வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

இந்த வாரம் கலாரசிகன் - (10-03-2024)

படைப்பிலக்கியவாதிகளுக்கான ஜெயந்தன் விருது மீண்டும் ஒளிர்கிறது

News image
Updated On :10 மார்ச் 2024, 1:13 pm

கலாரசிகன்

ஓவியரோ, நடிகரோ, கவிஞரோ, படைப்பிலக்கியவாதியோ யாராக இருந்தாலும் அவர் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும். அந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் "ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது'. எழுத்தாளர் ஜெயந்தனின் நினைவைக் கொண்டாடும் விதத்தில் அமைந்த அந்த விருது, அவரது மகன் சீராளன் நடத்தும் "ஜெயந்தன் சிந்தனைக்கூடல்' சார்பில் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து ஏழு ஆண்டுகள் வழங்கப்பட்ட அந்த விருது, கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் முடங்கிப் போனது. இப்போது மீண்டும் அந்த விருது வழங்கப்பட இருக்கிறது என்கிற நல்ல செய்தியை என்னிடம் தெரிவித்தார் சீராளன். ஜெயந்தன் மறைந்து 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது பெயரால் விருது நிறுவித் தனது தந்தையின் நினைவைப் போற்றுவதுடன், அடுத்த தலைமுறை எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் சீராளனின் உயர்ந்த பண்பு பாராட்டுக்குரியது.

2023-ஆம் ஆண்டில் பிரசுரமான நூல்கள் - சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் என்னும் நான்கு பிரிவுகளிலும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சிறந்த நூலுக்கு ரூ.10,000 பரிசுத் தொகையுடன் "ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது' வழங்கப்படும் என்று அவர் தகவல் அனுப்பி இருக்கிறார். விருதுக்குத் தேர்வு செய்யப்பட இந்த மாத இறுதிக்குள் புத்தகங்கள் வந்து சேர வேண்டும் என்று தெரிவித்தார் சீராளன். தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரி - kodulines@gmail.com.

நான் ஒரு தபால்தலை சேகரிப்பாளன் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான அயோத்தி ராமர் கோயில் தொடர்பான சிறப்புத் தபால்தலைகள் உள்பட, புதிதாக வெளியிடப்படும் முக்கியமான தபால்தலைகளை, அதன் முதல் நாள் சிறப்பு உறையுடன் வாங்கி சேகரித்து வருகிறேன். அதனால் தபால்தலைகள் குறித்த எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதை உடனடியாக நான் படித்து விடுவதில் வியப்பில்லைதானே?

காமராஜ் மணி என்பவர் எழுதியிருக்கும் "தபால்தலை சாதனையாளர்கள்' என்கிற புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தது. தபால்தலை வெளியிட்டு கௌரவிக்கப்பட்ட 45 ஆளுமைகள் குறித்த அபூர்வமான, சுவாரஸ்யமான தகவல்களை திரட்டித் தொகுத்திருக்கிறார் அவர். தபால்தலை வெளியிடப்படும்போது, அந்த தபால்தலை குறித்தும், அதில் இடம் பெறும் ஆளுமைகள் குறித்தும் தகவல் அட்டை வெளியிடப்படும். அதையும் தாண்டிப் பல தகவல்களை இணைத்திருக்கிறார் காமராஜ் மணி.

முன்பெல்லாம் பிரமுகர்கள், சாதனையாளர்கள் உள்ளிட்டோரை தபால்துறையே தேர்வு செய்து தபால்தலை வெளியிடுவது வழக்கம். இப்போது, குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் யாருடைய தபால்தலையையும் நாம் வெளியிட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கம், வேறென்ன?

-----------------------------------------

தமிழ் இதழியலில் "கல்கி' கிருஷ்ணமூர்த்தியைப்போல் பன்முகத்தன்மை கொண்ட இன்னொருவர் இருக்க முடியாது. அவரது அமர காவியங்களான "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்' உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களாகட்டும், "தியாக பூமி', "அலையோசை' உள்ளிட்ட சமூக நாவல்களாகட்டும், "காற்றினிலே வரும் கீதம்' போன்ற திரைப்பாடல்களாகட்டும், அவர் எழுதித் தள்ளியிருக்கும் நகைச்சுவை ததும்பும் கட்டுரைகளாகட்டும் ஒவ்வொன்றும் அவரது வெவ்வேறு பரிமாணங்களின் வெளிப்பாடுகள்.

இவற்றைப் போலவே முக்கியமானது, "கர்நாடகம்' என்கிற புனைபெயரில் 1931 முதல் 1953 வரையில் ஆனந்தவிகடன், கல்கி இதழ்களில் இசை, நடனம், திரைப்படங்கள் குறித்து அவர் எழுதிய விமர்சனங்கள். "ஆடல் பாடல் சினிமா' என்கிற தலைப்பில் "கர்நாடகம்' என்கிற புனைபெயரைத் தாங்கி வெளிவரும் அந்தப் பத்தியில் கல்கியின் விமர்சனத்தைப் படிப்பதற்காகவே தமிழகத்தில் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் வாரந்தோறும் காத்துக் கிடக்கும். அந்த விமர்சனங்களை எல்லாம் மிக நேர்த்தியாகத் தலைப்பிட்டுத் தொகுத்திருக்கிறார் பதிப்பாசிரியர் "ஸ்வர்ணவேல்' .

"சதிர்க் கச்சேரிகள் வேண்டுமா? வேண்டாமா?' என்கிற 01.01.1933 "ஆனந்தவிகடன்' இதழில் வெளியான கல்கியின் விமர்சனத்தில் தொடங்கி பரதநாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரிகள், திரைப்படங்கள் என்று எல்லாமே அலசப்படுகின்றன. அவரது நகைச்சுவை இழையோடும் அந்த விமர்சனங்கள், அவர் குறிப்பிடும் நிகழ்வுகளைவிட சுவாரஸ்யமாக இருப்பதைப் படிக்கும்போது பிரமித்துப் போகிறோம்.

எஸ்.ஜி. கிட்டப்பாவைப் பற்றி, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பற்றி, முடிகொண்டான் வெங்கட்ராமையர் பற்றி எல்லாம் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளை ஒருமுறைக்கு இருமுறை படித்து ரசித்தேன்.

எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் இசைப்பயண ஆரம்ப காலத்தில் அவர் குறித்து "கர்நாடகம்' எழுதி வெளிவந்த விமர்சனம் இது -

"அவருடைய பாட்டில் ஓசை இன்பம் 100-க்கு 100 இருக்கிறது. தமிழ்நாட்டில் அவ்வளவு ஓசை இன்பம் பொருந்திய குரலை நான் கேட்டதில்லை என்றே கூறுவேன். ஆனால் சங்கீதத்தில் ஓசை இன்பம் மட்டும் இருந்தால் போதாது. ஜீவன் இருக்க வேண்டும்...'

அவரது திரைப்பட விமர்சனம் ஒவ்வொன்றும் விமர்சன இலக்கணங்கள். "மேனகா', "வாழ்க்கை' திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள் இருக்கட்டும். அண்ணாவின் "வேலைக்காரி' திரைப்படம் குறித்த விமர்சனம், விமர்சகனின் பார்வை எப்படி நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு.

அண்ணாவுக்கு "அறிஞர்' என்கிற பட்டத்தை வழங்கியவர் ஆசிரியர் கல்கிதான், தெரியுமோ?

புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது மகாராசன் தொகுத்திருக்கும் சோ. தர்மன் கவிதைகள். கவிதைகள் எழுதத் தொடங்கி, பிறகு நாவலாசிரியராக மாறிய சோ. தர்மன், தனது கவிதைகளை "தன்போக்குக் கவிதைகள்' என்று குறிப்பிடுகிறார். அதிலிருக்கும் 66 கவிதைகளில் 65-ஆவது கவிதை இது-

குப்பைக் கூடை

வேண்டும் என்றேன்

கடைச் சிப்பந்திப் பெண்

எடுத்தாள் கொடுத்தாள்

வேறு கலர்

வேண்டும் என்றேன்

குப்பைக் கூடைக்கு

என்ன சார் கலரு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.