புறநானூற்றில் ஒரு தம்பி

புறநானூறு பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவேடு, சங்ககாலம் தந்த சரித்திரம். புறநானூறு தம்பியர் குறித்தும் சொல்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திருமேனி நாகராசன்

புறநானூறு பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவேடு, சங்ககாலம் தந்த சரித்திரம். புறநானூறு தம்பியர் குறித்தும் சொல்கிறது.

கண்டீரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு தோட்டி மலைப் பகுதியை ஆண்ட குருநில மன்னன் கண்டீரக் கோப்பெருநள்ளி. அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவன் தம்பிதான் இளங்கண்டீரக்கோ.

இளங்கண்டீரக்கோவும் விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோவும் நண்பர்கள். ஒரு சமயம், இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது பெருந்தலைச்சாத்தனார் அங்கு வந்தார். உடனே, இளவரசர் இருவரும் எழுந்து புலவரை வணங்கி வரவேற்றனர். சாத்தனார் இளங்கண்டீரக்கோவை மட்டும் கட்டித் தழுவி அன்பு பாராட்டினார்.

''புலவர் பெருமானே! என்னை மட்டும் உங்கள் அன்பிலிருந்து விலக்கி வைத்தது ஏன்?' என்று தணிந்த குரலில் இளவிச்சிகோ வினவினான்.

சாத்தனார் இளவிச்சிக்கோவைப் பார்த்து அவனுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார். ''ஏதேனும் ஒரு காரணமாக, உயர்ந்த தோட்டிமலையை விட்டுத் தம் கணவன்மார் கண்டீரக்கோப்பெருநள்ளியும் இளங்கண்டீரக்கோவும் வெளியில் சென்றுவிட்டாலும், தங்களை நாடிவரும் பாடும் புலவர் மகிழும்படியாக அவ்விருவர் தேவியரும் அலங்கரிக்கப்பட்ட பெண் யானைகளை அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பார்கள். அப்படிக்கொடுத்துப் புகழ்பெற்ற மரபைச் சார்ந்த இளங்கண்டீரக்கோ இவன் என்பதால், இவனை நான் தழுவி மகிழ்ந்தேன்.

நீயும் என்னால் தழுவுவதற்குத் தக்கவனே; எனினும், உன்னைத் தழுவ எனக்கு ஒப்பவில்லை. ஏனெனில், பெண் என்றும் இரக்கம் கொள்ளாது முன்னாளில் ஒரு பெண்ணைக் கொன்ற நன்னன் மரபிலே வந்தவன் நீ; அன்றியும் நாடி வந்து பாடும் புலவர்க்கு அடைத்த கதவினையுடைய உனது உயர்ந்த மனையை என்போலும் புலவர்கள் போற்றிப் பாடுதலைத் தவிர்த்தும் விட்டனர். இவற்றால் நானும் உன்னைத் தழுவாது தவிர்த்து விட்டேன்'.

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப

...................

மணங்கமழ் மால்வரை

வரைந்தனர் எமரே (புறம்: 151)

என்பது பெருந்தலைச்சாத்தனார் பாடல்.

இதனால், இளங்கண்டீரக்கோ கொடுத்துப் புகழ் பெற்றவன் என்பதும், அவன் அரண்மனையில் இல்லாதபோதும் அவன் மனைவி புலவர்க்குப் பரிசு வழங்கும் பண்பினள் என்பதும் தெரிகிறது. எனவே, கண்டீரக்கோப்பெருநள்ளி போலவே அவன் தம்பி இளங்கண்டீரக்கோவும் கொடுத்து மகிழும் நல்ல தம்பியாக விளங்கினான் என்பது தெளிவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com