இயற்கை வளம் மிக்க சோழ வளநாட்டில், தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்று இடும்பாவனமாகும். இது திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம்.
மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் என்பவர் பூஜித்து முக்தியுற்றதால், இவ்வூர் "இடும்பா வனம்' என்றானது. பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன், "தலைமறைவு' வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்தார். அருகில் உள்ள இடும்பனின் ஊரான குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்தார். பின்னர் பீமன் இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவனாரை வணங்கி மகிழ்ந்தார்.
மிகப் பழமை வாய்ந்த இத்தலத்தில் பிரம்மதேவர், ராமபிரான், எமதர்மன் போன்றோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.
பிரம்மதேவர் சத்வ குணங்கள் பெற வேண்டி தவம் புரிந்து, பரமனை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இத்தல ஈசர் "சற்குணேசர்' எனப் போற்றப்படுகிறார். இவரை "ஸத்குண நாதர்' எனவும் அழைக்கின்றனர். அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக "இடும்பாவனம்' புகழப்படுகின்றது.
பிதுர் முக்தித் தலங்களுள் இதுவும் ஒன்றாகும். அதனால் நீத்தார் கடன்களை இங்கு செய்வது மிகவும் உசிதமாகும்.
சம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது இவ்வூரின் மணலெல்லாம் லிங்கமாகத் தென்பட, கரங்களால் ஊன்றி வந்து ஆலயத்தை அடைந்தாராம்; பின்னர் இறைவனை அவர் பாடித் துதித்ததாக கர்ண பரம்பரை வரலாறுண்டு!
அப்பரும் தனது úக்ஷத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
உன்னதமான இத்தலம் வயல்களும், பூஞ்சோலைகளும் சூழ்ந்து எழிலுறத் திகழ்கின்றது. ஊரின் நடுவே பெரிய திருக்குளம். அதையொட்டி அற்புதமான திருக்கோயில் கவினுறக் காட்சியளிக்கின்றன.
பூம்புகாரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்ட இவ்வாலயம், மிகவும் தொன்மையானது. பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் நான்குமுறை திருப்பணிகள் கண்ட கலை நயம் கொஞ்சும் ஆலயமிது!
நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியன ஆலயத்தின் வெளியே காணப்படுகின்றன. அதையொட்டி அழகிய மூன்று நிலை ராஜகோபுரம், நாற்புறமும் உயரிய மதில்கள் சூழ கம்பீரமாக நிற்கிறது.
இதன் அகலம் மிகவும் பிரம்மாண்டமானது. உள்ளே... இருபுறமும் முன் வரிசையில் இடும்பன், அகத்தியர், சூரியன், சந்திரன், நால்வர், பைரவ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஒரே பெரிய திருச்சுற்றைக் கொண்டது ஆலயம். முதலில் ராஜகோபுரத்திற்கு நேராக பிரம்மாண்டமான சபா மண்டபம், மூடுதளமாக உள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என ஸ்வாமி சந்நிதி அமைந்துள்ளது.
சுயம்பு லிங்கமான மூலவரின் கருவறை உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகின்றார் ஸ்ரீ சற்குணேஸ்வரர். சத்வ குணம் (நல்லியல்புகள்) கொண்ட இவரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம்.
வாழ்வில் ஏற்படக் கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த இடும்பாவனேஸ்வரர் என்னும் சற்குணேஸ்வரர். "இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்' என்று திருஞான சம்பந்தர் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார்.
லிங்க மூர்த்திக்கு பின்புறம் சுவரில் ஆதி தம்பதியான அம்மையும், அப்பனும் எழில் வடிவோடு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர்!
சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தியாகராஜர் சந்நிதி, முக மண்டபத்துடன் விளங்குகின்றது. சந்நிதிக்குள் தியாகேசர், அம்மையோடு திருவாபரணங்கள் ஜொலிக்க அற்புத தரிசனமளிக்கின்றார்.
அம்பாள் தென்முகம் பார்த்த தனி சந்நிதியுள் நின்ற வண்ணம் அருள்பாலிக்கின்றாள்; "ஸ்ரீ மங்கள நாயகி' என்று போற்றப்படுகின்றாள். சர்வ மங்களங்களையும் அருளும் வல்லமை மிக்கவள் இந்தத் தாயார்.
அழகிய தூண்களும், சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. முறையான சிவாலய கோஷ்டங்களோடு, பின்புற வரிசையில் மகாகணபதி, கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் திருவடிவங்கள் அருள் செய்கின்றன. இங்குள்ள "சுவேத விநாயகர்' மிகவும் பிரசித்தம்!
கணபதி சந்நிதி, ஆலயத்தின் தென்புறத்திலும், வள்ளி-தெய்வானையுடன் கூடிய கந்தன் சந்நிதி வடபுறமும் அமைந்துள்ளன.
ஆலயத்தின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தம், எமன் ஏற்படுத்திய எம தீர்த்தம் மற்றும் அகஸ்திய மகரிஷி உண்டாக்கிய அகஸ்திய தீர்த்தம் ஆகியன இத்தலத்தின் தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வில்வம் விளங்குகிறது.
தஞ்சையை ஆண்ட மகாராஷ்டிர மன்னர்கள் இவ்வாலயத்திற்கென சில கிராமங்களை நிவந்தங்களாக விட்டுள்ள செய்தியை, பாதுகாக்கப்பட்ட பழைய சாசனங்களின் வாயிலாக அறியப் பெறலாம்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.
இங்கு வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தொடங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. திருத்தேர், தெப்போற்சவம், திருக்கல்யாண வைபவம் போன்றவை கோலாகலமாக நிகழும் திருவிழா இது!
தற்போது இவ்வாலயத்தில் இருபது லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பசும்பாலால் சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, புது வஸ்திரங்கள் அணிவித்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு, திருமண வரம் பெறும் அன்பர்களை நாளும் காணலாம் இங்கு!
பூஜைப் பொருட்களை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம். பிற வசதிகள் திருத்துறைப்பூண்டியில் உள்ளன. கற்பகநாதர் கோயில், தில்லைவிளாகம் போன்ற சிறப்புமிக்கத் தலங்கள் அருகில் அமைந்துள்ளன.
திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள இந்தத் தலத்தை திருத்துறைப்பூண்டி - தொண்டியக்காடு வழித்தடத்திலும், முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்து சாலையிலும் பயணித்து அடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! மு.க. ஸ்டாலின் பதிவு!

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! முதல்வர் விஜய் தனித்தீர்மானம்!

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக்! நடிகை தபு கதாபாத்திர அறிமுக விடியோ வெளியீடு!

முடிவுக்கு வந்தது கருத்துருகளை உருவாக்குவோருக்கான வருவாய் பகிர்வு திட்டம்! எக்ஸ் அறிவிப்பு
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK



