நாராயணனோடு ஊடல்
திருமாலிடம் மாறாத காதல் பக்தியின் வெளிப்பாடாகப் பல பாசுரங்களை நம்மாழ்வார் பாடியுள்ளார். இவருக்குப் பராங்குசர் என்ற பெயரும் உண்டு.

கோப்புப் படம்
பொன்முகரியன்
திருமாலிடம் மாறாத காதல் பக்தியின் வெளிப்பாடாகப் பல பாசுரங்களை நம்மாழ்வார் பாடியுள்ளார். இவருக்குப் பராங்குசர் என்ற பெயரும் உண்டு.
வைணவ இலக்கியத்தில் திருமாலைத் தலைவனாகவும், தம்மைப் பராங்குச நாயகியாகிய பெண்ணாகவும் பாவித்து திருவாய் மொழியில் அகப்பொருள் பாசுரங்கள் இயற்றியுள்ளார்.
திருமாலிடம் தம் காதலை வெளிப்படுத்தும் பராங்குச நாயகி, நாரை, அன்னம், குயில், குருகு, அன்றில் ஆகிய பறவைகளைத் தூது அனுப்பி, தம் ஊடலை எடுத்துரைத்துக் கூடலுக்கு வழி தேடுகின்றாள்.
தலைவியின் ஊடல் என்பது நாராயணன் மீது கொண்ட பக்தியில் மலர்ந்த காதலின் வெளிப்பாடாகும். இந்த ஐந்து பறவைகளின் தன்மையையும் பாசுரங்களில் பொருத்தி விளக்கப் படுகின்றன.
அஞ்சிறைய மட நாராய்!
அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலு மாய்
ஆவாவென் றெனக்கருளி...''
பராங்குசநாயகி நாரையை நோக்கி, 'நாரையே! நீ உன் ஆண் துணையுடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறாய். எனது தனிமையைப் பார்த்து இரங்குவாயாக!. எனக்காகக் கருட கொடிபறக்கும் நாட்டிலுள்ள என் பெருமானிடம் சென்று, நான்படும் பிரிவுத்
துன்பத்தை எடுத்துக் கூறித் தூது செல்ல வேண்டும்.
இங்கு நாரை என்பது ஞானமும், அனுட்டானமும் மிக்க ஆச்சாரியரைக் குறிக்கும்.
என் நீர்மை கண்டிரங்கியிது தகாதென்னாத
என் நீலமுகில் வண்ணற்கென் சொல்லி
யான் சொல்லுகேனோ?
மற்றொரு பாடலில்
நிலையா உலகினில் நின்றீரோ?
அன்னங்கால் அன்றில் காள்! என் செய்கேன்
அந்தோ யானே?
என்று பாடுகிறாள்.
அன்னப்பறவைகளே! என் மீது உங்களுக்கு இரக்கம் இல்லையா? மேகம் பூமியில் மழை பொழிவது போல என் மீது என் நாராயணன் கருணை மழையை எப்பொழுது பொழிவான் என்று அவனிடம் கேட்டு சொல்வீர்களா?
பிரளய காலத்தில் வெள்ளத்தில் இருந்த உலகங்களை எல்லாம் காத்து தன் வயிற்றுக்குள் வைத்து ரட்சித்த கருணை மிக்கவனே என்னைப் பிரிந்து வாட்டுவது தகுமா? அவனது காக்கும் குணத்துக்கு இது அடுக்குமா? என்று தலைவி அங்கலாயிருக்கிறாள்.
இவ்வுலகில் எதுவுமே நிலையானது இல்லை.
நீங்காத இன்பத்தைப் பெறுவதற்குப் பரந்தாமனின் திருவடிகளே அடைக்கலம்.
என்நீர்ம வினை யினையாய் இருஞ்
சிறைய வெங்குருகே!
பொன்னீர் மணிய வண்ணன் புட்கொடிமேல்
அடியாராய்...'
பெரிய சிறகுகளையுடைய மென்மையான தன்மை
பெற்ற குருகே, நீ பொன்னும் மணியும் போன்ற
திரு மேனி அழகைக் கொண்ட பறவை. கருட கொடி பறக்கும் நாட்டில், எம்பெருமான் அடியார்களோடு சேர்ந்து மகிழ்கின்றார்.
எனது கண்கள் கண்ணீர் மல்க நான் வாடுவதைக் கண்டு எம்பெருமான் அலட்சியமாக இருக்கின்றானோ? அவனிடம் சென்று உமது பரம
தயாளக் குணத்திற்கு இந்த அலட்சியம் தகுமா? எனக் கேட்பாயோ? என்று வாடுகின்றாள்.
வெண்மை, அகங்காரமற்ற உண்மையான பக்தியாகும்.
குயிலிடம், தன் காதல் வேதனையை எடுத்துரைக்கும் பராங்கச நாயகி, தனக்காக தாமரைக் கண்ணனிடம் தூது செல்லுமாறு வேண்டுகிறாள்.
தன் துணையுடன் பிரியாமல் இணைந்து வாழும் அன்றில் பறவையைப் பார்த்த தலைவி, தலைவனான நாராயணனை நினைத்து கண்களில் நீர்மல்குகிறாள். அவனைப் பிரிந்திருக்கும் துயரத்தைத் தாங்க முடியாமல் தன் நிலையை எடுத்துரைக்கிறார்.
காமத்திற்கு இன்பம் கூடுதல் என்பர். இங்கு ஊடல் என்பது இறைவனோடு இரண்டறக் கலப்பதைக் குறிக்கும்.
பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் இடையே நிகழும் இந்தத் தூது வைணவ தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். இது வெறும் காதல் அடிப்படையாகக் கொண்டதல்ல, முக்தி பெறும் நோக்கத்துடன் அடியவர்கள் இறைவனின் திருவடியைப் பற்றும் நிலையையே உணர்த்துகிறது.
நாராயணனோடு ஊடல் என்பது வெறும் காதல் பிணக்கன்று; இறைவனை அடைய துடிக்கும் ஆன்மாவின் காதலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

