
அரியவற்றைப் பிறர் மனங்கொள்ளுமாறு எளிமையாகச் சொல்லுதலும், பிறர் கூறும் அரிய கருத்துகளின் நுட்பத்தை விளங்கிக் கொள்ளுதலும் அறிவுடைமையாகும் என்கிறார் திருவள்ளுவர்.
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு (424)
என்பது குறள்.
வேதப் பயன்கொள்ளவல்ல விட்டு சித்தன் (201) என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளும் பெரியாழ்வாரும் இத்தகைய அறிவுபடைத்தவராகவே விளங்குகிறார். தாம் சொல்ல வந்த கருத்து எத்துணை நுட்பமுடையதாயினும், அதைக் கற்போர் மனம் கொள்ளுமாறு பழகு தமிழ்ப் பாசுரங்களாக்கித் தருவது அவருக்குக் கைவந்த கலை.
கண்ணன் என்னும் தெய்வக் குழந்தை படுத்தும்பாடுகளை வளர்ப்புத் தாய் யசோதையாக மாறி உலகியலுக்குப் பொருந்துமாறு அவர் நூற்றுக்கணக்கில் பாடிய பிள்ளைத் தமிழ்ப் பாசுரங்களே இதற்குச் சான்று. அவற்றுள்ஒன்று:
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்! (21)
தொட்டிலிலும் கிடக்க மாட்டான்; இடுப்பிலும் இருக்க மாட்டான். அவனது கைகால்களை ஒடுக்கி மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாலும் திமிறிக் கொண்டு கால்களினால் வயிற்றில் எட்டி உதைக்கிறான். இவனது இச்செயல்களைத் தாங்கும் மிடுக்கு (வலிமை) இல்லாமையினாலே நான்மெலிந்தேன் என்கிறாள் யசோதை. தன் பிள்ளையின் செயல்களைக் குறித்து பெருமிதமாகப் பேசும் தாயின் குரலையே இதில் கேட்கிறோம்.
உலகியலில் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாட்டு எழுத்து இலக்கியத்தில் ஏறியதற்கும் பெரியாழ்வாரின் திருமொழி சான்றாகிறது.
மாணிக்கம் கட்டிவயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னாற் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்,
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ! (44)
இங்ஙனம் பெரும்பாலும் உலக நடப்பை அனுசரித்துப் பாடுவதாகவே பெரியாழ்வாரின் பாசுரங்கள் அமைந்திருப்பதை அவரின் திருமொழிகளில் காணலாம்.
காரிகையீர் வந்து காணீரே! (25)
கனங்குழையீர் வந்து காணீரே! (34)
என்று குழந்தை கண்ணனின் திருப்பாதாதி கேச வண்ணத்தைக் காணுமாறு பெண்களை அழைப்பதும்,
ஐய! எனக்கொருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுகவே! (64)
என்று கண்ணனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுவதும் பேச்சுமொழியை நினைவூட்டும் பாங்கில் அமைந்தவையே.
'தாய் சொல்லுக் கொள்வது
தன் மங்கண்டாய் தாமோதரா!
இங்கே போதராயே!' (209)
'ஐயா! உன்னைஅறிந்து கொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே' (226)
'ஆழியங்கையனே அச்சோ! அச்சோ!'
'கோவிந்தன் தன் குழல்வாரய் அக்காக்காய்'
'அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்'
'கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்'
'பெருப்பெருத்த கண்ணாலங்கள் செய்து'
என்பன இதற்கான மேலதிக உதாரணங்கள் ஆகும்.
இன்றும் வழக்கில் உள்ள 'சிறுக்கி' என்னும் பெண்பாற் சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக 'சிறுக்கன்' என்று கண்ணனை, இவர் குறிப்பிட்டிருப்பது கவனத்தில் (60; 278) கொள்ளத்தக்கது. இன்று இது வழக்கில் இல்லாத போதிலும் ஆழ்வார் காலத்து வழக்குச் சொல்லாக இருந்ததை உணர்த்தும் வரலாற்றுக் குறிப்பு இது.
இனி தம்மருகே இருப்பவரிடம் இயல்பாக உரையாடுவது போன்ற பாவனையில் அவர் பாடிய பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்:
துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்;
எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கு
ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்;
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்,
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (423)
அடியாரைக் காப்பதில் திறமை படைத்தவரான தேவரீரை அடைந்தது அந்திம காலத்தில் துணையாயிருப்பீர் என்ற எண்ணத்தினால் அன்றோ!
இவ்வாறு துணை பெறுவதற்குரிய அடியார்களுக்கு நான் ஒப்பாக மாட்டேன். ஆயினும், யானையைக் காத்தது போல் என்னையும் நீ காக்க வேண்டும் என்று சரணம் புகுந்தேன்.
வாத பித்த சிலேட்டுமங்களால் நெஞ்சடைக்கும் போது, தேவரீரைக் கொஞ்சமேனும் நினைக்க மாட்டேன்.
ஆகையால், பொறிபுலன்கள் செவ்வையாய் இருக்கும் இக்காலத்திலேயே அடியேனுடைய விண்ணப்பத்தைச் சொல்லிவைத்தேன் என்கிறார் ஆழ்வார்.
'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்' என்ன சமத்காரமான பேச்சு! 'அப்பா! நாளைக்குச் சொல்ல வேண்டியதை நான் இன்றைக்கே சொல்லிவிட்டேன்' என்பது போன்ற உலக நடையில் உள்ள பேச்சை} இது நினைவூட்ட
வில்லையா?
உன்னை, நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் (470) என்று இறைவனிடம் பேசியவர் பெரியாழ்வார்.
வைகுந்தத்து அமரருள் ஒருவனாகத் தம்மையும் வைப்பதற்கு இறைவன் மனம்வைக்க வேண்டும் என்னும் கருத்தைப் பெரியாழ்வார் பேச்சு மொழியில் இறைவனிடம் முன்வைக்கும் இடம்தான்இது.
இத்தகைய இடங்களைக் கருதியே, ஆழ்வார்களிலேயே நாட்டார் கலைகளோடும் உணர்வுகளோடும் மிகவும் நெருங்கிவருபவர் இவர் ஒருவர் மட்டுமே என்று மேலைநாட்டு ஆய்வாளரான டேவிட் சுல்மன் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.