
உரைவேந்தரின் நற்றிணை உரை வளம்
சங்கத்தொகை நூல்களான புறநானூறு, பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு என்னும் மூன்று நூல்களுக்கும் நிகரற்ற விளக்க உரைகள் வரைந்த மாண்பினை வியந்து...

சங்கத்தொகை நூல்களான புறநானூறு, பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு என்னும் மூன்று நூல்களுக்கும் நிகரற்ற விளக்க உரைகள் வரைந்த மாண்பினை வியந்து, மதுரை திருவள்ளுவர் கழகத்தால், 'உரை வேந்தர்' என்னும் விருதைப் பெற்றவர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை.
அவரின் உரை வழங்கும் நெறி, அவருடைய கட்டுரை வன்மையையும், கலைபயில் தெளிவையும் பறைசாற்றும். உரை விளக்கம் தரும்போது, சொல் புணர்ப்புகளில் வினை முடிவு காட்டிப் பொருளின் திட்பத்தை வரையறுத்து, அருஞ்சொற்களுக்கு இலக்கண அமைதி கூறும் திறத்தால் படிப்போருக்குப் பேருவகை தரும் உரை கண்டார் உரைவேந்தர்.
தலைமகன் தான் செல்ல இருக்கும் வழியின் அருமையைக் கூறும்போது,
'பைங்காய் நன்னிறம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி'
என்கிறான்.
இதில் பொதிந்திருக்கும் கருத்தை 'ஈந்து காயாவழி பசுமை நிறமும், காய்த்த வழி செந்நிறமும், கனியும் வழி கருநிறமும் பெறும்'
என்பதைப் பிள்ளையவர்கள், 'பிள்ளைமையில் பசுமையும், இளமையில் எழிலும், முதுமையில் நரை திரை எய்திக்கழியும் யாக்கையின் நிலையா இயல்பைக் குறித்தது' என்கிறார். இவ்வண்ணம் எடுத்துக்காட்டும் திட்பமே திட்பத்தின் திட்பம் ஆகும்!
இடுப்பின் அரைப் பகுதிக்கும், கீழ்ப் பகுதிக்கும் இடைப்பட்ட நெகழ்ச்சி உடைய பகுதியே 'அல்குல்' என்பது. இதை அவையல்
கிளவியாகவே குறிப்பர் பலர். இது பெண்களுக்கு மட்டுமே உண்டென உரைப்பவர் உரையை மறுத்து, 'அல்குல்' என்னும் சொல் ஆடவர்க்கும் உரித்து. இதற்கு ஆதரவாக, 'கொள்வீர் அல்குல் ஓர் கோவணம்' என்ற திருஞான
சம்பந்தர் தேவாரத்தை எடுத்துக்காட்டுகிறார்.
மனை அமைத்து வாழ்க்கை நடத்துவதற்கு ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுறல் கைக்கிளை எனவும், அவர் இருவரும் ஓர் உயிர் ஈருடம்பாக உணர்வால் இணைவது களவு என்றும், பின்பு இருவரும் நாடறிய நல்மணம் செய்துகொண்டு, வாழ்வு மேற்கொண்டு, மக்கள் பேறு, விருந்தோம்பல், பொருளீட்டல், வினை செய்து வீடு பெறல், கல்வி பயின்று ஞானம் பெறல், தூது சென்று போரும் பூசலும் நாட்டில் நேராமல் தடுத்தல் முதலானவற்றைக் கற்பு என்றும், அகத்தால் நுகரும் பொருள் அகப்பொருள் என்றும், மனைக்குப் புறம்பாகிய மற்றவற்றைப் புறம் எனவும் பொருள் கூட்டினர்.
தாமே கண்டு காதலித்து, மணம் புரிந்து கணவன் மனைவியாகி வாழ்தல் இயற்கைப் புணர்வு எனவும், இருவரும் காணாமலே மணந்து கொண்டு வாழ்வது செயற்கைப் புணர்வு ஆகும் என்கிறார். இது ஜாதி, இனம் வளரக் காரணமாயிற்று. இதனால், ஜாதி வேறுபாடுகளும் சமயச் சண்டைகளும் புகாத இயற்கைப் புணர்ப்பே தமிழரிடம் ஒருமை சமுதாயமாக விளங்கிய காரணத்தால் மனை வாழ்வில் ஏற்றம் நிகழ்ந்தது என்பார் பிள்ளை அவர்கள். அவர்தம் ஆய்வும் முடிவும் தீர்வும் இன்றும் தொடர்ந்து இருக்குமானால் தமிழினம் உலகளாவிய
முதன்மைச் சமுதாயமாக இருந்திருக்கும்!
தெளிவுறாத இலக்கியச் சொல்லாடல்
களைத் தெளிவுறுத்தி அவர் காட்டும்
உரைநெறி சுரந்து நிற்கிறது.
உளுந்து முதலான பயிறுகள் பனிப்பெயல் பருவத்தில் விளைவனவாம்.
காமம் சான்ற பருவத்தில் மகளிரின் குழல்-கூந்தல் வளர்ச்சி மிகுமாம்.
பயன் நிரைகளுக்கு மண்ணீர்த்தொட்டி,
பத்தர், கல்குடைந்த தொட்டி இருந்ததாம்.
வழுதியர் குடி, தென்னவர் குடி, செழியர்குடி, மாறர்குடி, கவிரியர்குடி என ஐந்தும் ஒன்றுபட்டதே.
பஞ்சவர் குடியாம் திருவெயிலுரே வேலூராம்- இவை எல்லாம் பிள்ளை அவர்களால் தெளிவுறக் காட்டப்படும் சொல்லாடல்களே.
மொழிபெயர்ப்பால் வந்த குழப்பங்களை அவர் பட்டியலிடும் நிரலே நிரலாம். வேற்று நாட்டார் தமிழ்ப் பெயர்களை, இடப்பெயர்களை, தெய்வப் பெயர்களைத் தங்கள் மொழி ஒலிக்கு ஏற்ப எழுதிக் கொள்வர்.
ஆனால், வடமொழியாளர் பலரிடம் இந்த நற்பண்பு காணப்படுவதில்லை. முது
குன்றத்தை-விருத்தாச்சலம் என்றும், இது வடசொல்லின் மொழிபெயர்வு என்றும் நாக்
கூசாது பொய் கூறி, மக்களை மயக்கும் செயலும் அவர்கள்பால் உண்டு. இதனால், வடமொழி நூல்களில் உள்ள வேற்றுமொழிக் கருத்துகளைப் பகுத்துக் காண்பது அருமையானபோது, பழந்தமிழ் நூல் கருத்துகள் பலவும் வடமொழியில் இருந்து பெறப்பட்டன என வேற்றுவர்க்கு விளங்கி வடமொழியே தமிழ் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழி என்றும் சாற்றலாயினர்.
பண்ணினது மலையை 'வராக மலை' என்று மொழிபெயர்த்து உரைத்தனர். இன்றும் அதனை வராக மலை என்றே வழங்குவர் மக்கள். இத்தகைய ஆய்வைத் தந்த ஒளவை துரைச்சாமி பிள்ளையின் தெளிவை மறந்தால் தமிழுக்கு வாழ்வேது? தமிழருக்கு உய்வுதான் ஏது?.
நண்டு சினை தோன்றுங்கால் இறக்கும்.
முதலைதன் பார்ப்பையே தின்னும்.
ஆமையின் பார்ப்பு தன் தாய்முகம் நோக்கியே வளரும்.
இவ்வாறு பதிவிடும் பிள்ளை அவர்கள், உடம்பு உறுப்புகள்- பொறிவட்டம், அறிவு விளைவு செயல்-புத்தி வட்டம், மாயை-உயிர் வட்டம் எனவும் ஆய்ந்து கூறுவார்.
மருவி வழங்கும் பெயர்களை எடுத்துக்காட்டி மெய்யான வழக்கு இது எனக் காட்டுவார் உரைவேந்தர். குழுமம்-கழுமலம், போதினி- பழனி, தொதுகர்- தோடர், வாவல்- வவ்வால், வெள்ளிவிழுது- வெள்ளிவீதி, விரான்குடி- வீரவான்குடி, காவிரிப்பாக்கம்-காவிதிப்பாக்கம், அண்ணாமலை- செம்மலை என அவர் எடுத்துக்காட்டுவதால் மெய்வழக்கு இது என அறிகிறோம்.
முன்னோர்தம் உரைகளை முற்றும் கற்றுணர்ந்து, நற்றிணைக்கு உரைகண்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையை 'உரைவேந்தர்'என்று உரைப்பது தமிழுக்குப் பீடும் பெருமையும் ஆகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




