மகாத்மா மரணித்த போது...

உலகில் எந்தத் தலைவருக்கும் சுயநலமற்ற பொது நலன் பேணும் வாரிசுகள் அமையப் பெற்றதில்லை.
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
Updated on
2 min read

இன்று 2026 ஜனவரி 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. மகாத்மா காந்தி என்கிற மனிதப் புனிதர் மறைந்து 78 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த மண்ணில் அவர் வாழ்ந்தது 78 ஆண்டுகள் மூன்று மாதம் 28 நாள்களே! ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து சாதிக்க முடியாததை சாதித்துக் காட்டிய சரித்திர நாயகன் அவர்! "நான் ஒரு சாதாரண மனிதன்' என்று சொன்னார்; சொன்னபடியே வாழ்ந்து மறைந்தார்.

மகாத்மா மரணித்த போது, முதலாவது மகன் ஹரிலாலுக்கு வயது 59; இரண்டாவது மகன் மணிலாலுக்கு வயது 55; மூன்றாவது மகன் ராமதாஸுக்கு வயது 50; நான்காவது மகன் தேவதாஸுக்கு வயது 47.

மகாத்மா மறைந்த நாளன்று அவரது மூத்த மகன் ஹரிலால் மும்பையில் ஒரு தெருமுனை தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். "துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மகாத்மா மரணமடைந்தார்' என்ற செய்தியை வானொலி வாயிலாகக் கேட்டார்.

உடனடியாக குவளையைத் தூக்கி எறிந்து விட்டு, "என் தந்தையைக் கொன்றவனை, நான் கொல்லாமல் விடமாட்டேன்; பழிக்குப்பழி வாங்கியே தீருவேன்' என்று கூச்சலிட்டார்.

இரவோடு இரவாக புதுதில்லிக்கு விரைந்தார்: இறுதிச் சடங்குகள் முடிந்த அடுத்த நாள் - பால் ஊற்றி அஸ்தி எடுக்கும் நாளன்றுதான் புதுதில்லி சேர்ந்தார். தன் தம்பி தேவதாஸ் வீட்டுக்குச் சென்றார்; தேவதாஸின் மனைவி லட்சுமியைப் பார்த்து, தேம்பி தேம்பி அழுதார். எதுவும் பேசவில்லை.

அழுகையைக் குறைப்பதற்காக லட்சுமி அம்மாள் "அஸ்தி எடுக்கும் சடங்குக்காவது நீங்கள் போக வேண்டும்! குடும்பத்தோடு நீங்களும் செல்வது நல்லதாயிற்றே' என்றாள்.

அதற்கு, "இல்லை, என் தம்பிகளே அந்தச் சடங்கைச் செய்யட்டும்; அந்தப் பெருமையைப் பெறுவதற்கு நான் தகுதியற்றவன்; நான் ஒரு பாவி! அந்த பாக்கியத்தைப் பெற நான் கொடுத்து வைக்கவில்லை' என்றார்.

காசநோய் பாதிப்புக்கு உள்ளாகி, மும்பை நகராட்சி மருத்துவமனையில் 5 மாதங்கள் கழித்து 18-06-1948 அன்று ஹரிலால் இறந்து விட்டார். வாழும்போது தந்தை சொல்லைக் கேட்காத மகன், மறையும் போது தந்தையை நினைத்து நினைத்து சோகத்தோடும், ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும் மறைந்தார்.

மகாத்மாவின் மரணத்தின்போது, இரண்டாவது மகன் மணிலால் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். பீனிக்ஸ் ஆசிரமத்தின் நிர்வாகியாகவும், இந்தியன் ஒப்பினியன் இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். அண்ணல் உருவாக்கிய உண்மையான, உன்னதமான சமூக நலப் போராளி அவர். 25 முறை அரசால் கைது செய்யப்பட்டவர்; சுமார் 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர், அண்ணல் நடத்திய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று 9 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். மகாத்மா காந்தி உள்பட எவருமே இவ்வளவு அதிக காலம் சிறைவாசத்துக்கு உள்ளாகியவர் அல்லர்.

"மணிலால் வழியாகவே நான் காந்தியைக் கண்டேன்' என்றார் தென்னாப்பிரிக்காவின் தேசப் பிதாவாகக் கருதப்படும் நெல்சன் மண்டேலா.மரணச் செய்தி கேட்டபோது, மணிலால் மனம் வருந்தினார். இந்தியாவுக்கு வரவில்லை; தன் கடமையைத் தொடர்ந்தார் மணிலால். "என் தந்தையை இழந்து விட்டேன்; என்துயரத்தை விளக்க இயலாது. அவரது உடல் மறைந்து விட்டது; ஆனாலும், அவரது ஆன்மா உலகை என்றும் வழிநடத்துமாக!' எனப் பதிவு செய்துள்ளார்.

மகாத்மாவின் மரணத்தின்போது, அவரது மூன்றாவது மகன் ராமதாஸ் செய்தி அறிந்தவுடன், தன் மனைவி நிர்மலா பென்னுடன் நாகபுரியிலிருந்து புதுதில்லிக்கு விரைந்தார்.

இவர்தான் மகாத்மாவின் ஈமக்கிரியைகளைச் செய்தவர். கங்கையில் அண்ணலின் அஸ்தியைக் கரைத்ததும் இவரே. ஆரம்பத்தில் இவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தது. ஆனால், தன் வாரிசுகள் அதிகார அரசியல் பீடத்துக்கு வரக் கூடாது என்பதில் மகாத்மா காந்தி உறுதியாக இருந்தார். அதை முழுமையாக ஏற்றுக் கொண்ட ராமதாஸ், தன் மனைவி நிர்மலா பென்னுடன் இணைந்து வார்தாவின் சேவா கிராமம் ஆசிரமத்தை, தன் வாழ்நாள் இறுதிவரை நடத்தினார். ஆசிரமத்தை தன் உழைப்பின் மூலம் ஈட்டிய வருமானத்தைக் கொண்டே நடத்திய முன்மாதிரி சமூக சேவகராகத் திகழ்ந்தார்.

அண்ணலின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி ஆரம்பம் முதல் இறுதிக்காலம் வரை தனது தந்தையுடன் இருந்தவர். மகாத்மா காந்தியின் நெருக்கமான உதவியாளராகவும், கிட்டத்தட்ட நண்பராகவும் இருந்தார். புகழ்பெற்ற புணேஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியின் சார்பில் கையொப்பமிட்டவர் இவரே!

அண்ணல் விரும்பியபடி, வாழ்வில் எந்தவித அதிகாரத்தையும் அடைய எண்ணாதவர். சலிப்பில்லாத ஓர் அரசியல் போராளி அவர். ராஜாஜியின் மகள் லட்சுமியை மணந்தவர். "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில், தன் இறுதிக்காலம் வரை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். காந்தியக் கொள்கைகளை உலகெங்கும் பரப்ப பெரும் முயற்சி எடுத்தவர். தேவதாஸின் வாரிசுகள் தாரா காந்தி, ராஜ்மோகன் காந்தி, ராமச்சந்திர காந்தி, கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோர். காந்தியில் தொடங்கி, மூன்று தலைமுறையைச் சார்ந்த அவரது வாரிசுகள் காந்தியத்தை உலகெங்கும் இன்றுவரை பரப்பி வருகிறார்கள். உலகில் எந்தத் தலைவருக்கும் இத்தகைய சுயநலமற்ற பொது நலன் பேணும் வாரிசுகள் அமையப் பெற்றதில்லை.

வாழ்க காந்தியம்! வளர்க மானுடம்!

இன்று (ஜன.30) மகாத்மா காந்தி நினைவு தினம்

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com