இந்த வாரம் கலாரசிகன் - 25-02-2024
மொழிபெயர்ப்பில் தமிழின் புதிய பரிமாணம் - நிதிநிலை அறிக்கையில் கலைச்செல்வம்


தமிழகத்தின் நிதியமைச்சரும், நிதித்துறை செயலரும் தமிழார்வலர்களாக இருந்துவிட்டால், தமிழுக்கு அதைவிட நல்ல காலம் வேறு எதுவாக இருக்க முடியும்? தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் மொழி வளர்ச்சியை முன்னிறுத்துபவையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
"இரட்டைக் காப்பியங்கள்' என்று அறியப்படும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில் அவற்றை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரிய அறிவிப்பு. பிற மொழிகளில், குறிப்பாக உலகளாவிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் நூல்களை, உலகில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இவற்றிற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலம் வழியாக தமிழ் மொழியாக்கம் செய்யப்படுவதில் அர்த்தமில்லை. அந்தந்த மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களால் நேரடியாக மொழியாக்கம் செய்யப்படும்போதுதான், மூல நூலின் நடையும், உணர்வும் உரிய வகையில் வெளிக்கொணரப்படும்.
இன்றைய நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் தமிழ் வளர்ச்சித் துறை பொறுப்பில் இருந்தபோது தொடங்கிய முன்மாதிரி முயற்சிதான் தமிழில் தொன்மையான நூல்கள் அனைத்தையும் எண்மப்படுத்துதல். நல்ல தமிழ் நூல்கள் அனைத்தையும் எண்மப்பதிவில் பதிவேற்றம் செய்யும் பணி அப்போது தொடங்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் அரிய தமிழ் நூல்களையும், ஆவணங்களையும் எண்மப் பதிவேற்றம் செய்யும் முயற்சிக்கு
ரூ.2 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு வித்தியாசமான, இதுவரை போதுமான கவனம் பெறாத முயற்சியும் பட்ஜெட்டின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பேச்சு வழக்கில் உள்ள செளராஷ்டிர, படுகர் மொழிகளையும், தோடர், கோத்தர், சோளிகர், காடர், நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்களின் மொழி வளங்களையும், ஒலி வடிவங்களையும் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்தும் முயற்சி, எதிர்காலத் தலைமுறையினருக்குத் தேவைப்படும் என்பதில் சந்தேகமில்லை.
நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில், ஆங்காங்கே கையாளப்பட்ட இலக்கிய மேற்கோள்கள் ரசிக்கும்படியாக இருந்தன. கீழடி அருங்காட்சியகம்தான் பட்ஜெட் அறிவிப்புகளின் "ஹைலைட்'. ஆமாம், இந்த "ஹைலைட்' என்கிற வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை ஒன்று தேவைப்படுகிறதே...
--------------------------------------------------------------------------
விமர்சனத்திற்கு வந்திருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தைப் பார்த்தபோது, ஒரு நொடி குற்ற உணர்ச்சியுடன் தலைகுனிந்துவிட்டேன். தவறு என்னுடையது எனும்போது அதற்காக வருந்துவதுதானே நியாயம்...
ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கும் மேலாக என்னுடைய அணிந்துரைக்காகக் காத்திருந்தார் சுப. உதயகுமாரன். பலமுறை குறுஞ்செய்தி மூலமும், வாட்ஸ்ஆப் மூலமும் என்னை அணிந்துரை எழுதுவது குறித்து நினைவுபடுத்தாமலும் இல்லை. தினந்தோறும் ஆசிரியர் உரை, ஞாயிற்றுக்கிழமை என்றால் "இந்த வாரம்' என்று ஒரு நாள் விடாமல் எழுதிக் கொண்டிருக்கும் நிலைமை. நிர்வாகப் பணி வேறு இருக்கிறது.
"என்னால் முடியாது' என்று கூறித் தவிர்த்திருக்கலாம்தான். ஆனால் "இளைஞர் மணி'யில் வெளிவந்த "முந்தி இருப்பச் செயல்' தொடரை வாராவாரம் படித்து, அச்சுக்கு அனுப்பியவன் என்பதால் அதற்கு அணிந்துரை எழுதக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட மனமில்லை. அந்தத் தொடரின் முதல் வாசகன் மட்டுமல்ல, ரசிகனாகவும் இருந்தவன் நான்.
என்னிடம் கேட்டுக் கேட்டுச் சலித்ததால் என்று நான் சொல்லமாட்டேன், என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டதால் மேலும் தொந்தரவும் அழுத்தமும் கொடுக்க வேண்டாம் என்று
சுப.உதயகுமாரன் நினைத்திருக்க வேண்டும். அதனால்தான், வேறு யாருடைய அணிந்துரையையும் நாடாமல் தனது முன்னுரையுடன் "முந்தி இருப்பச் செயல்' கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். அவரிடம் மன்னிப்புக் கேட்பதா அல்லது என் சிரமத்தைப் புரிந்து கொண்டதற்காக நன்றி தெரிவிப்பதா என்று தெரியாமல் தவிக்கிறேன்.
சுப. உதயகுமாரன் "இளைஞர் மணி'யில் தொடர் எழுதப் போகிறார் என்று அறிவித்தவுடன் பல தரப்பிலிருந்தும் எனக்கு அழுத்தங்களும், எதிர்ப்புகளும், ஏன் வசைபாடுதலும்கூட வரத் தொடங்கின. இன்றைய உலகத்தின் மிகப் பெரிய பிரச்னை, "கருத்து வேறுபடுவதை ஏற்றுக்கொள்வது' ( வி அக்ரி டு டிஸ் அக்ரி) என்கிற பண்பு. ஒருவரைப் பிடித்தால் அவரது தவறுகளை ஏற்றுக்கொள்வதும், பிடிக்காத ஒருவரின் நல்ல செயல்களைப் பாராட்டத் தவறுவதும் மனித இனம் சமநிலை தவறுகிறது என்பதன் அடையாளங்கள்.
தனது அரசியல் கருத்துகளையும், தனிப்பட்ட வாழ்க்கையையம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, இளைஞர் சமுதாயத்தின் வருங்காலம் எப்படி அமைய வேண்டும் என்கிற சமூகப் பார்வையுடன்
சுப. உதயகுமாரன் எழுதிய கட்டுரைகள்தான் "முந்தி இருப்பச் செயல்'. உதயகுமாரனை அணுசக்திக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான களப்போராளியாகத்தான் பலரும் நினைக்கிறார்கள். அவருக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. உலகின் பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு ஆசிரியராகப் பயிற்றுவிப்பவர் அவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
"வாழ்க்கைத் திறன்கள்' என்கிற அவரது முதல் கட்டுரையிலேயே நான் மனதைப் பறிகொடுத்தேன். "நமது நாட்டில் கல்வி தரமிழந்து கிடக்கிறது; வேலைவாய்ப்பு அருகிக் கொண்டிருக்கிறது; தகுதியும் தரமுமிக்க உணர்வுபூர்வமான ஆசிரியர்கள் அரிதாகி விட்டனர்; மாணவர் நலன்களுக்காக நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறைந்துவிட்டன...' என்று தொடங்கும் வரிகள் எனது மனசாட்சியின் குரலாக எனக்குத் தெரிந்தன.
இன்றைய தமிழ்நாட்டில் இளைஞர் ஒவ்வொருவரும் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள "முந்தி இருப்பச் செயல்' புத்தகத்தைப் படித்தால் போதும். எளிமையான மேற்கொள்களுடன், பேராளுமைகளின் எடுத்துக்காட்டுகளுடன் சுப. உதயகுமாரன் நம்மை வழிநடத்திச் செல்கிறார்.
கவிஞர் ப.சொக்கலிங்கத்தின் "சிட்டுக் குருவி' கவிதைத்
தொகுப்பு விமர்சனத்துக்கு வந்திருந்தது.
அதில் இருந்தது "மரம்' என்கிற இந்தக் கவிதை -
கால் கடுக்க
நின்று கொண்டிருந்தது
பூங்காவில் மரம்
மரத்தடியில் நாற்காலிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...