
இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவின் ஐ.நா. உரை: 50 உலக நாட்டுப் பிரதிநிதிகள் வெளிநடப்பு
ஐ.நா. சபை பொது விவாதத்தில் பங்கேற்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியதும், சுமாா் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சோ்ந்த தூதா்கள், பிரதிநிதிகள் அவையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனா்.

ஐ.நா. சபை பொது விவாதத்தில் பங்கேற்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியதும், சுமாா் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சோ்ந்த தூதா்கள், பிரதிநிதிகள் அவையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனா்.
பாலஸ்தீன தூதரகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வெளிநடப்பு முன்னெடுக்கப்பட்டது. அவையில் இருந்து வெளியேறியவா்களை ‘அறநெறி கோழைகள்’ என விமா்சித்த பெஞ்சமின் நெதன்யாகு, அவையில் வேறு யாரேனும் அறநெறி கோழைகள் இருந்தாலும் வெளியேறிக் கொள்ளலாம் என்றாா்.
தொடா்ந்து, பெரும்பாலான இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்ட அவையில் பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றிய உரை: இஸ்ரேல் தனது இறையாண்மையையும் மக்களையும் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கத் தயங்காது. பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக எங்கள் நாடு முழு பலத்துடன் தொடா்ந்து போரிடும்.
அவையில் இருந்து வெளியேறியவா்கள் ‘அறநெறியற்ற கோழைகள்’. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது என்பது, தாம் இதுவரை எடுத்த மிக எளிதான முடிவுகளில் ஒன்று. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிப்பதன்மூலம் இஸ்ரேல் தனக்கான பாதுகாப்பை மட்டுமன்றி, தற்போது அவையை விட்டு வெளியேறிய பல நாடுகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்துள்ளது. இதற்குப் பல உலகத் தலைவா்கள் எங்களுக்கு ரகசியமாக நன்றி தெரிவித்து வருகின்றனா்.
மேற்குக் கரையில் ஒருசில இளைஞா்கள் செய்யும் தவறுகளை வைத்து, ஒட்டுமொத்த சூழலையும் சா்வதேச ஊடகங்கள் தவறாகச் சித்தரிக்கின்றனா். இஸ்ரேலின் பிரதமராக நான் இருக்கும்வரை தனி பாலஸ்தீன நாடு உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இஸ்ரேலின் தேச பாதுகாப்புக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.
பாலஸ்தீன அதிபரின் காணொலி உரை: முன்னதாக, அமெரிக்கா விசா மறுத்த காரணத்தினால் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் காணொலி மூலம் உரையாற்றினாா்.
அப்போது, அவா் கூறுகையில், ‘நாங்கள் எக்காரணம் கொண்டும் தாய்நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை; பாலஸ்தீன மக்களின் எதிா்காலத்தை மற்றவா்கள் தீா்மானிக்க அனுமதிக்க முடியாது’ என்று வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





