எந்த நாட்டு மன்னரோ? நீவிர் யாரோ?

கலைஞர்களின் கதை: பஞ்சத்தில் இருந்து மன்னர்களாக மாறிய பயணம்
எந்த நாட்டு மன்னரோ? நீவிர் யாரோ?

சித்திரை மாதம். வெயில் என்று சும்மா சொல்லக் கூடாது. "வெய்யில்' என்றும் சொல்லலாம். இன்னும் அழுத்தி, "வெய்ய்யில்' என்று சொன்னாலும் பிழையில்லை. உறையூருக்குப் போகும் வழியில் அந்தக் குடிசை இருந்தது.

கண்ணப்பர் என்ற முதியவர் வீட்டுக்கு முன்னால் வரகை உலர்த்திவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் - மனிதர்கள் என்று சொல்ல முடியாது- எலும்புக்கூடுகளாய், குழி விழுந்த கண்கள், ஒட்டி உலர்ந்து சதைப் பிடிப்பற்ற கன்னங்கள், முதுகுத்தண்டு வளைந்து, உடும்பை உரித்தது போல விலா எலும்புகள் தெரிய வந்தார்கள். பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிகள்தாம்.

""ஐயா! நீங்கள் எல்லாம் யார்?'' - கண்ணப்பர் கேட்டார்.

பேச இவர்களுக்கு வலிமை இருக்குமா என்று அவர் நினைக்கும்போது, அவர்களில் ஒருவன் கணீரென்ற குரலில் பேசினான். கடுகு சிறுத்தும் காரம் குறையவில்லை.

""ஐயா! நாங்கள் எல்லாம் கலைஞர்கள். நான் யாழ் இசைக்கும் பாணன். இதோ இவன் நடனமாடும் கூத்தன். இதோ இவன் மத்தளக்காரன். அதோ அந்தப் பெண் நாட்டியக்காரி, மற்றவர்கள் இசைக்குரிய வாத்தியக்காரர்கள்'' என்றான் அவன்.

""அடப்பாவமே! இப்படி இளைத்துப் போயிருக்கின்றீர்களே!'' கண்ணப்பர் இரக்கத்தோடு கூறினார்.

""நாங்கள் என்ன செய்ய? பசி. வருவாய் இல்லை. மிக உயர்ந்த இந்த இசைக்கலையை யார் கேட்கிறார்கள்?'' என்று சலித்துக் கொண்டான்.

""முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்'' என்று கூறித் தன் மனைவியை அழைத்து, ""செல்லம்மா, இவர்களெல்லாம் பசியோடு...''

அவர் சொல்லி முடிக்குமுன், ""நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே இலை போட்டாயிற்றே'' என்றாள் செல்லம்மா.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுர எனவே புளித்த மோரும் உண்ட பின் வயிறு நிறைந்து, கண்ணப்பரிடம் விடைபெற்றனர்.

""இப்போது எங்கே போகப் போகின்றீர்கள்?'' என்று கண்ணப்பர் கேட்டார்.

""எங்கே எங்கள் கலைகளைச் சுவைக்கின்றார்களோ, அங்கே'' என்று சொல்லிவிட்டு உறையூரை நோக்கிப் போனார்கள்.

சில மாதங்கள் ஆகியிருக்கும். வெயில் இன்னும் குறையவில்லை. அப்போது கண்ணப்பரின் குடிசைக்கு முன் ஒரு தேர் வந்து நின்றது.

தேரோட்டி முதலில் இறங்கி வந்து தேரில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு வழி திறந்துவிட்டு வணங்கி நின்றான்.

கண்ணப்பர் வியந்து நோக்கினார். "யாரிந்த மன்னர்கள்! அந்த மகாராணி யார்? சரிகை வைத்து தைத்த பட்டாடை; தலையில் பட்டுத் தலைப்பாகை; அரசர்களுக்குரிய அங்கி; இடையிலும் வண்ணப்பட்டுடை; காலில் பளபளக்கும் காலணி, மார்பில் முத்துமணி மாலை, அந்தப் பெண்ணின் மார்பில் மதாணி, கையில் பொன்னாலான தாமரை...'

எண்ணம் கலைந்த கண்ணப்பர் வரவேற்றார். ""மன்னர்களே வாருங்கள்! இந்த ஏழைக்குடிசை என்ன பேறு செய்ததோ! தாங்கள் எந்த நாட்டு மன்னர்கள்?''

வந்தவர்கள் சிரித்தார்கள். சிரித்தபோது அவர்களின் செழுமையான கன்னங்களில் குழி விழுந்தது.

துணுக்குற்ற கண்ணப்பர், ""நான் என்ன தவறு செய்தேன்? மன்னர்களே ஏன் சிரிக்கின்றீர்கள்?'' என்று கேட்டார்.

""ஐயா! சில மாதங்களுக்கு முன் தங்கள் வீட்டில் வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும் உண்ட உங்கள் விருந்தாளிகள்தான் நாங்கள்!'' என்றார் அந்த "மன்னரில்' ஒருவர்.

""நீங்களா! எப்படி இப்படி?!'' என்றார் கண்ணப்பர்.

""ஐயா! நாங்கள் உறையூர் சென்று மாமன்னர் சோழ வேந்தர் திருமாவளவனின் மாளிகையின் வாயிலில் நின்று ஒரே ஒரு பண்ணை இசைத்தோம். மன்னரே ஓடோடி வந்து எங்களைத் தழுவி அழைத்துச் சென்று சில மாதங்கள் விருந்தளித்து ஆடையும் அணிகலனும் தந்தார். அனைத்து நாட்களும் உண்பதே வேலை! எங்கள் உருவமே மாறிவிட்டது பாருங்கள்! எங்களை உங்களுக்கே அடையாளம் தெரியாமல் போயிற்றே!'' என்று அந்த "மன்னர்பிரான்' சொல்லவே எல்லோரும் சிரித்தனர். கண்ணப்பரும் சிரித்தார்.

இது பொருநராற்றுப்படையின் 64-129 அடிகளின் சொல்லோவியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com