வெள்ளந்தீப் பட்டதென...

மகாகவி பாரதியார், "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா' என்கிறார்.
வெள்ளந்தீப் பட்டதென...

மகாகவி பாரதியார், "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா' என்கிறார்.

கணவன் அநியாயமாகக் கொல்லப்பட்டான் என அறிந்ததும், மன்னனைக் கண்டு நீதி கேட்கும் முன்னரே, கண்ணகி, 
பட்டாங்கு யானுமோர் பத்தினியாமாகில், 
ஓட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையை 
என்று சூளுரைக்கிறாள்.

தன் கணவன் கள்வனல்லன் என நிறுவியதும், மதுரை மாநகரை தீக்கு இரை ஆக்குகிறாள்.

ஒருத்தி, தனது கணவன் மறைவுக்குக் காரணமாக இருந்த மன்னவனின் மாநகரைத்  தீயிட்டு அழிக்கிறாள்; ஆனால், இன்னொரு புறம், புறநானூற்றில், தனது ஆருயிர்க் கணவன் மாய்ந்த பின்னர்,  தான் உயிர் வாழ்வது பொருத்தமன்று என்று எண்ணுகிறாள் ஓர் அரசி; தீப்பாய எத்தனிக்கிறாள்.

இன்னுயிர்க் கணவனை இழந்த பின், கைம்மைக் கோலம் பூண்டு வாழ்வது பொருளற்றது என்று கூறி, கணவனை இழந்த பெண்களுக்கு சுடும் தீயும் குளிர் தடாகமும்  ஒன்றே என்று கூறி, தீப்பாய எண்ணுகிறாள்.

அது மட்டுமல்ல, அவளைத்  தடுக்க முற்பட்ட அமைச்சர்களைச் சாடுகிறாள்.

பல்சான்றீரே பல்சான்றீரே 
செல்க எனச் சொல்லாது ஒழிக, என விலக்கும் 
பொல்லாச் சூழ்ச்சி பலசான்றீரே....
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்புஅற 
வள்இதழ் அவிழ்ந்த தாமரை 
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! 
                                                  ( புறநானூறு - 195 )
ஆனால், தீயையும் சேர நாட்டையும் குறித்து வேறொரு காட்சியைக் காட்டுகிறது முத்தொள்ளாயிரம்.

தன் குடிமக்களைக் காக்கும் திறமற்றவனாக மன்னன் இருந்தால், பகைவர் வெற்றி பெற்று, ஊரையும் பயிரையும் கொளுத்துவர்.

சேரநாட்டில், சமையல் அடுப்புகளில் புகை வருவது அன்றி, வேறெங்கும் தீ, கண்களில் தென்படுவதே இல்லை. அதிலும் குறிப்பாக, போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் ஊரைக் கொளுத்தும் நிலை சேர நாட்டு எல்லைக்குள் நிகழ்ந்ததே இல்லை. ஏனெனில், பகைவர் எவரும் சேரனை வென்றதே இல்லையாம். 

மாறாக, நீர்நிலைகளில், நிறைந்துப் பூத்திருக்கும் செந்நிற அரக்காம்பல், நீர்மேல்  தீ படர்ந்தது போன்று தோன்றுகிறதாம்.  அதுகண்டு  புள்ளினம் தீ என அஞ்சி, தம்  குஞ்சுகளைச்  சிறகுகளால் மூடிப்  பாதுக்காக்க முற்படுகின்றனவாம். இப்படி ஒரு கற்பனைக் காட்சியை வடிக்கிறார் புலவர் ஒருவர். 

அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய் அவிழ 
வெள்ளந்தீப் பட்டதென வெரீஇ  - புள்ளினம் 
தன்கைச் சிறகால் பார்ப்பொடுக்கும் ...
( முத்தொள்ளாயிரம் -110)

நம் கற்பனையை விரிவுபடுத்தி, மனத்தை கொள்ளைகொள்ளும் இக்காட்சியை, வெள்ளந்தீப் பட்டதென என அமைந்த  சொற்றொடர் நினைந்து நினைந்து இன்புற வைக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com