முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கம்பனின் தமிழமுதம் - 42: தமிழரின் போர்க்கருவிகள்!

இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.

News image

கம்பர்

Updated On :27 ஏப்ரல் 2025, 4:58 pm IST

இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.

முற்காலப் போர்க்கருவிகள் வேறு வகை. "கைவிடுபடை', "கைவிடாப்படை' என்னும் இரண்டு வகை ஆயுதங்களையே போர்க்களங்களில் தமிழர்கள் பயன்படுத்தினார்கள் என்றே குறிப்புகள் சொல்கின்றன.

அம்பு, சன்னகம், கவண்டை போன்ற ஆயுதங்களான எய் படை; தன்னை நோக்கி வரும் எய் படையைத் தடுப்பதற்கு, கிடுகு, தோல், மாவட்டணம் போன்ற தடுக்கும் ஆயுதங்களான தடுபடை; எறியும் ஆயுதங்களான விட்டேறு, குந்தம், தோமரம் போன்ற எறிபடை; இந்த மூன்று வகைகளும் "கைவிடுபடை' என்பதற்குள் அடங்கும்.

குத்துப்படை, வெட்டுப்படை, அடுபடை, தடுபடை என்னும் நான்கு வகைகள், "கைவிடாப்படை' பிரிவில் சேரும். வேல், சூலம் போன்றவை குத்துப்படை; வாள், கோடரி போன்றவை வெட்டுப்படை; தண்டு, தண்டம், உலக்கை போன்ற அடிக்கும் ஆயுதங்கள், அடுபடை. கிடுகு, தோல், மாவட்டணம் போன்றவையே தடுபடை. கம்பன், தனது காப்பியத்தில் நிகழ்ந்த போர்களில், விதவிதமான, கைவிடுபடை மற்றும் கைவிடாப்படைகளின் பெயர்களைக் கூறுகிறான்.

சீதை அமர்ந்திருந்த சோலைக்குள் இராவணன் நுழைந்தான். பெண்கள் மட்டுமே இருந்த அந்த அசோகவனத்துக்குள், இராவணனின் பாதுகாப்புக்காகப் பெண் அரக்கியர் வந்தனர். பாதுகாப்பு அரக்கியரின் தோற்றத்தையும், அவர்கள் தலைகளின் மீது கொண்டு வந்த ஆயுதங்களையும் சொல்லும் கம்பன் பாடல்:

கேடகத்தோடு, மழு, எழு, சூலம்,

அங்குசம், கப்பணம், கிடுகோடு,

ஆடகச் சுடர் வாள், அயில், சிலை,

குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும்,

தாடகைக்கு இரட்டி எறுழ் வலி

தழைத்த தகைமையர், தட வரை

பொறுக்கும்

சூடகத் தடக் கை, சுடு சினத்து,

அடு போர், அரக்கியர்

தலைதொறும், சுமப்ப

தாடகையைப் போன்று இரண்டு மடங்கு வலிமையும், பெரிய கைகளையும், சினத்துடன் போர் செய்யும் தன்மையும் உடைய அரக்கியர், இராவணன் பாதுகாப்புக்காக இந்த ஆயுதங்களைத் தமது தலைகளில் சுமந்து வந்தனர்.

அடுத்ததாக, அசோகவனத்தை அழித்த அனுமனுடன் சண்டையிட அரக்க வீரர்களில் ஒருவனான சம்புமாலி என்பவனுடன் சென்ற வீரர்கள் கொண்டுபோன ஆயுதங்களின் பட்டியலைச் சொல்லும் ஒரு பாடலும், தொடரும் பாடலின் முதல் வரியும் இவை:

தோமரம், உலக்கை, கூர் வாள்,

சுடர் மழு, குலிசம், தோட்டி,

தாம் அரம்தின்ற கூர் வேல்,

தழல் ஒளி வட்டம், சாபம்,

காமர் தண்டுஎழுக்கள்,

காந்தும் கப்பணம், கால பாசம்,

மா மரம், வலயம், வெங் கோல்

முதலிய வயங்க மாதோ;

எத்திய அயில், வேல், குந்தம்,

எழு, கழு முதல ஏந்தி....

தொடர்ந்து, அக்ககுமாரன் அனுமனுடன் போரிடச் சென்றான். அவனுடன் சென்ற படையினர் கைகளில் இருந்த ஆயுதங்களையும், கும்பகருணன் போருக்குச் சென்றபோது, வீரர்கள் கொண்டுசென்ற ஆயுதங்களையும் கம்பன் குறிப்பிடுவதிலிருந்து அந்தக் காலத்தில், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, மிடல் வளை, சக்கரம், சூலம், உலக்கை, சூலம், சுடர்மழு, குலிசம், தோட்டி, வரி வில், வேல், கோல், ஈட்டி, வாள், விட்டேறு, மா மரம், வீசு பாசம், எழு முளை, வயிரத் தண்டு, காமரு கணையம், குந்தம், கப்பணம், கால நேமி, நாம வேல், நாஞ்சில், தண்டு, வாம வில், வல்லையம், கணையம், கேடகம், அங்குசம், கிடுகோடு, ஆடகச் சுடர் வாள், அயில், சிலை, கூர் வாள், அரம் தின்ற கூர் வேல், தழல் ஒளி வட்டம், சாபம், காமர் தண்டு எழுக்கள், காந்தும் கப்பணம், கால பாசம், வலயம், வெங் கோல், எத்திய அயில், கழு. இப்படி 50 வகை ஆயுதங்கள் பயன்பாட்டில் இருந்ததைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இவை தவிர, வேறு சில பாடல்களிலும், போர்களில் பயன்படுத்திய வேறு சில ஆயுதங்களையும் குறிப்பிட்டிருக்கிறான் கம்பன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.