பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தொடரும் சுரங்க விபத்துகள்!

பணியிடப் பாதுகாப்பு குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

In this photo released by Xinhua News Agency, a rescuer comes up from the coal mine shaft after conducting search and rescue operation following a gas explosion at the Liushenyu coal mine facility in Qinyuan county in Changzhi, northern China's Shanxi province on Sunday, May 24, 2026. (Cao Yang/Xinhua via AP

லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து - AP

Published On :

வடசீனாவின் ஷான்சி மாகாணம் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த 22-ஆம் தேதி நிகழ்ந்த எரிவாயு வெடிவிபத்தில் 90 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விரிவான மீட்பு நடவடிக்கை மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவுகளை சீன அதிபர் ஷி ஜின்பிங் பிறப்பித்துள்ளார்.

சீனாவில் இதற்கு முன்பு நிகழ்ந்த எண்ணற்ற சுரங்க விபத்துகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடுமையான விதிமுறைகள் காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக அங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

1942-இல் சீனாவின் பென்சிகு நிலக்கரிச் சுரங்க விபத்தில் நச்சு வாயு தாக்கி 1,549 பேர் உயிரிழந்தனர். இதுவே, உலகின் மிக மோசமான நிலக்கரிச் சுரங்க விபத்தாகக் கருதப்படுகிறது. 1960-இல் லாவ்பைடாங் சுரங்க விபத்தில் 684 பேரும்,

2005-இல் லியோனிங் மாகாணத்தின் சுன்ஜியாவான் சுரங்க எரிவாயு வெடிப்பு விபத்தில் 214 தொழிலாளர்களும், 2009}இல் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் ஹெகாங் சுரங்க விபத்தில் 108 தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

சீனாவின் பணிப் பாதுகாப்புக்கான மாநில நிர்வாகம், வருடாந்திர விபத்து கணக்கெடுப்பு மற்றும் அறிக்கைகளின் முடிவுகளை 2018-இல் வெளியிட்டது. இதன்படி, கடந்த 2001 முதல் 2018 வரை நிலக்கரி சுரங்கத் தொழிலில் 495 பெரிய விபத்துகளும், 10,546 உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டுமல்ல இது போன்ற விபத்துகள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் நிகழ்கின்றன.

1906-இல் பிரான்ஸ் நாட்டின் கோரியர்ஸ் சுரங்கத்தில் நிலக்கரி தூள் வெடித்ததில் 1,099 பேர் உயிரிழந்தனர். அதேபோல, 1914-இல் ஜப்பானின் மிட்சுபிஷி ஹோஜோ சுரங்க விபத்தில் 687 தொழிலாளர்களும், 1963-இல் மிட்சுய் மைக் சுரங்கத்தில் கார்பன் மோனாக்ஸைடு நச்சு வாயு தாக்கியதில் 458 பேரும் இறந்தனர். 1913-இல் வேல்ஸ் நாட்டின் செங்கென்த் சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடிப்பால் 439 பேரும், 1960-இல் தென்னாப்பிரிக்காவின் கோல்புரூக் சுரங்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 435 தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

இது போன்ற விபத்துகள் இந்தியாவிலும் நிகழாமல் இல்லை. 1965-இல் ஜார்க்கண்ட் மாநிலத்தின், தன்பாத் மாவட்டத்தில் உள்ள தோரி நிலக்கரிச் சுரங்கத்தில் தீக்காற்று மற்றும் நிலக்கரி தூசு வெடிப்பில் சிக்கி 375 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த விபத்து நேரிட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1975-இல் இதே தன்பாத் மாவட்டத்தின் சாஸ்னாலா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலக்கரி தூசு வெடிப்பு, கூரைத் தடுப்பைச் சேதப்படுத்தியதில், அதன் மீது இருந்த அதிகமான தண்ணீர் ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் சிக்கி 372 பேர் உயிரிழந்தனர்.

உலகளாவிய அளவில் ஆங்காங்கே சிறிய, பெரிய சுரங்க விபத்துகளில் பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

நிலக்கரி சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணங்களாக ஆபத்தான வாயுக்களின் கசிவு, போதிய காற்றோட்டம் இல்லாதது, நிலத்தடி வெள்ளம் ஆகியவற்றுடன் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத மனிதத் தவறுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலக்கரியில் இயற்கையாகவே இருக்கும் மீத்தேன் வாயு அல்லது நிலக்கரி தூசுகள் காற்றில் கலக்கும்போது தீப்பொறி ஏற்பட்டு பெரும் வெடிவிபத்துகள் நேர்கின்றன. அதேபோல, கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற ஆபத்தான நிறமற்ற மற்றும் மணமற்ற வாயுக்கள் வெளியேறுவதால், தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழக்கின்றனர்.

இவற்றுடன், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது, போதிய காற்றோட்ட வசதி இல்லாமல் சுரங்கத்துக்குள் செல்வது போன்ற நிர்வாக மற்றும் மனிதத் தவறுகளே பல விபத்துகளுக்கு மூல காரணங்களாக அமைவதாக விபத்துக்குப் பிந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் நிகழ்ந்துவரும் நிலக்கரி சுரங்க விபத்துகள், சுரங்கத் தொழிலாளர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன. வறுமை காரணமாகவோ அல்லது வேறு தொழில் வாய்ப்பு இல்லாததாலோ இது போன்ற ஆபத்தான, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சுரங்கப் பணி, பட்டாசு உற்பத்திப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொழில்நுட்பத்தில் முன்னணி நாடுகளாகவும், வளர்ந்த நாடுகளாகவும் உள்ள அமெரிக்கா, சீனா போன்றவற்றாலேயே இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியாத சூழல் உள்ளதால், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் நிலை குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. சுரங்க விபத்துகளுக்குக் காரணமான பாதுகாப்பை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து நாடுகளும் சீனாவில் நிகழ்ந்திருக்கும் விபத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பணியிடப் பாதுகாப்பு குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். பேரழிவு விபத்துகள் ஏற்படுவதை உறுதியாகத் தடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என அதிபர் ஷி ஜின்பிங் சீன அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல் சீனாவுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்குமானது.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

அஞ்சல் அறிவாா் தொழில்.

அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

திருக்குறள் (எண் 428) அதிகாரம்: அறிவு உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.