புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது!
file photo
file photo
Published on
Updated on
1 min read

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

அந்த வகையில், உணரத்தகும் எடுத்துக்காட்டுகள் பலவற்றுள்ள தந்தை மக்கள் கலாம் (போர்) என்னும் நினைவூட்டை புறநானூற்றின் 213-ஆவது பாடல் பதிவு செய்கிறது.

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்

வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!

-------

அரும்பெறல் உலகத்து ஆன்றவர்

விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே!

(புறம் 213)

உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது பிள்ளைகள் இருவர்க்கும் ஏற்பட்ட மன வேறுபாட்டால் கோட்டைக்குள் குத்து வெட்டாகத் தந்தை மக்களுக்குள் கலாம் (போர்) மூண்டதால் நாடே கலக்கமுற்றது.

இதையறிந்த சான்றோர்களின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், புல்லூற்றூர் எயிற்றியனார் எனும் புலவர் வளரும் தலைமுறையினரைவிட வளர்ந்த தலைமுறையான தந்தையின் உள்ளத்தை மாற்றுவதே சாலச் சிறந்தன என எண்ணி மன்னனிடம் சென்று, 'வேந்தே! நின்னுடன் போர் புரிய வந்தோர் சேர பாண்டியர் அல்லர்! நீயும் எதிர்க்கும் நின்மக்கட்கு அத்தகைய சேரபாண்ட வேற்றவர் அல்லை.

போரில் நீ மாய்ந்தால் உன் அரசு உன் மக்கட்குத்தானே சேரும்! ஒருவேளை உன் மக்கள் தோற்பாராயின் நின் அரசு யாருக்குச் சேரும்! இதனால் நினக்குப் பழி எஞ்சுவதோடு புகழ் நினக்குக் கிட்டாதன்றோ!

எனவே, அறம் (நல்லது ) புரிதல் உன் கடன்! என அறிவுறுத்தினார்.

புலவரின் அறிவுரையால் தெளிந்த சோழன் போரை நிறுத்தினான். நாடு போர் பதற்றத்திலிருந்து மீண்டது. ஆனால், சில பகைவர்கள் மனங்கலங்கினர்.

இந்த நிலையில், மானம்பெறாத மன்னன் ஆட்சியிலிருந்து ஒதுங்கி வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தானாயினும் நாடு பெரும் உயிர்ச்சேதத்தின் அழிவிலிருந்து மீண்டது என்பதே பாடலின் உட்கிடையான கருத்து.

போர்தவிர்த்தலுக்குப் புலவரின் அறிவுரையும் மன்னன் எடுத்த தீர்க்கமான முடிவுமே காரணம் என்பதை புறநானூற்றுப் பாடல் சொல்லாமல் சொல்வதால், இப்பாடலுக்கான திரள் கருத்தாக எடுத்தியம்பிய இரா.இளங்குமரானர் 'இப்பாடல் பெற்றோர்க்கும் மக்கட்குமாக ஏற்பட்ட பிளவால் நாடு அல்லல்படாமல் காக்கப்பட எடுத்த சான்றோர் கடனுக்காக எடுத்துக்காட்டுப் பாட்டன்றோ!' என்றது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட மானுடம் வென்ற மாண்புடையது.

போர் ஒழிக எனும் அப்பாடல் அரசுக்குரித்தாயினும் மானுடத்திற்குரியது என்பதே முக்காலும் உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com