
தமிழ் அகத்திணை மரபு காலந்தோறும் தோன்றிய பல்வேறு இலக்கிய வகைகளிலும் இடம் பெற்றுள்ளது. தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இதற்கு விலக்கல்ல.
நற்றிணைச் செய்யுள் ஒன்றன் கருத்து அகத்திணை மரபு தழுவிப் பாடிய நம்மாழ்வாரின்
""திருவிருத்தம்'' என்னும் நூலின் ஒரு பாடலில் பெரிதும் ஒன்றி நிற்பதை காணலாம்.
பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பாடிய நற்றிணைப் பாடல்
ஆழல்இ மடந்தை! அழுங்குவர் செலவே
புலிப்பொறி அன்ன புள்ளியம் பொதும்பின்
பனிப்பவர் மேய்ந்த மாஇரு மருப்பின்
மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை
ஒண்டொடி மகளிர் இழை அணிக் கூட்டும்
பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு
ஏழிற் குன்றம் பெறினும்இ பொருள்வயின்
யாரோ பிரிகிற் பவரே குவளை
நீர்வார் நிகர்மலர் அன்னஇ நின்
பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே?
(நற். 391)
"தலைவன் பொருளீட்டும் பொருட்டாகத் தன்னைப் பிரியவிருக்கிறான்' என்பதனை அறிந்து வருந்தும் தலைவிக்கு, "அவர் செலவினைத் தவிர்ப்பர் (அழுங்குவர்); வருந்தாதே' என்று தோழி வலியுறுத்திக் கூறும் முறையில் அமைந்துள்ளது.
"பெண்ணே! கண்ணீர் மல்க அழாதே. நின் காதலர் ஏழில் மலை போன்ற பெரு நிதியம் கிடைப்பதாயினும் நின்னைப் பிரிவார் அல்லர்' என்கிறாள் தோழி. இதனை உரிப்பொருளாக உயிர்நிலைக் கருத்தாகக் கொண்டுள்ள இப்பாடல் நன்னனது கொண்கான நாட்டில் உள்ள அவனுக்குரிய ஏழில் மலையையும் அம்மலை சார்ந்த கருப்பொருள்களையும் ஒரு சேரப் பாடுகின்றது.
புலியினது புள்ளிகளைப் போன்ற நிழலையுடைய மரங்கள் ஏழில் மலையின்கண் செறிந்து வளர்ந்துள்ளன. அங்குப் படர்ந்த குளிர்ச்சியான கொடியைக் கரிய கொம்புகளையுடைய எருமைகள் மேய்கின்றன. அவை தின்றொழிந்த மலைப்பச்சையின் இலைகளை ஒளிபொருந்திய கொடியணிந்த மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு அமைத்துக் கொள்வர். இத்தகைய அழகு பொருந்திய நன்னன் என்னும் மன்னனுக்குரிய ஏழில் மலையையே பெறுவதாயினும் தலைவர் உன்னைப் பிரிந்து செல்வார் அல்லர்.
குவளையின் நீர்வடிகின்ற பெரிய அமர்த்தலையுடைய குளிர்ந்த கண்களை உடையவள் நீ. அவற்றைக் காணுந்தோறும் உன்னைப் பிரியும் ஆற்றல் உடையவர் ஆவாரோ அவர்? (கிற்பவர் கிற்றல் ஆற்றல் உணர்த்தும் இடைச் சொல்) அவர் பிரிந்து செல்வார் அல்லர். எனவே இவ்வழகிய கண்களிலிருந்து தெளிந்த நீர் வடியும்படி நீ அழாதே என்கிறாள் தோழி.
"நீர்ததும்பும் நின் பேரமர்க் கண்கள் காணும்தோறும் அவனைக் கால் கட்டும். எனவே செலவு தவிர்வர் வருந்தாதே!' என்பது கருத்து.
இனி நம்மாழ்வாழ்வாரின் திருவிருத்தப் பாசுரத்தைக் காணலாம். தலைவியின் நீங்கலருமை பற்றித் தலைவன் பேசுவதாக நம்மாழ்வாரின் பாசுரம் அமைந்துள்ளது.
திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்விண்
ணாடனைய
வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர்? தாம்
இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுடராடி
வெண்முத்தரும்பி
வண்பூங் குவளை மடமான் விழிக்கின்ற
மாயிதழே
(திருவிருத்தம் 9)
முன்பு நாம் பார்த்த நற்றிணைச் செய்யுள் தோழி கூற்றாகவிருக்க, இது தலைவன்
கூற்றாக இருப்பது ஒன்றே குறிக்கத்தக்க வேற்றுமையாகும். மற்றபடி உள்ளடக்கம் ஒன்றே.
கூடியிருந்த நிலையிலும் தலைவன் பிரியவிருக்கிறான் என்பதையுணர்ந்து தலைவி வருந்தவும் அவளின் கண்ணழகு கண்டு பிரிய மாட்டாத தலைவன் கூற்றாக அமைந்தது இப்பாசுரம்.
எம்பெருமானுடைய பரமபதத்தைப் போல் விளங்குகின்றாள் இந்தப் பூங்கொடி. இவளை யார் தாம் பிரிய வல்லவர்? இவளது கண்கள் கண்களாக மட்டும் இல்லையே! தாமரை மலராய், செங்கழு நீர்ப் பூவாய், பெரிய இதழ்களை உடையவாய் மையை அணிந்து, பிரிவாற்றாமையால் கண்ணீராகிய வெண்முத்துகள் தோன்ற மடப்பத்தையுடைய மான்போல் நோக்குகின்றனவே! இவளை இந்த மணிவல்லிக் கொடியை எப்படிப் பிரிய முடியும்?
""வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர்'' என்னும் பாசுரத் தொடரையும் ""பொருள்வயின் யாரோ பிரிகிற்பவர்'' என்னும் நற்றிணை அடியையும் ஒத்திட்டுப் பார்த்தால் இரண்டிலும் உள்ள பாவ ஒற்றுமை இனிது விளங்கும். அவ்வாறே தலைவியரின் கண்ணழகு பற்றிய வருணனைகளில் காணப் பெறும் ஒற்றுமையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
இவ்வண்ணம் அகத்திணை மரபு பூவினுள் மணம் போல் பொதிந்திருந்து தமிழ்ப் பக்தி இலக்கியங்களுக்கு வனப்பும் வளமும் சேர்ப்பதை ஊன்றிக் கற்பார் எளிதில் உணரலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.