"என்ன..? இராமனின் கவிதையா..? அதை ரசித்தது இராவணனா...?' என்று உங்களுக்கு வியப்பு வரலாம். இராமனின் கவிதையை விவரித்துச் சொல்லி, இராவணன் ரசித்ததாகக் காட்சி அமைத்திருக்கிறான் கம்பன்.
தமிழ் இலக்கணம் பிசகாமல் இராமனின் கவிதை இருந்ததாகவும் சொல்கிறான் இராவணன்.
ஒரு சிறந்த கவிதைக்கு முதல் தேவை என்ன? பொருத்தமான சொற்கள்; வெறும் சொற்கள் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் சிறந்த பொருள் இருக்க வேண்டும்.
உயர்ந்த பொருள் தரும் சிறந்த சொற்கள் அமைவதுதான், ஒரு கவிதை சிறப்பானதாக அமைவதற்கான அடிப்படை.
இந்தச் சொற்கள் சிறந்த முறையில் தொடுக்கப்பட வேண்டும். இதனைத் "தொடை' என்று தமிழ் இலக்கணம் கூறுகிறது. தொடுக்கப்படுவதால் அது "தொடை'.
தொடை என்பது செய்யுளின் ஓர் உறுப்பு. இதனை எட்டு வகையாகத் தமிழ் இலக்கணம் பிரிக்கிறது. "எதுகை', "மோனை' என்பன, கவிதைகளில் அமையும் என்பதனைப் பொதுவாகத் தமிழார்வம் சற்றே உடையவர்களும் அறிவார்கள்.
எட்டு வகையான தொடைகள், எதுகை, மோனை என்னும் இரண்டையும் உள்ளடக்கியது.
தொடை தவிர, கவிதைக்கு ஓர் ஓசை அழகு இருக்க வேண்டும். செய்யுளின் முக்கிய கூறாக இருப்பது ஓசை. அதனை "யாப்பிசை' என்றும் தமிழ் இலக்கணம் கூறுகிறது.
அணி இலக்கணம் என்றும் தமிழில் உண்டு. கவிதைகளில் உள்ள அழகு பற்றிக் கூறுவது அணி இலக்கணம். உவமை அணி என்றெல்லாம் பேசுகிறோமே, அது அணி இலக்கணத்தைச் சார்ந்ததுதான்.
இராமனது கவிதையில் இவை அனைத்தும் இருந்தன என்று வியக்கிறான் இராவணன்.
இப்போது காட்சிக்கு வாருங்கள். முதல் நாள் போரில் பங்கேற்க வேறு யாரையும் இராவணன் அனுப்பவில்லை. தானே சென்றான்.
ஆனால், கொஞ்சமும் அவன் எதிர்பார்க்காதது நடந்தது. இராமனிடம் தோற்றான். அது மட்டுமல்ல; எல்லா ஆயுதங்களையும் இழந்தான். வெறுங்கையனாக இராமன் முன் நின்றான்.
"இன்று போய், போருக்கு நாளை வா!' என்று அனுப்பினான் இராமன். தலைகுனிந்து அரண்மனைக்குத் திரும்பிய இராவணன், தனது படுக்கையில் மிகுந்த வருத்தத்துடன் சாய்ந்தான். மனம் முழுக்க நாணம் நிறைந்திருந்தது.
அவனது பாட்டன் மாலியவான், தனது பேரனைப் பார்க்க வந்தான்.
"முகம் வாட்டமுற்று, இவ்வளவு வருத்தத்துடன் இருக்கிறாயே.. என்ன நடந்தது?' என்று இராவணனிடம் கேட்டான் மாலியவான்.
மிகப் பெரிய வீரர்களிடம் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பினை, இராவணன் சொன்ன பதில்களில் கம்பன் வைத்தான். எந்த இராமனிடம் தோற்றுத் திரும்பினானோ, அந்த இராமனை மனம் நிறைந்து பாராட்டினான் இராவணன்.
எதிரிகளை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மட்டம் தட்டுவதுதான் இன்றைய பொதுவான நடைமுறை என்று ஆயிற்று. எதிரிகளைப் பாராட்டுவது என்பது ஓர் உயர்ந்த குணம்.
இராமனின் வீரத்தை, அழகை, அவன் வில்லில் இருந்து கிளம்பிய அம்புகளின் ஆற்றலை வியந்து, வியந்து தனது தாத்தாவிடம் சொன்னான் இராவணன்.
இராமனது வீரத்துக்கு எல்லையில்லை என்றான்; அவனது அழகுக்கு முன்னர், மன்மதனும், தானும் நாய் போன்றவர்கள் என்றான். அம்பின் ஆற்றலைப் பல விதமாக வியந்த இராவணன் சொன்னதாகக் கம்பன் வைத்த கவிதை இது:
நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து
அமர்ந்த நாமச்
சொல் என, செய்யுள் கொண்ட தொடை என,
தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ.
கம்பனின் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் இலக்கணம் சொல்வதைத் தொடக்கத்தில் இருந்து படித்துப் பாருங்கள்.
இராமன் வில்லில் இருந்து கிளம்பிய அம்புகள், அழகான தமிழ்க் கவிதையைப் போல் இருந்ததாகச் சொன்னான் இராவணன்.
தன்னைக் கொல்ல வந்த இராமனின் அம்புகளை, "அவை தமிழ் இலக்கணப்படி இராமன் எழுதிய கவிதைகள்!' என்று இராவணன் வியந்து பாராட்டுவதில், இரண்டு செய்திகளை நமக்குப் புலப்படுத்திவிடுகிறான் கம்பன்.
ஒன்று, இராமனின் சிறந்த வீரம்; மற்றது, பகைவனைப் பாராட்டும் இராவணனின் உயர்ந்த பண்பு!