நிலத்தின் வளப்பமும் திணைமயக்கமும்

திணை என்னும் சொல்லுக்குக் குடி, பகுப்பு, நிலம், குலம், ஒழுக்கம், வீடு எனப்பல பொருள்கள் உண்டு.
நிலத்தின் வளப்பமும் திணைமயக்கமும்
Published on
Updated on
2 min read

திணை என்னும் சொல்லுக்குக் குடி, பகுப்பு, நிலம், குலம், ஒழுக்கம், வீடு எனப்பல பொருள்கள் உண்டு. எனினும் தமிழ் இலக்கிய நோக்கில் அகம், புறம் ஆகிய இரு திணைகளைக் குறிப்பதாகவே இது அமையும்.

'திணைகொள் செந்தமிழ்' என்பது சுந்தரர் தேவாரம். இதற்குத் திணை வரையறை கொண்ட செந்தமிழ் எனப் பொருள் கூறுகிறது தேவாரச் சொல்லகராதி.

தமிழ்நிலப்பரப்பு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு பகுப்பினை உடையது. ஆதலின் நிலப்பகுதி முழுவதையும் ஒருசேர 'நானிலம்' எனக் குறிக்கும் வழக்கு எழுந்தது. பாலைக்குத் தனியே நிலமில்லை.

முல்லையும் குறிஞ்சியும்

முறைமையின் திரிந்து...

நல்இயல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் (11:64-66)

எனக் கூறுகிறது சிலப்பதிகாரம். இதனையே,

நானிலம் வாய்க்கொண்டு நன்னீர்அற

மென்று கோதுகொண்ட

வேனிலஞ் செல்வன் சுவைத்தமிழ் பாலை

எனச் சித்தரிக்கிறது நம்மாழ்வாரின் திருவிருத்தம். 'வேனிலாகிய செல்வன் நானிலத்தையும் தன் வாயினுள் அடக்கிக் கடித்துச் சுவைத்து நெடுநேரம் நீர் அறமென்று தீர்த்துக் கடைசியில் பற்றும் பசையும் அற்ற நிலையில் 'தூ' என்று துப்பிய சக்கையே பாலை நிலம்' என்பது இதன் பொருளாகும்.

இத்தகைய நானிலங்களும் ஒன்றோடொன்று நெருங்கிக் கலந்து (மயங்கி) இருப்பதே ஒரு நாட்டுக்கு அழகும் வளமும் சேர்ப்ப

தாகும்.

அத்தகைய நாட்டுக்குரிய அரசனே புலவர் போற்றும் புகழுக்கும் உரியவன் ஆவான்.

நாடன் என்கோ? ஊரன் என்கோ?

பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ?

யாங்கனம் மொழிகோ

ஓங்குவாட் கோதையை?

புனவர் தட்டை புடைப்பின் அயலது

இறங்கு கதிர் அலமரு கழனியும்

பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே! (49)

புறநானூற்றில் சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் என்னும் புலவர் பாடிய பாடல் இது.

குறிஞ்சி நிலமுடைமையால் 'நாடன்' என்று சொல்லுவேனா? மருத நிலமுடைமையால் ஊரன் என்று சொல்லுவேனா? நெய்தல் நிலமுடைமையால் ஒலிமுழங்குகின்ற குளிர்ந்த கடலையுடைய சேர்ப்பன் என்று சொல்லுவேனா? எவ்வாறு சொல்லுவேன் மேம்பட்ட வாளினையுடைய கோதையை. இங்கு 'நாடன்' என்றது குறிஞ்சியோடு முல்லை நிலத்தையும் குறிக்கின்றது என்பர் உரைகாரர்.

இவ்வாறு தாம் மயங்குதற்குக் காரணமான திணைமயக்கத்தைக் கடைசி மூன்றடிகளால் சுவைபடச் சொல்லுகிறார் புலவர். புனங்காப்போர் தினைகவர வரும் கிளிகளைத் துரத்துவதற்காகத் 'தட்டை' என்னும் கிளிகடி கருவியை அடித்து ஓசையெழுப்புகின்றனர். அவ்வோசை கேட்டுக் கிளிகள் மட்டுமா எழுந்து பறந்தன? இல்லை. அயலே உள்ள நெல்வயல்களிலும் கடற்கரையிலும் இருந்த பறவைகளும் ஒருங்கே எழுந்து பறந்ததாகப் பாடுகிறார் புலவர்.

தினைப் புனங்காப்போர் (புனவர்) தட்டை புடைப்பின் மருதத்திலும் நெய்தலிலும் உள்ள புள்ளெழுமாதலால் கோதையை நான் எப்படிப் புகழ்வேன் என்கிறார் பொய்கையார்.

நானில வளமும் உடையவன் சேரமான் கோக்கோதை என்பதை நயம்படவுரைக்கும் பாடல் இது.

இதுபோன்ற சிறு பாடல்களில் மட்டுமன்றிப் பொருநராற்றுப்படை போன்ற நெடும் பாட்டுகளிலும் திணைமயக்கம் பேசப்பட்டிருத்தலைக் காணலாம்.

பொருநராற்றுப்படையில் 180-ஆம் அடி தொடங்கி 225-ஆம் அடிமுடிய திணைமயக்கம் கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதி வருமாறு: தேனாகிய நெய்யோடு கிழங்கையும் கொண்டு போய் விற்றவர்கள்- அதற்கு மாற்றாக மீனின் நெய்யையும் கள்ளையும் வாங்கிச் சென்றனர். இனிய கரும்போடு அவலையும் கூறுகட்டி விற்றவர்கள் அதற்கு விலையாக மான்கறியோடு கள்ளையும் வாங்கிச் சென்றனர்.

குறிஞ்சி நிலத்துப் பண்ணை நெய்தல் நிலத்துப் பரதவர் பாடினர்; நெய்தல் நிலத்து நறுமணப் பூக்களால் தொடுத்த மாலையைக் குறிஞ்சி நிலத்துக் கு(ன்)றவர் தம் தலையிற் சூடினர்.

முல்லை நிலத்துக் கானவர் மருத நிலத்துப் பண்ணைப்பாட, மருத நிலத்து உழவர்கள் முல்லைக் கொடி படர்ந்த காட்டு நிலத்தை விரும்பிக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்துவரும் திணைமயக்க வருணனை நூலில் முடிமணியாய் அமைந்து சிறக்கின்றது.

கானக் கோழி கதிர் குத்த

மனைக் கோழி தினைக் கவர

வரைமந்தி கழிமூழ்கக்

கழி நாரை வரைஇறுப்பத்

தண்வைப்பின் நால் நாடு குழீஇ

எனப் பாடுகிறார் முடத்தாமக் கண்ணியார்.

காட்டுக் கோழிகள் நெற்கதிர்களைக் கொத்தித்தின்ன, வீட்டுக் கோழிகள் தினையரிசியைக் கவர்ந்து உண்டனவாம். மலைவாழ் மந்திகள் கழிமுகத்திலே மூழ்கவும், கழிமுகத்தில் திரியும் நாரைகள் மலையிலே சென்று தங்கினவாம். இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு கூறாகிய நாடுகளும் தனக்கு உரியனவாக ஒருகுடைக்கீழ் அடங்கி இருக்க, அவற்றை ஆட்சித்திறத்துடன் ஆண்டுவந்தான் கரிகாற்பெருவளத்தான் என்கிறார் புலவர்.

திணைமயக்கம் கூறுமிடத்து ஆசிரியப்பா, வஞ்சிப்பா ஆகிய இரு பாவகைகளையும் பயன்படுத்தியிருக்கிறார் முடத்தாமக் கண்ணியார். இதனைச் சுட்டிக்காட்டும் உரையாசிரியர்

ப.சரவணன். (பொருநராற்றுப்படை, தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு, 2023) திணைமயக்கம் பாடுதற்குப் பாமயக்கத்தைப் பயன்படுத்திய முடத்தாமக் கண்ணியாரின் கவிதை நுட்பம் போற்றுதற்குரியது என்று பாராட்டியிருப்பது இங்குச் சுட்டிக் காட்டத்தக்கதாகும்.

இத்தகைய திணைமயக்கம் கம்பராமாயணம் போன்ற பிற்காலத்துக் காப்பியங்களிலும் காணப்படுகின்றது.

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி

மருதத்தை முல்லை ஆக்கிப்

புல்லிய நெய்தல் தன்னைப் பொருவரு

மருத மாக்கி (ஆற்றுப்படலம் 17)

என்று ஆற்று வெள்ளத்தின் இயல்பை வருணிக்கிறார் கம்பர். சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஒரு நிலத்துப் பொருள்களை மறுநிலத்துக் கொண்டு சேர்க்கும் இயல்பு இங்கே கூறப்படுகிறது. இதனையே திணை மயக்கம் எனச் சுட்டிக் காட்டுவார் உரைகாரர்.

இத்தகைய திணைமயக்கம் சார்ந்த பாடல்களைக் குற்றாலக்குறவஞ்சி போன்ற பிற்காலத்துச் சிற்றிலக்கியங்களிலும் காணலாம்.

சூழ மேதி இறங்குந் துறையிற்

சொரியும் பாலைப் பருகிய வாளை

கூழை வாசப் பலாவினிற் பாயக்

கொழும்ப லாக்கனி வாழையிற் சாய

வாழை சாய்ந்தொரு தாழையில் தாக்க

வருவி ருந்துக் குபசரிப் பார்போல்

தாழை சோறிட வாழை குருத்திடும்

சந்த்ர சூடர்தென் ஆரிய நாடே.

என்னும் திருக்குற்றாலக் குறவஞ்சிப் பாடல் இதற்கு ஏற்றதொரு சான்று ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com