காளமேகம் தந்த கடைமொழி மாற்று

தமிழ்மொழியின் சுவைகள் எல்லா இலக்கியங்களிலும் நிறைந்து, ததும்பி நிற்கின்றன.
காளமேகம் தந்த கடைமொழி மாற்று

தமிழ்மொழியின் சுவைகள் எல்லா இலக்கியங்களிலும் நிறைந்து, ததும்பி நிற்கின்றன. அதிலும் காளமேகப் புலவரின் தனிப்பாடல்கள் படிப்பவர்களை ஈர்க்கவல்லவை.

19-ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்திக்கிராமத்தில் பிறந்த வரதன், சூல்கொண்ட கார் (காள) மேகம்போலக் கவிதை பாடும் திறம் பெற்றிருந்தார். அதனால் தம் இயற்பெயர் மறைய, காளமேகம் என்ற சிறப்புப் பெயர்பெற்றுத், திருச்சிராப்பள்ளியிலுள்ள திருவரங்கன் கோயிலிலும் திருவானைக்காவிலுள்ள சிவன் கோயிலிலும் தொண்டாற்றினார் என்பது வரலாறு. இவர் வசைபாடுதற்கோர் காளமேகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

செய்யுளின் அழகானது அணிகளின்வழி வெளிப்படுத்தப்படும். அவற்றுள் கடைமொழி மாற்று என்ற அணியைத் தெரியவில்லையெனில் புலவர் என்ன பாடினார் என்பது தெளிவடையாமல் போய்விடும். அத்துடன் பொருளும் தலைகீழாகிவிடும். கடைமொழி மாற்று என்றால் செய்யுளின் இறுதியில் வரும் சொல்லையோ தொடரையோ செய்யுளின் முதலில் வைத்துப் பொருள்கொள்வது எனப்பொருள்.

அப்படியொரு பாடலைக் காண்போம்:

கொன்றை மலர்தரித்தான் கோபாலன்

கோலெடுத்து

நின்றுகுழல் ஊதினான் நீள்சடையோன்

- பொன்திகழும்

அக்கணிந்தான் மாயன் அரவணையில்

கண்வளர்ந்தான்

சிக்கலிலே வாழும் சிவன்

கோபாலன் கொன்றை மலர்களை அணிந்தான். நீள்சடையோன் (சிவன்) ஆயர்களுக்குரிய வளைந்த (தொரட்டிக்) கோலை வைத்துக்கொண்டு, புல்லாங்குழலை இசைத்தான். மாயன் எலும்பு மாலை அணிந்தான். சிவனோ பாம்புப் படுக்கையில் படுத்துறங்கினான் என்பது இப்பாட்டின் நேரடிப்பொருள். இவ்வாறு நேரடியாகப் பொருள்கொண்டால் குழப்பம்தான் மிஞ்சும். சிவன் மட்டுமா சிக்கலிலே உள்ளான். இல்லை இதனைப் படிப்பவர்களும்தாம் சிக்கலில் இருப்பர்.

சிக்கல் என்பது நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ளதோர் ஊர். அவ்வூரிலிருக்கும் வெண்ணெய்ப் பெருமானைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

கருவூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்த சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் இவ்வூரில் மறைந்ததாகப் புறநானூறு கூறுகிறது (387).

கவி காளமேகத்தின் இப்பாடல் அவ்வூர்க் கோயிலையும் கடவுளரையும் பற்றியது. இப்பாட்டிலுள்ள கடைசி அடியை மாற்றி, முதல் அடியுடன் பொருத்திப் படித்தால் பொருள் குழப்பமின்றித் தெரியும்.

சிக்கலிலே வாழும் சிவன் கொன்றை மலர்தரித்தான். கோபாலன் கோலெடுத்துநின்று குழல் ஊதினான். நீள்சடையோன் அக்கணிந்தான். மாயன் அரவணையில் கண்வளர்ந்தான் என்று பொருளுணர்ந்தால் குழப்பம் மறைகிறது.

சிவன் எலும்பு மாலையை அணிந்திருந்தான் என்றும் உருத்திராக்க மாலையை அணிந்திருந்தான் என்றும் இருவாறாகப் பொருள் உரைப்பர். அக்கு என்றால் எலும்பு என்று பொருள். பின்வரும் பாடல்களின்வழி இதனை அறியலாகிறது.

ஏனவெண்கொம்பு அக்குமாலை

பூண்டு (சம். தேவாரம், 796)

அக்கரை ஆர்ப்பர் போலும்

துறையனாரே (நாவு. தேவாரம், 543)

ஆகவே, எலும்பு மாலையை அணிந்திருந்தான் என்றும் உருத்திராக்க மாலையை அணிந்திருந்தான் என்றும் இருபொருள் தரும்படி நயமாகப் பொருளுரைக்கலாம்.

இவ்வமைப்பில், காளமேகம் பல பாடல்கள் பாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com