்) ஆகிய மூவரைத் தவிர மற்றவர்களை அழிக்க இராமன் பிரமாத்திரத்தைப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவு.
கடலரசன்மீது எய்த அம்பு அவன் விருப்பத்திற்கு இணங்க மருகாந்தரத்தில் இருந்த அவுணர்களை அழித்தது. இந்திரசித்தன் இலங்கையில் தூதுவனாய் நுழைந்து அழிவுகளை நிகழ்த்திய அனுமனைப் பிணித்து இராவணனிடம் இழுத்துச் சென்றபோது ஒருமுறையும், போர்க்களத்தில் குரக்குப் படையின்மீது மற்றொரு முறையுமாக இருமுறை பயன்படுத்தியுள்ளான்.
இந்திரசித்தன் குரக்குச் சேனையின்மீது அதனை வீசியபோது பேரழிவினைச் செய்தது; அனுமன் கொண்டுவந்த மருத்துமலையால் வானர வீரர்களும் இலக்குவனும் உயிர் பிழைத்தனர்.
இலக்குவன், இந்திரசித்தன் நிகும்பலையில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேள்வியை அழிக்கப் புறப்படுகிறான். அப்போது, இராமன் அவனிடம், "அயன் கணையைத் தொடுக்க வேண்டா' என்று அறிவுறுத்துகிறான். இதற்கு முன்பே இலக்குவன் அதிகாயன் வதையில் காற்றுக்
கடவுள் அறிவுறுத்தியபடி அயன் கணையை எய்து அவனை அழித்திருக்கிறான். இந்நிலையில், இராமன் "அயன்கணையை இப்போது பயன்படுத்தாதே' என்று ஏன் சொல்கிறான் என்னும் ஐயம் எழுகிறது.
ஒருவன் பிரமாத்திரத்தை எய்ய எதிர்த்தரப்பில் உள்ளவனும் அதனை எய்தால் பெருங்கேடு விளையும். இராமன் கடலரசன்மீது பிரமாத்திரத்தை எய்தபோது எதிராளி தானும் பிரமாத்திரத்தை எய்து போரிடுபவனாக இல்லை. வாலி
மீதும் இராவணன்மேலும் அப்படையினை எய்தபோது அவர்களிடம் அப்படை இல்லை. இலக்குவன் அதிகாயன்மீது அதனை எய்தபோது அவனிடம் அப்படை இல்லை. அதனால் கேடு ஏதும் நிகழவில்லை.
ஆனால் இந்திரசித்தனிடம் அப்படை உள்ளது. அதனை அவன் அன்று நடந்த போரில் இரவின் முற்பகுதியில் பயன்படுத்தியுள்ளான். அதனைத் தொடர்ந்து இப்போது நடக்க இருக்கும் போரில் இலக்குவன் பிரமாத்திரத்தைப் பயன்
படுத்தினால் இந்திரசித்தனும் அதனைப் பயன்
படுத்துவான். அவை ஒன்றோடொன்று மோதிப் பெருங்கேட்டினை விளைக்கும்.
அதனால்தான் இராமன் இலக்குவனிடம், "சிவனது பாசுபதக் கணையையும், திருமாலின் நாராயணக் கணையையும் தொடுத்தால் அவ்வப் படைகளை ஏவி அவற்றால் ஓயச் செய்து அவனை வெல்வாய்; நீயாக அயன்படையை
எய்யாதே. அதனைத் தொடுத்த காலத்து
மேலுலகமும் இவ்வுலகமும் இறந்துபடும்' என்று அறிவுரை கூறுகிறான்.
தம்பியைத் தழுவி "ஐய!
தாமரைத் தவிசின் மேலான்
வெம்படை தொடுக்கும் ஆயின்
விலக்குமது அன்றி வீர!
அம்புநீ துரப்பாய் அல்லை;
அனையது துரந்த காலை
உம்பரும் உலகும் எல்லாம்
விளியும் அஃது ஒழிதி' என்றான். (8936)
இதனால் படைக்கலன்களில் எல்லாம் வலிமையானது பிரமாத்திரம் என்பது தெளிவாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.