இந்த வாரம் கலாரசிகன் - 23-06-2024

திருக்குறளின் வரலாற்றை வெளிச்சமிடும் முனைவர் தாமரைச்செல்வியின் புதிய நூல்
இந்த வாரம் கலாரசிகன் - 23-06-2024
Updated on
2 min read

தென்காசி திருவள்ளுவர் கழக நிகழ்ச்சிக்காகக் கடந்த மாதம் சென்றிருந்தபோது, அங்கே என்னை சந்தித்தார் முனைவர் தி.தாமரைச்செல்வி. அவர் விமர்சனத்துக்கு அனுப்பியிருந்த "இலக்கிய இதழ்கள் வழி திருக்குறளாராய்ச்சி' புத்தகம் இன்னும் மதிப்புரை செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

புதுச்சேரி தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் தி.தாமரைச்செல்வி, புலவர் ச.தியாகராசனின் வாரிசு. அவர் "திருக்குறள் வழிகாட்டி', "திருக்குறள் நெறி விளக்கக் கட்டுரைகள்' உள்ளிட்ட குறிப்பிடத்தக்க புத்தகங்களைத் தமிழுக்குத் தந்தவர். திருக்குறள் வகுப்பு நடத்தியவர்; திருக்குறள் மாநாடுகள் நடத்தியவர். அப்படி இருக்கும்போது, முனைவர் தி.தாமரைச்செல்வியின் ரத்தத்தில் கலந்ததாகத்தானே "வள்ளுவம்' இருக்க முடியும்...

இதற்கு முன்னால் 2012-இல் இவர் வெளியிட்ட புத்தகம் "திருக்குறள் பதிப்பு வரலாறு'. குறள் குறித்த ஆய்வில் ஈடுபடும் எவரும் அந்தப் புத்தகத்தைத் தவிர்த்துவிட முடியாது. இப்போது அவர் வெளிக் கொணர்ந்திருக்கும் "இலக்கிய இதழ்கள் வழி திருக்குறளாராய்ச்சி' என்கிற புத்தகமும், 10 ஆண்டு கடின உழைப்பும், நீண்ட நெடிய தேடலும் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

திருக்குறள் அச்சு வடிவம் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இதழியல் வரலாறும் தொடங்குகிறது. 1885-இல் புஷ்பரதச் செட்டியாரால் பதிப்பிக்கப்பட்ட திருக்குறள் மூலமும் பரிமேலழகர் செய்த இலக்கண உரையும்; 1893-இல் வி.சுந்தர முதலியார் பதிப்பித்த திருக்குறள் மூலம் (கருத்துரையுடன்) - இரண்டிலும் காணப்பட்ட வள்ளுவர் உருவப்படத்தை இணைத்திருக்கிறார் தாமரைச்செல்வி. அவை மட்டுமல்ல, திருக்குறள் குறித்த கட்டுரைகளை வெளியிட்ட 20-ஆம் நூற்றாண்டு இதழ்கள் பலவற்றின் முகப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

திருக்குறள் குறித்துப் பேசும்போது, எல்லிஸ் துரையைத் தவிர்க்க முடியாது. அதேபோல, கடந்த நூற்றாண்டில் திருக்குறள் பரப்புவதில் மறைமலையடிகள், திரு.வி.க., தி.குப்புசாமி முதலியார், வ.உ.சி., பாரதியார், வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பங்களிப்புகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் 109 பக்கங்களில் "திருக்குறள் வளர்ச்சி வரலாறு', "தொகுப்பின் தேவையும் இதழ்க் குறிப்புகளும்', "இதழ்கள் வழி திருக்குறள் ஆய்வுப் போக்குகள்', "நூல் பகுப்பும் அணுகுமுறையும்', "நூலாக்கத்திற்கு துணைபுரிந்தோர்' உள்ளிட்டவை அடங்கி இருக்கின்றன. அடுத்த 568 பக்கங்கள் "அறம்', "இலக்கணம்', "இலக்கியத் திறனாய்வு', உரை ஆராய்ச்சி உள்ளிட்ட 13 தலைப்புகளிலான கட்டுரைகள் தரப்பட்டிருக்கின்றன. இதழ் முகப்புப் பக்கங்கள், வள்ளுவரின் பல்வேறு தோற்றங்கள், குறள் விளக்கப் படங்கள் போன்றவை 22 பக்கப் பின்னிணைப்புகள்.

'நூலைப் பார்க்குமளவிலேயே இதன் பின்னிருக்கும் உழைப்பை எவரும் அறியலாம். தகுதி வாய்ந்த இந்த உழைப்பு, தமிழ் ஆய்வுலகுக்கு முனைவர் தி.தாமரைச்செல்வியின் நிறைவான பங்களிப்பாகும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இந்நூலுக்குத் தனித்த இடம் உண்டு'' என்கிற மா.ரா.அரசின் அணிந்துரை வரிகளுக்கும் மேலாக என்ன சொல்லிவிட முடியும்?

ஒவ்வொரு பள்ளி, கல்லூரி நூலகத்திலும், தமிழ் மாணவர்களின் சேகரிப்பிலும் இருக்க வேண்டிய படைப்புகளில் இதுவும் ஒன்று.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் நீதிபதி அரங்க.

மகாதேவனை நேற்று மாலை சந்தித்த போது, இந்தப் புத்தகத்தை அவரது பார்வைக்குக் கொண்டு போனேன். அவருக்கு இதைவிட மகிழ்ச்சியான அன்பளிப்பு வேறு என்னவாக இருந்துவிட முடியும்?

--------------------------------------------------------------------------------------

கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவைத் தெரியாதவர்களும் இருக்க முடியாது, அவருக்குத் தெரியாத ஆளுமைகளும் இருந்துவிட முடியாது. தனது தமிழால் மட்டுமல்ல, அன்பினாலும், பண்பினாலும் தன்னுடன் பழகும் எவரையும் கட்டிப்போடும் மரபின் மைந்தன் முத்தையா, தான் நெருங்கிப் பழகிய 33 ஆளுமைகள் குறித்த தனது அனுபவங்களை "பழகிப் பார்த்ததில் இவர்கள்' என்று பதிவு செய்திருக்கிறார். இது இவருடைய 75-ஆவது நூல்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் (பெரிய சாமி) தொடங்கி, மரபின் மைந்தன் முத்தையா பதிவு செய்திருக்கும் 33 ஆளுமைகளில், ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவர்களிடம், அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நானும் பழகியிருக்கிறேன். எனக்குத் தெரியாத அவர்களது புதிய பரிமாணங்களைப் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.

வித்வான் ல.சண்முகசுந்தரம், "கம்பன் அறநெறிச் செல்வர்' ஜி.கே.சுந்தரம், வலம்புரி ஜான் ஆகிய மூவர் குறித்த அவரது பதிவுகளும், என்னை ஒருமுறைக்கு இரண்டு முறை படிக்கத் தூண்டின. வலம்புரி ஜான் குறித்த, 'அழகுத் தமிழ் போலவே அவருடைய நாவில் அற்புதமான ஆங்கிலமும் விளையாடும்'' என்கிற அவரது பதிவை, நெருங்கிப் பழகியதால் உணர்ந்தவன் நான்.

நான் சந்தித்திராத கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம், "தமிழ்க்கடல்' முரு.பழ.இரத்தினம் செட்டியார், பழனி இளங்கம்பன், டத்தோஸ்ரீ சரவணன், பெரும்புலவர் பா.நமசிவாயம், டி.என்.சுகி. சுப்பிரமணியம் போன்றவர்கள் குறித்த பல புதிய செய்திகளை எனக்குத் தந்திருக்கும் முத்தையாவுக்கு நன்றி. தெரிந்தவர்கள் குறித்த தெரியாத செய்திகளும், தெரியாதவர்கள் குறித்த புதிய தகவல்களும் எனக்கு இந்தப் புத்தகத்தின் மூலம் கிடைத்திருக்கின்றன.

மரபின் மைந்தன் முத்தையாவால் பதிப்பிக்கப்பட்டிருக்கும் ஆளுமைகளுடனான அவரது நேரடி அனுபவங்கள், நாமே நேரில் பழகியது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. 'மனிதர்களின் மாண்பு நம் மனதை ஈர்ப்பது என்பது அவர்களின் தகுதிகளை விடவும் தன்மைகளால்தான்'' என்கிற கவிஞர் முத்தையாவின் முன்னுரைப் பதிவு உண்மையிலும் உண்மை.

---------------------------------------------------------------------------------------

செவ்விலக்கியம் கற்றுத் தேர்ந்து, புதுக்கவிதை எழுத வரும் கவிஞர்கள் மிகக் குறைவு. சங்க காலத்தில் மனதைப் பறிகொடுத்து அகத்திணைப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கு எளிய தமிழில் புதுக்கவிதை வடிவில் தர முனைந்திருப்பவர் கவிஞர் ரேவதி ராம். அதுகுறித்து விரிவாகப் பிறகு எழுதுகிறேன்.

அவரது புதுக்கவிதைத் தொகுப்பு "சிற்றலை மீதமர் தும்பி'. அதிலிருக்கும் கவிதை இது. என்னவொரு கற்பனை... போகிற போக்கில் வார்த்தைகளைத் தூவிவிட்டுச் செல்கிறாரே...

ஆடிக் கொண்டிருக்கும்

ஊஞ்சல்

தலை அசைக்கும்

மரக்கிளை

காதலன்றி வேறென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com