நல்லவே எண்ணல் வேண்டும்

'எண்ணமே வாழ்வு' என்பது எமர்சனின் வாக்கு. வாழ்க்கை என்னும் கட்டடம் எண்ணங்கள் என்னும் கற்களாலேயே எழுப்பப்பட வேண்டும்.
நல்லவே எண்ணல் வேண்டும்
Updated on
3 min read

'எண்ணமே வாழ்வு' என்பது எமர்சனின் வாக்கு. வாழ்க்கை என்னும் கட்டடம் எண்ணங்கள் என்னும் கற்களாலேயே எழுப்பப்பட வேண்டும். எண்ணங்கள் உயர்வானவையாக இருந்தால் வாழ்வும் கோபுரமாக உயரும். 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்றார் திருவள்ளுவர். குளத்தின் நீர்மட்டம் உயர உயரத் தாமரை மலரும் உயர்ந்து நிற்கும். அதுபோல எண்ணம் உயர்ந்ததாக இருந்தால் எண்ணுபவன் வாழ்க்கையும் உயர்ந்து நிற்கும்.

ஒரு செயலைச் செய்யுமுன் பலமுறை அதனைக் குறித்து எண்ண வேண்டும். எண்ணாமல் எதையாவது செய்து விட்டுப் பின்பு இரங்கக் கூடாது என்று ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர், நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி என்ற சோழ அரசனுக்கு அறிவுரை கூறுகிறார். புறநானூற்றில் (10) உள்ள அவரது பாடல் கருத்து நயமிக்கது.

'அரசே! உன்னைப் புகழ்ந்து பேசுகின்றவர்களின் சொற்களை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி உன்னிடம் வந்து பழி சொல்பவர்களைக் குறித்தும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும். உண்மையில் பிறரிடம் குற்றம் இருக்குமானால், அதற்குத்தக்க தண்டனையை நீ அவர்களுக்குக் கொடுக்கலாம். தம் செயலுக்கு வருந்தி உன்னிடம் பிழை பொறுக்க வேண்டுவாரைப் பற்றி நீ எண்ணிப் பார்த்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீ தவிர்க்கலாம். எதையும் செய்து விட்டுப் பின்பு இரங்கத் தக்க நிலையில் நீ இருக்க மாட்டாய் என்பது கேட்க இனியது' என்று கூறுகிறார்.

சங்க இலக்கியங்களில் பெரும்பாலான பாடல்களில் அரசனுக்கே அறிவுரை கூறப்படுகின்றது. நாட்டின் தலைமையைச் சரியான சிந்தனைக்குரிய ஊற்றாக அமைத்துவிட்டால் மற்ற எல்லாம் ஒழுங்காகிவிடும் என்ற கருத்தே இதற்குக் காரணம். 'நெல்லும் உயிரில்லை; நீரும் உயிரில்லை; மன்னனே உலகிற்கு உயிர்' என்று புறநானூறு கூறுகின்றது. அம்மன்னன் நல்லதே எண்ணுதல் ஆக்கத்திற்கு முதல்படி; பின் அதனை ஆணையாக வடிப்பது இரண்டாவது படி; அதனைச் செயலாக நிறைவேற்றுவது மூன்றாவது படி. மன்னன் நல்லதை எண்ணுவதை இயல்பாக உடையவனாகி விட்டால் அந்த நாட்டிற்குக் குறை ஒன்றுமில்லை.

எண்ணம் மாசற்றதாகவும், பயன்மிக்கதாகவும் அமைய அந்த எண்ணங்கள் சுரக்கும் உள்ளம் பளிங்குபோல் தூயதாக இருக்க வேண்டும். சாக்கடையில் ஊறுகின்ற தண்ணீர் தாகத்திற்காகுமா? அழுகிய கனி பசி தீர்க்குமா? இழிந்த எண்ணம் கொண்டவன் சமூகத்தைக் காக்க முடியுமா? இவ்வினாக்களுக்கு விடை எதிர்மறையாகவே இருக்கும்.

சங்க காலத்தில் 'தந்துமாறன்' என்ற குறுநில மன்னன் ஒருவன் இருந்தான். அவன் பிறர் நலம் பேணுகின்ற நற்பண்பு உடையவன். பயனுற எண்ணி, பயனே விளையச் செயலாற்றும் திறமுடையவன். அவனைக் கண்டு அவனுடைய பண்புகளைப் போற்றிய சங்க வருணர் என்னும் புலவர், 'அரசனே! கடந்த காலத்தில் சிலரே நல்ல சிந்தனையும் செயலும் உடையவராக இருந்துள்ளனர். அவ்வாறு இல்லாத பலர் வீணே காலத்தை இறந்து பட்ட பிறகு கள்ளிச் செடிகள் மண்டிய சுடுகாட்டில் பிணம் சுடுவோன் தந்த பிண்டத்தைப் பெற்று இவ்வுலகிலிருந்து போய் ஒழிந்தனர். வாழ்க்கை என்பது பலர்க்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். நீ அவ்வாறு நல்லவே எண்ணி வாழ்க' எனப் போற்றுகின்றார்.

செல்வம், குடி, குலம், ஆகியவற்றால் தாழ்ந்த ஒருவன் உயர்ந்த எண்ணம் உடையவனாக இருப்பின், செல்வத்தாலும் குடியாலும் குலத்தாலும் மேம்பட்ட ஒருவன் அவனைப் பணிந்து அறிவு பெறுவதே தக்க செயலாகும். சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஓர் அங்கம். எல்லோருமே சமூகத்தைத் தாங்கும் தூண்கள். மனிதர்களில் ஏற்றத் தாழ்வு கற்பித்து நோக்குவது பயனுறு வாழ்வாகாது.

ஒருவனது நற்சிந்தையும், அதனிற் சுரக்கும் எண்ணமும் பகையை நீக்கப் பயன்பட வேண்டும் என்று கூறுகின்றது சங்க இலக்கியம். ஒருவருடைய சிந்தனை பிறரை ஊறுபடுத்த முயலக் கூடாது. மாறாக ஒருவருடைய புண்ணைக் குணமாக்குவதாக அமைய வேண்டும்.

மருந்து மரம் ஒன்றிருக்கிறது. அதன் வேரும் பட்டையும் நல்ல மருத்துவப் பயனுடையவை. அதற்காக எப்போதும் அதனை உளிகொண்டு செதுக்கியும், வாள் கொண்டு அறுத்தும் பயன்படுத்த முனைவார்களேயானால், மரமல்லவா பட்டுப்போய் விடும்! இதனை 'மரம் சாகும்படி மருந்து கொள்வது' நல்ல செயல் ஆகாது என்று நற்றிணை கூறக் காணலாம்.

நல்ல எண்ணமுள்ளவர்களின் இதயம் இரும்புப் பெட்டி போன்றதன்று. பிறர் தம்மை நாடி வருகிறார்கள் என்னும் போது அவர்களை மிக மகிழ்ந்தும் உள்ளம் நெகிழ்ந்தும் மனந்திறந்த நிலையில் வரவேற்பர். கருவூர்க் கதப்பிள்ளை என்னும் புலவர், மனிதனின் மனம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று கூறுவது மிகவும் நயமுடையதாக உள்ளது.

ஒரு காந்தள் மலர், மலர்கின்ற பருவத்தை அடைந்திருக்கிறது. எனினும் அதன் இதழ்கள் கட்டுவிட்டு மலரவில்லை. அப்போது ஒரு வண்டு, அது மலரும் வரையில் காத்திருக்காமல் அதன் இதழ்களின் மீது மெல்ல உரசுவதுபோல அணுகுகின்றது. உடனே மலரும் சான்றோரைக் கண்டு வரவேற்கும் மனிதனைப் போல நெகிழ்ந்து தன் இதழ்க் கதவுகளைத் திறந்துவிடுகிறதாம். இதுதான் பிறர் பயன் கொள்ளுவதற்காகச் சித்தமாக இருக்கும் மனநிலை.

'வருக வருக' என்ற அறிவிப்பு இருக்குமிடத்தில் வாயிற் கதவை மூடியிருந்தால் அது வரவேற்பாகுமா? பலர் வீடுகளில் வரவேற்பறை இருக்கிறது. ஆனால் மனம் வரவேற்பதில்லை. பலர் வீடுகளில் மலர்க்கொத்துகள் இருக்கின்றன; அவை இயற்கை மலர்களில்லை. பலர் வீடுகளில் இனிய கனிக்குலைகள் அலங்காரத் தட்டுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை மெழுகால் செய்யப்பட்டவை. பலர் இனிய சொற்களால் வரவேற்கின்றனர். ஆனால் அவை உள்ளத்திலிருந்து வருவதில்லை. இதற்கெல்லாம் அடிப்படை நாம் பிறர்க்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணமில்லாமையே ஆகும்.

நல்லவே எண்ணுதலை இயல்பாகப் பெற்ற உள்ளம் எப்போதும் கூம்பாத மலர் போன்றது. அப்படி எண்ணிய கண்ணோட்டம் மிக்கவர்கள் மலிந்திருந்தது சங்கச் சமூகம். நெல்லிக்கனி யார் கொடுத்தாலும் இனியதுதான். அதனை உண்ட பிறகு நீர் குடித்தால் சுவை மிகுந்து தோன்றுவது இயற்கைதான். ஆனால் சிறுகுடி உரிமையாளனாகிய பண்ணன் வீட்டு நெல்லிக் கனியாகுமா என்கிறார் புலவர். அது வருபவர்க்கு என்றே காய்த்தது ஆயிற்றே என்கிறார். மரம் நடுகின்ற முதியவர்கள் என்ன எண்ணுவார்கள்? நமக்காகாது, இதை ஏன் நட வேண்டும் என்று நினைப்பார்களா? அடுத்த தலைமுறைக்கு ஆகட்டும் என்றுதானே கருதுவார்கள்! அதுதான் சங்க காலப் பண்பாடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com