அணங்கு என்பது ஒரு தெய்வீக ஆற்றல். டஇயற்கையின் மிதமிஞ்சிய இயக்கங்களில் ஏதோ ஓர் ஆற்றல் உறைந்திருக்கிறது' எனப் பழங்கால மனிதன் நம்பினான். இத்தகு நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட கருத்தியலே டஅணங்கு' என்பதாகும்.
அணங்கு என்பதற்கு டஅச்சம் தரும் பெண் தெய்வம், வருத்தம், நோய், கொலை, தெய்வம், தெய்வ
மகள், வருத்திக்கொல்லும் பேய், சண்டாளன், அழகு, வடிவு, குட்டி' என்று தமிழ்ப்பேரகராதி பல சொற்பொருள் விளக்கங்களை விளம்புகிறது.
காடு, மலை, மரம், சுனை, நீர்வீழ்ச்சி போன்ற இடங்களிலும் குகை போன்ற பாழடைந்த இடங்
களிலும் அணங்கு உறையும் எனச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. மேலும் அணங்கு, தான் விரும்பிய வண்ணம் உருவம் எடுக்கும் பண்புடையது; நடு இரவில் உலவும் தன்மையுடையது.
டஅணங்கு' என்ற சக்தியானது வாழ்வில் வளமும் தரும்; வருத்தவும் செய்யும்; நோயும் தரும்; நோயைத் தீர்க்கவும் துணை புரியும். இத்தகைய டஅணங்கு' குறித்த பொருண்மைகளின் வழி, சங்க இலக்கியம் டமனித ஒழுகலாறுகள் குறித்த வாழ்வியல் நெறி
முறைகளை' வலியுறுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இளமைப் பருவத்து, வளர்நிலையில், பூப்படைதல், தாய்மையடைதல், கருவுறுதல் போன்றவை பெண்ணுக்கே உரிய பெண்மைப் பண்புகளாகும். இத்தகு வளமை வளர்ச்சிக்குக் காரணம் அணங்கு என்ற தெய்வசக்தியே என்று பழங்கால மனிதன்
நம்பினான். இதை
டபெரும்பெயர்க் கூடல் அன்னநின்
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே' (நற். 39)
என்ற நற்றிணை சுட்டுகிறது.
டமூப்புடை முதுபதி தாக்கணங்குடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
.....................
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை' (அகம். 7)
என்று பருவமடைந்த பெண்கள் பாழடைந்த இடங்களுக்குச் சென்றால், அங்குறையும், அணங்கு, அப்பெண்ணை வருத்தும் என அகநானூறு சுட்டுகிறது. வளம் தந்த தெய்வம், பெண்ணின் உடலைத் தாக்கும் என்றும் தொன்மைச் சமுதாயம் நம்பியது. அதனால் பெண்ணின் புழங்கு தளம் இங்கு சுருக்கப்பட்டது என்பதையும் உணர வேண்டும்.
வளமும், வருத்தமும் தந்ததுடன் திருமணமாகாத இளம்பெண்களுக்கு டஅணங்கு' நோயையும் தரும்; இந்த நோயைப் டபசலை நோய்' என்று சங்க இலக்கிய வாசிப்பில் உணரமுடியும்.
களவுக் காலத்தில் தலைவன் தலைவி சேர்க்கையாலும், பிரிவின் உணர்வருத்தத்தாலும் பெண்ணின் உடல் மெலிந்தும், வெளிறியும் காணப்படும். இதைச் சங்க இலக்கியம் டமார்புதரவந்த படர் மலி அருநோய்' (நற்.34) என்கிறது.
தலைவன், தலைவியின் களவுக்காலச் சேர்க்கைக்குப் பிறகு ஏற்படும் பெண்ணின் உடல் மாற்றத்தைச் சங்க இலக்கியப் புலவர்கள் கையில் எடுத்தனர். இம்மாற்றம் தலைவனால் வந்தது என்பதை நேரடியாக மொழியாது (தோழிக்குத் தெரியும்) பசலைநோய் அணங்கினால் வந்தது என்று கட்டமைத்தனர்.
இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் குறிஞ்சிநிலத் தெய்வமான டமுருகன்' என்ற தெய்வத்துடன் அணங்கு என்ற ஆற்றலை இணைத்து அதற்கு டமுருகணங்கு' எனத் தெய்வப் பண்பேற்றம் செய்துள்ளனர். அத்துடன் இந்த டமுருகணங்கு' தந்த பசலை நீங்க வெறியாட்டெடுக்க வேண்டும் என்ற வழிபாட்டுச் சடங்குமுறையையும் உருவாக்கினர்.
தலைவியின் உடல் மெலிவைக் கண்ட செவிலி, அதன் காரணத்தை அறியக் கட்டுவிச்சியை அழைத்து நெற்குறிப் பார்ப்பாள். அத்துடன் மனம் அமைதியடையாது வேலனை அழைத்துக் கழங்குக் குறியும் பார்ப்பாள். டகட்டுவிச்சி' முறத்தில் உள்ள நெல்லை எண்ணிப் பார்த்துக் குறிசொல்வாள். நான்கு நான்கு ஆக எண்ணி, ஒன்று, இரண்டு, மூன்று என வந்தால், இந்நோய்க்குக் காரணம் டமுருகணங்கு' என்பாள். நான்கு எனில் பிறிதொரு காரணம் என்றுரைப்பாள்.
வேலன் என்பவனே கழங்கு குறிபார்ப்பான். வீட்டின் முற்றத்தில் மணற்பரப்பி அதில் கழற்சிக் காய்களை இட்டு, வேலன் தன் கையிலுள்ள தழைகள் அடங்கிய பைகள் கட்டிய சிறிய கோலினால், கழற்சிக் காய்களை வாரி எடுத்துக் குறி கூறுதல் கழங்கு பார்த்தலாகும்.
பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு
மெய்ம்மலி கழங்கின் வேலற் தந்தே (நற். 268)
என்று நற்றிணை கழங்கு பார்த்தலைச் சுட்டுகிறது. இத்தகு குறிகள் உணர்த்திய குறிப்புமொழிகளின் வழி, தலைவியின் மெலிவுக்குக் காரணம் டஅணங்கு' என்றவுடன் செவிலி, வெறியாடல் நிகழ்த்த முனைவாள்.
வெறியாட்டு என்பது ஒரு வழிபாட்டுச் சடங்கு; தலைவியின் உடலில் தங்கி இருப்பதாகக் கருதிய, அணங்கு வெறியேற, முருகக்கடவுளை முன்னிறுத்தி எடுக்கப்படும் சடங்கு.
வெறியறி சிறப்பின் செவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தள் (தொல்., 1006)
என்கிறது தொல்காப்பியம்.
வெறியாட்டென்பது முருகக் கடவுளை முன்னிறுத்தி, அக்கடவுளுக்கு குறிஞ்சி நிலத்தில் கிடைக்கும் பொருட்களைப் படைத்து, பலியிட்டு அக்கடவுளே தெய்வத்தன்மை மீதூற ஆடும் கூத்தாகும்.
வெறியாட்டு எடுப்பவன் வேலன் என்றழைக்கப்பட்டான். இவன் குறிஞ்சி நிலக் கடவுள் முருகனை வணங்கி, தன்னுள் தெய்வத்தன்மையை வரவழைத்துப் பெண்ணின் பசலை நோய்க்குக் காரணம், முருகு என உரைப்பான். இதையே ஐங்குறுநூறு டமுருகென மொழியும் வேலன் மற்றவன்' என்கிறது. (ஐங். 249).
வெறியாட்டு இருக்கும் இடம் புனிதப்படுத்தப்பட்டு முதலில் புதுமணல் பரப்புவர்; அதில் வேல், கோழிக்கொடி முதலியவற்றை ஊன்றுவர்; பின்னர் புன்னை, தாழை மலர்களைக் கொண்டு அந்த இடத்தை அலங்கரிப்பர்; அங்கு இசைக்கருவிகள் ஒலிக்கக் குறிஞ்சிக் கடவுளைப் பாடி முருகணங்கு என்ற ஆற்றலை வரவழைத்துக் குறிசொல்வது வெறியாட்டு எனப்படும். இச்சடங்கில் திணை அரிசி நிரம்பிய கூடையை வைத்து, ஆடு அறுத்துப் பலியிடுவர்.
நோய் தீரும்படி முருகனை வணங்கி எடுக்கப்பட்ட வழிபாட்டுச் சடங்கு போன்று பெண்கள் தங்கள் வளமும் நலமும் நாடி திருமணம் வேண்டி முருகனை வணங்கிப்பாடி, ஆடும் கூத்து குரவைக் கூத்து ஆகும்.
வரையுறை தெய்வத்துக்கு (முருகன்) பெண்கள் ஒன்று சேர்ந்து, திருமணம் விரைவில் முடிய வேண்டும் என்று பாடி ஆடியதை கலித்தொகை,குறிப்பிடுகிறது.
திருமுருகாற்றுப்படையும் குறிஞ்சிநிலமக்கள் முருகனைக் குழுவாகக் கூடிப் பாடி குரவைக்கூத்து ஆடி, வழிபட்ட செய்தியையும் சுட்டுகிறது.
முருகன் போன்று கிரேக்க இலக்கியத்திலும் டடயோனிசியஸ்' என்ற தெய்வம் குறிக்கப்படுகிறது. இதுவும் மலையுறைக் கடவுள். வளம்தரும் இனப்பெருக்கக்கடவுள் என்றெல்லாம் நம்பி பெண்கள் குலவை போன்று சடங்குக்குரலை எழுப்பி, இசைக்கருவிகள் ஒலிக்க ஆடிப் பாடி வழிபட்டுள்ளனர். பெண்களும், ஆண்களும் கூடியும் வழிபட்டுள்ளனர். இத்தகு குழுப் பாடலை டடித்ராம்ப்' என்கிறது கிரேக்க இலக்கிய வரலாறு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வில்லிபுத்தூர் விளக்கின் விண்ணியல் ஞானம்
லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் இருவா் கைது

அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே தொடர் விபத்துக்கு காரணம்: இபிஎஸ்

பாலம் தீ விபத்துக்கு அமைப்பின் அலட்சியமே காரணம்! 9 உறுப்பினா்களை இழந்த நபா் வேதனை
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


