சிறிய வளையல்களும் விற்பனைக்கு உள்ளன!

இளம் பெண்களின் கைகளுக்கு அவர்கள் அணிந்திருக்கும் வளையல்கள் அழகூட்டுவனவாகும்.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

இளம் பெண்களின் கைகளுக்கு அவர்கள் அணிந்திருக்கும் வளையல்கள் அழகூட்டுவனவாகும். ஆகத்திணைத் தலைவன் ஒருவன், தான் விரும்பிய தலைவியை ஊரறியத் திருமணம் செய்து கொள்ளக் காலம் தாழ்த்துகிறான். இதனால் அவனது தலைவியும் தலைவியின் தோழியும் வருத்தமுறுகின்றனர்.

இந்நிலையில், களவில் இரவு நேரத்தில் தலைவியின் இல்லத்தருகே வந்து தலைவியின் கண்ணில் படாமல் நின்று கொண்டிருக்கிறான் தலைவன். இதனையறிந்த தோழி, அவனது வருகையை அறியாதவள்போல் நின்றுகொண்டு, தலைவியின் இக்கட்டான நிலையை அத்தலைவனுக்குப் புலப்படும்படி தலைவியிடம் கூறுவாள்போல் பின்வருமாறு கூறுகின்றாள்:

'மழைக்கால ஆம்பல் மலர்போன்ற தோற்றத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு கொக்கினது பார்வைக்கு அஞ்சித் துன்புற்ற நண்டு, அதனிடமிருந்து தப்பி, கட்டறுத்துக் கொண்டு விரைந்து செல்லும் எருதினைப் போன்று, அருகிலுள்ள தாழஞ்செடியின் வேருக்கு அருகேயுள்ள தனது வளையினுள் புகும்பொருட்டு விரைந்து செல்லும் அத்தகைய கடல்துறையை உடையவன் தலைவன். அவன் தலைவியாகிய உன்னைக் காண வாராதிருந்தாலும் இருக்கட்டும். ஏனென்றால், அவனது வருகை தொடர்பாக இரண்டு இடையூறுகள் உள்ளன.

முதலாவது, களவு ஒழுக்கத்தில் தலைவன் இங்கு வருதலென்பது, பிறரறிந்து தூற்றவும் பின்பு தலைவியாகிய உன்னை "இற்செறித்தல்' (வெளியே வரத் தடை விதித்து இல்லத்தே அடைத்து வைத்தல்) செய்யவும் காரணமாகி, அது நமக்கு இன்னலைத் தந்துவிடும். இரண்டாவது, அவன் வாராமலிருந்து விட்டாலோ, உனது தோள்கள் மெலிந்து, கைவளையல்களும் நெகிழ்ந்துவிடும்.

ஆக, இவ்விரண்டும் துன்பம் தரக் கூடியனவே ஆயினும், இவற்றுள் தலைவன் வாராத வழி, கைகளுக்கு மிகவும் பொருந்திய அளவிலான பெரிய வளையல்கள் உனது உடல்மெலிவால் கழன்று வீழ்ந்துவிட்டாலும் பரவாயில்லை. வளையல் விற்போரிடத்துச் சிறிய வளையல்களும் உள்ளன. அவற்றை வாங்கிச் செறிய அணிந்து கொண்டு உடல் மெலிவைப் பிறரறியாமல் தவிர்த்துவிட முடியும். தலைவன் வருகையைப் பிறர் அறியாமல் நாம் மறைத்தல் கூடாது. அதைவிடத் தலைவன் வாராதிருத்தலே நன்று!'' என்கிறாள் தோழி.

இதன்மூலம், களவுக்காலத்தில் இரவிலும் பகலிலும் வந்து செல்ல வேண்டாம். மாறாக, தலைவியை விரைந்து வரைதலே (திருமணம் செய்து கொள்ளுதல்) நல்லது என்று தலைவனின் மனத்தில் படும்படி குறிப்பாகச் சொல்கிறாள் தோழி.

குன்றியனார் என்ற சங்க காலப் புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல் இதுதான்.

மாரி ஆம்பல் அன்ன கொக்கின்

பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு

கண்டல் வேர்அளைச் செலீஇயர் அண்டர்

கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்

வாராது அமையினும் அமைக

சிறியவும் உளஈண்டு விலைஞர்கை வளையே

(குறுந்தொகை 117)

வானில் பறக்கும் பொழுது வெண்ணிறத்தில் தோன்றும் கொக்கு, நீர்நிலையில் இரைக்காகக் கூர்ந்து நோக்கிக் கூம்பி நின்றுகொண்டிருக்கும்பொழுது, கார்காலத்தில் கூம்பி நிற்கும். அல்லியின் மொக்குப் போன்ற உருவிலும் நிறத்திலும் இருக்கும் என்பது புலவரின் உவமை நயத்தைச் சுட்டுகிறது.

தலைவனை நெடுநாட்களாகச் சந்திக்கவில்லையெனில் தலைவியின் உடல் மெலிவதுண்டு. இம்மெலிவால் கையிலுள்ள வளையல்களும் கழன்று வீழ்தலும் இயல்புதான் என்பதை இப் பாடலாசிரியர் கூறுகின்றார். தலைவன் பிரிந்தமையைத் தனது முன்கையின் மணிக்கட்டிலிருந்து கழல்கின்ற வளையல்கள் பலரறியப் பழி கூறாது இருக்குமோ எனக் கூறி வருந்தும் திருக்குறள் தலைவியின் கூற்றும்

(குறள் 1157) இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

உடல் மெலிவால், தலைவியின் வளையல்கள் கழன்றுவிட்ட நிகழ்வினை மறைக்க வேண்டும். அதற்கு, சிறிய வளையல்களும் விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்கி, தலைவி செறிய அணிந்து கொள்ளலாம் என்பது தோழி அறிந்த நல்ல உளவியல் நுட்பமாகும்.

நண்டு விரைந்து சென்று அதன் வளையினுள் புக முயல்வது, "அலர்' வெளிப்படுமுன் கற்பு வாழ்க்கை நிகழ்த்தத் தலைவனின் இல்லத்திற்கு (வரைவுக்குப் பின்) விரைந்து சென்றுவிட வேண்டும் என்ற தோழியின் குறிப்பான செய்தியை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

தலைவியின் உடல்மெலிவை மறைக்கச் சிறிய வளயைல்களே போதுமாதலால், சின்ன வளையல்களும் வளையல் விற்போரிடம் உள்ளன என்பது நல்ல இலக்கியநயம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com