பாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

மைஅணல் காளை

பழங்காலத்தில், தவமிருப்போர் முகத்தில் தாடி வைத்திருப்பர்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஆகஸ்ட் 2026, 5:18 pm IST

பழங்காலத்தில், தவமிருப்போர் முகத்தில் தாடி வைத்திருப்பர். அத்தகையோர், சடைமுடியை வளர்த்துக் கொள்வதும் அல்லது உரோமத்தை மழித்துக் கொள்வதும் உண்டு. (திருக்குறள்-280).

தற்கால இளைஞர்களில் பலர், நீண்ட தலைமுடி வைத்துக் கொள்வதையும், தாடி வளர்த்துக் கொள்வதையும் நாகரிகமாகக் கருதுகின்றனர். படித்த இளைஞர்களும், உயர் அதிகாரிகளும்கூட இதைப் பின்பற்றி வருகின்றனர்.

இதற்குக் காரணம் சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கமே எனலாம். முடி வளர்க்கும் அல்லது தாடி வைக்கும் இந்த நாகரிகம், 'ஆண்மையின் அடையாளம்' என்ற தவறான கருத்து தற்காலத்தில், நிலவி வருகிறது.

மணவறையில் தாடியுடனிருந்து மணப்பெண்ணின் கழுத்தில் மங்கல நாணினை அணிவிப்பதும், பிற சடங்குகளை மேற்கொள்வதும் தற்காலத்தில் நாகரிகமாகக் கருதப்படுவது துரதிருஷ்டமானது.

துறவியர், இறையடியார்களின் முடிவளர்க்கும் பாங்கை ஒரு காலத்தில் அருவருப்பாகப் பார்த்து வந்த இளைய சமுதாயம், அந்தச் செயலை இன்று, போற்றித் தலைமேற்கொள்வது வியப்பளிக்கிறது.

இளமையான தலைவியைத் தன்னுடன் பாலை வழியில் அழைத்துச் சென்ற மையணல் காளையாகிய (கரிய தாடியுடைய இளைஞன்) இளந்தலைவன் ஒருவனைப் பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று அழகுறக் கூறுகிறது.

தலைவியானவள், தலைவனுடன் சேர்ந்து, வெப்பம் மிகுந்த பாலை நெறியில் சென்றுவிடுகிறாள். அதனால் வருந்திய செவிலித்தாய், அதே பாலை நிலத்தில் அவ்விருவர் தம் அடியொற்றித் தேடிச் செல்கின்றாள்.

அவ்வாறு செல்லும்பொழுது, அங்கு எதிர்ப்பட்ட வழிப்போக்கரைப் பார்த்து, 'என் மகளாகிய பெண்ணொருத்தி, பிற தாய் ஒருத்தியின் மகனான ஆடவன் ஒருவனுடன் இவ்வழியில் சென்றதைக் கண்டீரோ?' எனப் பணிந்து கேட்கிறாள் செவிலி.

மேலும் வினவும் அவள், 'பெரியீரே!

கம்மத் தொழிலால் (கன்னாரத் தொழிலால்) சிறந்து பொலிந்த, செறியக் கட்டப்பட்ட வீரக் கழலினையும், வலிமையான கால்களையும், மைஅணலினையும் உடைய இளைஞன் ஒருவனுடன் என் மகள் சென்றதைக் கண்டீரோ' என்கிறாள்.

அத்துடன், 'கொல்லிப்பாவை (மலையுறை தேவதை) போன்ற, வேலைப் பாடமைந்த குறுந்தொடியினைக் கைகளில் அணிந்த, செல்வியாகிய அவள், அவனுடன் மெல்ல மெல்ல நடந்து சென்றதாகக் கூறினீர். அழகிய சிலம்புகள் அணியப் பெற்ற அவளது மென்மையான மலரடிகள், வெப்பம் மிகுந்த இந்தப் பாலை நிலத்தின் மேல் படிந்து இயங்கினவோ? கூறுங்கள்' என்கிறாள்.

அந்த இளைஞன் காலில் அணிந்திருந்த வீரக் கழல்கள் ஆண்மைக்கு அறிகுறியாகவும், அதன் வேலைப்பாடு அவனது செல்வமுடைமைக்குச் சான்றாகவும், அவனது கருமையான தாடி கட்டிளமைப் பருவத்துக்கு அடையாளமாகவும் இருந்தன.

மெதுவாகச் செல்லும் மெல்லடியளாகிய தலைவியின் நடையுடன், தலைவனும் ஒத்து மெல்ல நடந்தான் என்பதை இதன் மூலம் உய்த்துணர்கின்றாள் அவள். நிம்மதியும் அடைகின்றாள்.

அவ்வாறு சென்ற தாடி வைத்திருக்கும் அக்கால இளைஞனைக் குறிக்கும் அழகிய ஐங்குறுநூறு பாடல் இதுதான்.

செய்வினைப் பொலிந்த செறிகழ னோன்றாள்

மையணற் காளையொடு பைய வியலிப்

பாவை யன்னவென் னாய் தொடி மடந்தை

சென்றன ளென்றி ரைய

வான்றிய வோவவ ளஞ்சிலம் படியே. (389)

எனவே, சங்க கால இளைஞர்களுள், மேற்கண்ட பாடலில் குறிப்பிடப்பட்ட இளைஞனின் தாடி என்பது, இளமையின் அடையாளமாகக் கருதப்பட்டதே தவிர, தற்காலம் போல் கண்மூடித் தனமான நாகரிகத்தின் அடையாளமாக அறியப்படவில்லை என்று துணிவுடன் கூறலாம்.

தாடி வைத்துக் கொண்டு சமுதாயத்தை நெறிப்படுத்த விழையும் துறவிகளுக்கான கோலம், சமுதாயத்தை உயர்த்த உழைக்கும் தற்கால இளைஞர்களுக்குத் தேவையில்லை என்பதே பெரியோர்களின் எண்ணமாகும். சங்க இலக்கியங்கள் இதைக் குறிப்பால் உணர்த்துவதை எண்ணி மகிழ முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.