செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத் தோங்கும் வகையில் தம் திருவருட் பெரு வாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள். அவர் ஸ்ரீவைகுண்டத்தில் திருச்செந்தூர் முருகன் திருவருளால் கி.பி.1625-ஆம் ஆண்டு திரு அவதாரம் செய்தருளினார். அவர் அவதரித்து 400 ஆண்டுகள் கடந்து விட்டன.
தந்தையார் சைவ வேளாளர் குல திலகம் சண்முக சிகாமணிக் கவிராயர்; தாயார் அன்னை சிவகாமியம்மையார். கருவிலே திருவுடையாராயிருந்திடினும் ஐயாண்டு வரை அவர் பேச்சுத் திறனின்றி இருந்தமையால், உற்றாரும் மற்றோரும் செந்திலம் பதி சென்று அவன் திருவடியில் அடைக்கலம் புகுவித்தனர்.
செவ்வேள் அருள் கூர்ந்து சைவ சித்தாந்த உணர்வூட்டி 'குருபரன்' எனத் திருநாமம் சூட்டி அடை மழையென பேச்சைப் பொழிய வைத்தருளினார். அன்று தொட்டு அடிகளும் தூயதவ
மியற்றி துறவுமேற் கொண்டு வாழ்வாராயினார்; 'கந்தர் கலிவெண்பா' பாடினார். 'கயிலைக் கலம்பகம்' இயற்றினார்.
மதுரை மாநகர் சென்று கயற்கண்ணியம்மையைத் தரிசித்து அன்னையின் சந்நிதியில் 'மீனாட்சி பிள்ளைத்தமிழ்' பாடியருளினார். 'மீனாட்சியம்மை குறம்', 'மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை' பாடியருளினார்.
'நீதி நெறி விளக்கம்' யாத்து அரியநாயகிபுரம் என்ற ஊரும் பெற்றார்; திரு வாலவாய்ப் பெருமான் மேல் 'மதுரை கலம்பகம்' பாடியருளினார்.
அதன்பிறகு, திருச்சி சென்று வைணவப்பாவலர் பிள்ளைப் பெருமாள் ஐயங்காருடனும் அரசனுடனும் அளவளாவி காசுகளின் மீது விடையைப் பொறிக்க வைத்தார்; திரிசுரபுர நாயக்க மன்னர் பேரவையில் நிகழ்ந்த வாதப்போரில் இறை சிவனாரின் முழுமுதற் தன்மையை உறுதிப்படுத்தினார்.
திருவாரூர் சென்று தியாகேசரையும் புற்றிடங் கொண்டாரையும் வணங்கி 'திருவாரூர் நான்மணிக்கடிகை' யாத்தார்; 'வேளூர்' அடைந்து பிணி நீக்கும் மருந்தீசரையும், தையல் நாயகியம்மையையும் வணங்கி குமரவேள் ஆணையேற்று 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' யாத்தருளினார்.
தில்லை யேகி 'சிதம்பர மும்மணிக் கோவை', 'சிதம்பரச் செய்யுட்கோவை', 'சிவகாமியம்மை இரட்டை மணிமாலை' யாத்துப் போந்தார். அடுத்து, தருமபுர ஆதீனமேகி ஆதீனத் தலைவர் மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்று, அன்னார் மேல் 'பண்டார மும்மணிக்கோவை' பாடி, பெரும் பொருள்களுடன் காசி சென்றார்.
கங்கையில் நீராடி விசுவேசரை வணங்கி, துண்டி விநாயகர்பால் ஓர் திருப்பதிகமும், சிவனார் மேல் 'காசிக்கலம்பகமும்' பாடியருளினார். வெண்கமலச் செல்வியை வணங்கி 'சகலகலாவல்லி மாலை' பாடி அவள் பேரருளால் இந்துத்தான் மொழியறிவு பெற்று, காசிவேந்தனை நேரில் கண்டு பேசி அறச்செயல்களாற்ற தக்க இடம் பெற்றார்.
துருக்கிய குருக்களிடம் அன்னார் மொழியில் பேசி, ஐயம் தீர்த்து, சிங்க முதுகிலேறிச் சென்று, மகம்மது மன்னனைக் கண்டுபேசி திருமடமொன்று பெற்றார்.
இமய மலைச்சாரலில் திருமடத்தை அமைக்க வழிவகுத்தார். தம் புவி வாழ்வின் முடிவை உணர்ந்த அடிகள் தமக்குப்பின்னும் செவ்வனே அறப்பணிகள் தொடர ஆவன செய்து 1688 வைகாசித் திங்களில் தேய்பிறை மூன்றாம் நாளில் விசுவேசர் திருவடி நிழலில் மீளாத் துயில் கொண்டார்.
தென்காசி தங்கப்பாண்டியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.