5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஹைபுன் - ஓர் அறிமுகம்

ஹைபுன் என்பது உரைநடையும், ஹைக்கூவும் இணைந்த ஓர் இலக்கிய வடிவம். இதனை ஜப்பானில் ஹைக்கை உரைநடை என்றும் அழைப்பர்.

கோப்புப் படம்

Updated On :

முனைவர் பல்லவிகுமார்

ஹைபுன் என்பது உரைநடையும், ஹைக்கூவும் இணைந்த ஓர் இலக்கிய வடிவம். இதனை ஜப்பானில் ஹைக்கை உரைநடை என்றும் அழைப்பர்.

ஜப்பானிய இலக்கிய கலைக் களஞ்சியத்தின்படி, 'தங்கா' கவிதையுடன் உரைநடை கலந்து எழுதும் வழக்கம் பத்தாம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது. அதன்பின், ஹைக்கூவோடு உரைநடை கலந்து எழுதும் வழக்கம் வந்துள்ளது. ஜப்பானின் முதல் ஹைபுன் தொகுதி டாகாராகுரா. இதனை யமோகா ஜென்ரின் (1637-1672) எழுதியுள்ளார்.

ஹைபுன் பற்றிய முதல் வரலாற்றுத் திரட்டு நூல் 1706-இல் வெளிவந்துள்ளது. இதன் பெயர் 'பிர்சோவ்கு மான்சென்'. இதனை மொரிகவா கொய்ரோகு என்பவர் தொகுத்துள்ளார். ஜப்பானிய துறவியான பாஷோ ஹைக்கூ முதல்வராகப் போற்றப்பட்டார். அவர் இவ்வடிவில் எழுத ஆரம்பித்தவுடன் ஹைபுன் மிகவும் பிரபலமானது. இதனால் அவருக்குப் பின் வந்தவர்களும் இந்த வடிவினைப் பின்பற்றலாயினர். கீஜின் (1624-1705) எழுதிய உரைநடைகள்கூட ஹைபுன் வடிவத்தையும் ஒத்திருந்தன.

பாஷோவின் பிற்காலத்திய சீடரான ஷிகோ (1717) ஹைபுன் முயற்சியில் ஈடுபட்டு படைப்புகளை உருவாக்கி உள்ளார். பின்னர், சைக்யோ, யோகையாவூ, பூசன், ஷிகி போன்றவர்களும் ஹைபுன் எழுதியுள்ளனர். பூசன் எழுதியுள்ள ஹைபுன் ஒன்று 'தி பாத் ஆஃப் புளவரிங்தார்ன்' என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

பாஷோ பண்டைய ஜப்பானின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்துள்ளார். அதனை ஹைபுன் வடிவில் எழுதி வைத்துள்ளார். அவை பயணக் கட்டுரைகளாகவும், பயணம் பற்றிய குறிப்புகளாகவும், வரைபடக்காட்சிகள் போன்றும், பாரம்பரியப் பெருமைகளாகவும், ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பதிவுசெய்யும் இலக்கிய வடிவமாகவும்

இருந்து வருகின்றன. இதில், மிகவும் பிரபலமான நூல் 'ஒகு நோ ஹோùஸாமிசி' ஆகும். இதற்கு 'குறுகிய பாதையின் வழியே பயணம் செல்லுதல்' என்று பொருள்.

பாஷோ எழுதிய இன்னொரு நூல் 'ஜென் ஜான் நோ கி'. இதனை ஒரு கட்டுரை வடிவில் எழுதியுள்ளார். அவருடைய மற்றொரு நூல் 'சாகா நிகி'. இதில் அவர் தாம் நாள்தோறும் செய்யும் கடமைகளை தமது சீடர்களுக்காகவும், தமது எதிர்கால திருப்புதலுக்குமென எழுதியுள்ளார். அவருடைய காலத்திலேயே ஹைபுன் எழுதுபவர்களின் எண்ணிக்கை விரிவடையத் தொடங்கியது. அது சுயசரிதை, நாட்குறிப்பேடு, வரலாறு, கட்டுரை, உரைநடை கவிதை, குறுங்கவிதை மற்றும் பயணக் கட்டுரை இவற்றையும் கடந்த ஓர் இலக்கிய வடிவமாக மாறியுள்ளது.

ஹைபுன் என்பது ஒரு காட்சியை அல்லது ஒரு நிகழ்வினை வெளிப்படுத்தும் கவித்துவமான ஒரு பதிவாகும். இப்பதிவினை அழகுணர்வுடன் ஒரு கதையினைப் போல பதிவு செய்ய வேண்டும். இது வாசகர்களின் மனதில் எளிதில் பதிவாகி தொடருகின்ற ஒரு சுகமான அனுபவத்தை வழங்க வேண்டும்.

ஹைபுன் எழுதும்போது, அதில் இடம்பெறும் ஹைக்கூ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உரைநடையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். உரைநடையும் ஹைக்கூவோடு தொடர்புடைய குறிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

பண்டைய ஜப்பானில் ஹைபுன் என்பது தனிமனித உணர்வுகளின் ஒரு பதிவாக இருந்துள்ளது. இது வாழ்வியல் குறித்தான சிறப்புத் தருணங்களின் வெளிப்பாடாகவும் பதிவாகியுள்ளது. அக்காலத்தில் ஹைபுனில் இருக்கும் உரைநடையைக் கொண்டு அதனை இரு வகைகளாகப்

பிரித்துள்ளனர். முதல் நிலையில், முதலில் உணர்வுமிக்க உரைநடையை உருவாக்கியுள்ளனர். அதன்பின் அந்த உரைநடைக்கு ஏற்ப பொருத்தமான நல்ல ஹைக்கூவை எழுதியுள்ளனர்.

இரண்டாம் நிலையில், ஹைக்கூவை முதலில் எழுதியுள்ளனர். அந்த ஹைக்கூவிற்கேற்ற உரைநடையை எழுதி ஹைபுனாக மாற்றி உள்ளனர். ஹைபுன் உருவான காலத்தில் இது ஒரு கட்டுரை வடிவம் போல்கூட இருந்திருக்கிறது. பிற்காலத்தில் எழுதப்பட்ட ஹைபுன்களில் ஐந்து உரைநடைப் பத்திகள் வரை இருந்துள்ளன.

அதே அளவிலான ஹைக்கூ கவிதைகளும் அதில் இடம்பெற்றுள்ளன. உரைநடை பத்திகளின் அளவு குறித்தும் வரிகளின் குறைந்தபட்சம் அல்லது அதிகபட்ச அளவு குறித்தும் எந்த விதிமுறைகளும் அப்போது இல்லை. ஆனால், உரைநடையின் ஒவ்வொரு வார்த்தையும் பலமுறை யோசித்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஓர் உரைநடைக் கவிதையாகவே கருதியுள்ளனர்.

தற்போது பெரும்பான்மையான ஜப்பானிய ஹைபுன்களில் ஒன்று அல்லது மேற்பட்ட சிறு உரைநடைப் பத்திகள் உள்ளன. அதனுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு நல்ல ஹைபுனில் உள்ள உரைநடைப்பகுதி ஹைக்கூவை விட்டுக் கொடுக்கக் கூடாது. அது ஹைக்கூவோடு இணைந்து காட்சியைப் புலப்படுத்த வேண்டும். ஹைக்கூவும் உரைநடையின் அனுபவத்தையும், பொருளையும் உணர்த்துவதாக இருக்க வேண்டும். ஹைபுன் வடிவில் இடம்பெற்றுள்ள சொற்களை மீண்டும் ஒருமுறை வேறுபொருளில் கூட பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஹைபுன் மற்றும் உரைநடை இடையிலான தொடர்பு பெரும்பாலும் நேரடியாக இருக்கும். சில நேரம் இது குறித்த ஒரு மெல்லிய உணர்வு மட்டும் இவற்றுக்கிடையே அமைந்திருக்கும்.

உரைநடைப்பகுதி பெரும்பாலும் முதலில் இடம்பெற்றிருக்கும். உரைநடையை சுருக்கமாக அமைக்கும் முறை பிற்காலத்தில் உருவானதுதான். ஹைபுன் ஒரு காட்சியை அல்லது சில நிகழ்வுகளை கலையுணர்வுடன் பதிவுசெய்யும் ஓர் இலக்கிய வடிவம். சில நேரங்களில் உரைநடைக்கும் ஹைக்கூவிற்கும் இடையே முரண் யுக்தியைப் பயன்படுத்துவதும் உண்டு. இது ஹைபுன் குறித்தான அழகுணர்வை மேலும் சிறப்புடன் வெளிப்படுத்தும்.

ஹைபுன் எழுதும்போது நேரடியாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், ஒரு படத்தை வரைவதைப் போல சூழலை விவரிக்க வேண்டும். இந்த விவரம்தான் படைப்பாளியின் கற்பனை மற்றும் அனுபவத்தினை உணரும் விதமான சூழலைக் கொடுக்கும்.

ஜப்பானிலும், உலகெங்கிலுமுள்ள ஆங்கில ஹைக்கூ படைப்பாளிகளும், ஹைக்கூவின் தொடர்ச்சியாகவும், தங்கள் அனுபவத்தின் முதிர்ச்சியாகவும் ஹைபுன் எழுதி வருகின்றனர். அனுபவத்தின் வெளிப்பாடுகளாக அவை அழகுபெறுகின்றன. முதன்முதலாக தமிழில் ஹைபுன்

எழுதும் முயற்சி 'இனிய ஹைக்கூ' (ஜனவரி 2001) இதழில் இடம்பெற்றது.

ஆரம்பகால தமிழ் ஹைபுன் முயற்சிகளில் தலைப்பு இல்லாமலேயே ஹைபுன் எழுதப்பட்டது. ஆங்கில ஹைபுனின் தாக்கம் ஏற்பட்டதன் விளைவாக, தலைப்பிட்டு ஹைபுன் எழுதும் வழக்கம் தமிழிலும்

ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.