இந்த வாரம் கலாரசிகன் - (24-03-2024)

பழ. கருப்பையா புத்தக வெளியீட்டில் விழிகள் பதிப்பகம் சாதனை
இந்த வாரம் கலாரசிகன் - (24-03-2024)

என்னைப் பலமுறை தொடர்பு கொண்டும் கிடைக்காமல், சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்ற பழ. கருப்பையாவின் "இப்படித்தான் உருவானேன்' புத்தக வெளியீட்டு விழாவில் பிடித்து விட்டார் "விழிகள்' பதிப்பகம் வேணுகோபால். அவர் என்னைத் தொடர்பு கொண்டபோது திரும்பவும் அழைக்காதது எனது தவறு தான்.

விஷயம் வேறொன்றுமில்லை. "இந்த வாரம்' பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி நான் ஒரு புத்தகம் குறித்து எழுதி இருந்தேன். 1940 -இல் அன்றைய மதராஸ் பார் கவுன்சிலால் வெளியிடப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.வி. கிருஷ்ணசுவாமி ஐயர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த புத்தகம் அது. அந்தப் புத்தகத்தை மறு பதிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கினார், பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் புகழ்பெற்ற இப்ராஹிம் கலிஃபுல்லா. அதை யாராவது தமிழாக்கம் செய்தால் இன்றைய தலைமுறை வழக்குரைஞர்களுக்கும், வருங்காலத்தில் வழக்குரைஞர்களாக உருவாகும் இளைஞர்களுக்கும் பயன் அளிக்கும் என்று நான் எழுதியிருந்தேன்.

எங்கிருந்தோ அந்தப் புத்தகத்தைத் தேடிப்பிடித்து, அதைக் குமரேசன் என்பவர் மூலம் தமிழில் மொழியாக்கம் செய்து தயாராக வைத்திருக்கிறார் "விழிகள்' வேணுகோபால். நீங்கள் கேட்டபடி மொழியாக்கம் தயார், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பந்தை என்னிடம் வீசி இருக்கிறார்.

-----------------------------------------------

இராசிபுரம் கம்பர் மாமுனி புலவர் மு. இராமசாமிக்கு அறிமுகம் தேவையில்லை. கம்பனை நேசிக்கும், பாரதியை சுவாசிக்கும் அந்தப் பெருமகனார் அகவை 98 எட்டியும் கூட தன்னுடைய தமிழ் பணியையும் எழுத்து பணியையும் தொடர்வது தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும்பேறு.

"கம்பர் காவியத்தில் கதைக்களங்கள்' என்கிற அவரது புதிய படைப்புடன் எனக்கு ஒரு கடிதமும் அனுப்பி இருக்கிறார் பெரும் புலவர். கம்பன் விழாக்களில் உரையாற்றச் செல்லும்போது இந்தப் புத்தகம் உங்களுக்கு பயனளிக்கலாம் என்கிற குறிப்புடன் அமைந்திருக்கிறது அந்த கடிதம். கம்பகாதையின் முக்கியமான, சுவாரசியமான கட்டங்களின் பின்புலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு அந்த புத்தகம். அந்தப் புத்தகத்தின் இன்னொரு தனிச்சிறப்பு என்ன என்றால் அது புலவர். மு. இராமசாமி அவர்களின் 98 -ஆவது அகவையையொட்டி வெளியிடப்பட்டிருக்கிறது என்பதுதான்.

-------------------------------------------------

"கான கந்தர்வன்' எஸ்.ஜி. கிட்டப்பா, "ஏழிசை மன்னர்' எம்.கே. தியாகராஜ பாகவதர், "நாகஸ்வர சக்கரவர்த்தி' டி.என். ராஜரத்தினம், "இசையரசி' கே.பி. சுந்தராம்பாள், "இன்னிசைக் குயில்' எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் குறித்து எத்தனை புத்தகங்கள் வந்தாலும், எத்தனை முறை அவர்கள் குறித்த செய்திகளை மீண்டும் மீண்டும் படித்தாலும் சலிக்காது. "இசையரசி' கே. பி. சுந்தராம்பாள் அதிலும் தனிச்சிறப்பு மிக்கவர். இவருடைய பங்களிப்பு இசை, நடிப்பு ஆகியவற்றையும் தாண்டி இந்தியாவின் விடுதலை வேள்வியில் பங்கு கொண்டவர் என்கிற தனிப் பெருமையும் பெற்றது.

தமிழ்ச் செம்மல் முத்துரத்தினம் எழுதிய "இசையரசி கே.பி. சுந்தராம்பாள்' என்கிற புத்தகம் விமர்சனத்திற்கு வந்திருந்தது. தெரிந்த செய்திகளே ஆனாலும் கூட, மீண்டும் படிக்கும் போது சுவாரஸ்யம் கூடும் அதிசயத்தை என்னால் உணர முடிந்தது

ஆவணப்பதிவு என்பது போல கே.பி.எஸ். அவர்களின் திரைப்பட பாடல்கள் குறித்த இணைப்பு நல்லதொரு தகவல் தொகுப்பு. அவரது வெற்றிலைப் பெட்டியில் என்ன இருக்கும் என்பது உட்பட அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் சில முக்கியமான சம்பவங்களும், செய்திகளும் திரட்டப்பட்டு பதிவாகி இருக்கிறது.

"கே.பி.எஸ். அவர்களின் வாழ்க்கை இசை வாழ்க்கை; கலை வாழ்க்கை; தேசிய வாழ்க்கை' என்கிற அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் பதிவும், "அந்த மாதிரி உச்ச ஸ்தாயியில் யாரும் பாட முடியாது; அந்த உயரமான இடத்தை யாரும் தொடவும் நெருங்கவும் முடியாது; கே.பி.எஸ். அவர்களின் தமிழ் உச்சரிப்பும், பாடும் அழகும், பாங்கும் இன்றைய பாடகர்களுக்கு அகராதியாக விளங்கும்' என்கிற நடிகர் சிவகுமாரின் பதிவும் மறுக்க முடியாத உண்மைகள்.

சுதந்திரப் போராட்டத்தில் அன்றைய நாடகக் கலைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதிலும் கே.பி.எஸ். முக்கிய பங்கு வகித்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது அண்ணல் காந்தி அடிகள் "பிரிய சகோதரி' என்று அவரை அழைத்து, அவருக்குத் தமிழில் எழுதியிருக்கும் கடிதம். அது இணைக்கப்பட்டிருக்கிறது.

கே.பி.எஸ்ஸூக்கும் தீரர் சத்தியமூர்த்திக்கும் இடையேயான உறவு குறித்து இதில் விரிவாக எழுதப்படவில்லை. அண்ணன்-தங்கை என்கிற முறையில் அவர்களுக்கு இடையே இருந்த பிணைப்பு அசாதாரணமானது. தீரர் சத்தியமூர்த்தியின் குழந்தைகள் கே.பி.எஸ்ûஸ அத்தை என்றுதான் அழைப்பார்கள்.

சத்தியமூர்த்தி வாடகை வீட்டில் இருக்கிறார் என்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கே.பி.எஸ்., சென்னை மாம்பலம் இந்தி பிரச்சார சபா அருகில் அவருக்கு சொந்தமாக வீடு வாங்கிக் கொடுத்தார். அந்த வீட்டிற்கு தீரர் சத்தியமூர்த்தி "சுந்தரம்' என்று அவரது பெயரை வைத்தார்.

சில தவறான தகவல்களும், மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன என்றாலும் கே.பி.எஸ். குறித்த புத்தகம் என்பதால் ரசித்துப் படித்தேன்.

-----------------------------------------------------

விமர்சனத்துக்கு வந்திருந்தது தமிழக அரசின் சிறந்த கவிதை நூல் விருது பெற்ற, கவிஞர் தங்கம் மூர்த்தியின் "தேவதைகளால் தேடப்படுபவன்' என்கிற கவிதைத் தொகுப்பு.

அது என்ன விந்தையோ தெரியவில்லை, புத்தகத்தை எடுத்துப் பிரித்த மாத்திரத்தில் இந்தக் கவிதை கண்ணில் பட்டது. துணை செய்தி ஆசிரியர் ராஜ்கண்ணனிடம் நான் ரசித்ததைப் படித்துக் காட்டினேன். இதுதான் இந்த வாரக் கவிதை என்று அவர் கேட்ட மாத்திரத்தில் பரிந்துரைத்து விட்டார். அந்தக் கவிதை இது-

அலைகளுக்கும் மலைகளுக்குமிடையே

ஒரு மோனை விளையாட்டு

நடக்கிறது எப்போதும்

மலைகள் கரைவதுமில்லை

அலைகள் விடுவதுமில்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com