ராவுத்தன் எனும் முருகன்

குதிரை வீரன் முருகன்: அருணகிரிநாதரின் புகழ்பெற்ற வர்ணனை
ராவுத்தன் எனும் முருகன்
Published on
Updated on
1 min read

கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதப் பெருமான் முருகப்பெருமானைப் பற்றி இயற்றிய நூலாகும். இதில் அருணகிரிநாதர் முருகனை ராவுத்தனே என்று அழைக்கிறார்.

ராவுத்தன் என்ற சொல்லுக்கு குதிரை வீரன் என்பது பொருள் (சில இடங்களில் யானை வீரனையும் சுட்டும்).

திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி கோயிலின் முன்பு ஒரு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் ஒரு தூணில் குதிரைச் சேவகராக எம்பெருமானின் உருவம் உள்ளது. அது குதிரை ராவுத்தர் என்றும் திருவுருவம் தாங்கி நிற்கும் மண்டபம் குதிரை ராவுத்தர் மண்டபம் என்றும் வழங்கப்பட்டு வருகின்றன. முருகப்பெருமான் மயிலாகிய குதிரையின் மீது ஏறிவந்து போரில் சூரனை அழித்தமையினால் ராவுத்தர் என்னும் பட்டம் அவனுக்குக் கிடைத்தது.

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர்

காமக் கலவிக் கள்ளை

மொண்டுண்டு அயர்கினும் வேல்மற

வேன் முது கூளித்திரள்

டுண்டுண் டுடுடுடு டூ டூ

டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்

சூர்க்கொன்ற ராவுத்தனே!

"கற்கண்டைப் போன்ற இனிய சொற்களை உடையவரும் மென்மையானவருமான மகளிர்பால் காம உணர்ச்சியினால் பெறும் கலவியின்பமாகிய கள்ளை எல்லையின்றி நுகர்ந்து யான் செய்ய வேண்டிய கடமைகளை மறந்தாலும், உன் வேலாயுதத்தை மட்டும் மறக்க மாட்டேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் தமக்கு விருந்துணவு கிடைத்த மகிழ்ச்சியினால் "டுண்டுண் டுடுடுடு ' என்ற ஒலி எழும்படியாக முரசுகளைக் கொட்டிக் கொண்டு கூத்தாடும்படி கொடிய சூரபன்மனைப் போர்க்களத்தில் மயிலாகிய குதிரையின் மீது ஏறிவந்து கொன்று அருளியவனே' என்பது இதன் பொருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com