அருட்கொடை அளிக்கும் கொடை அன்னை
இயற்கை அழகும் கொஞ்சும் கோடை வாசஸ்தலமாக விளங்கும் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில், ஒரு பாறையின் உச்சியில் அமைந்துள்ளது "புனித லா சலேத் அன்னை' ஆலயம். தமிழகத்தில் இறைப்


இயற்கை அழகும் கொஞ்சும் கோடை வாசஸ்தலமாக விளங்கும் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில், ஒரு பாறையின் உச்சியில் அமைந்துள்ளது "புனித லா சலேத் அன்னை' ஆலயம்.
தமிழகத்தில் இறைப் பணியாற்றி வந்த கன்சீர் அடிகளார், வாடிகன் செல்லும் வழியில் மடகான் தீவில் காய்ச்சலால் அவதிப்பட்டார். அச்சமயத்தில், ஐரோப்பா கண்டம் எங்கும் பக்தி விசுவாசத்துடன் போற்றப்பட்டு வந்த சலேத் மேரி மாதாவைப் பற்றி அறிந்த கன்சீர் அடிகளார், பூரண சுகம் பெற்று தமிழகம் திரும்பினால், சலேத் மேரி பெயரில் ஆலயம் கட்டுவதாக வேண்டுதல் செய்தார்.
அவ்வாறே நலமுடன் திரும்பிய அடிகளார், தனது வேண்டுதலை நிறைவேற்றப் பொருத்தமான இடமாக இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலை தேர்வு செய்து, ஆலயத்தை எழுப்பினார். இவ்வாறாக, கி.பி. 1866-ல் சலேத் மேரி மாதா ஆலயம் கொடைக்கானலில் அமைந்தது. இந்தியத் திருநாட்டில் சலேத் மாதாவுக்கு கொடைக்கானலில் மட்டுமே ஆலயம் உள்ளது குறிப்பிடத் தக்கது.
புதுமை நிறைந்த இந்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபம், ஃபிரான்ஸில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த ஆலயத்தை அழகுற அமைத்த அருள்திரு கன்சீர் அடிகளார், ஆலயத்தின் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்
சரீர சுகம் பெற்றதன் சான்றாக இந்த ஆலயம் கட்டப்பட்டதால், தீராத தலைவலி, காய்ச்சல் மற்றும் மனக்கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நம்பிக்கையுடன் வேண்டி, நலம் பெற்றுச் செல்கின்றனர். பில்லி சூனியக் கட்டுகள், பேய்க் கோளாறுகளும் போக்கப்படுவதாகவும் அன்னையின் அருட்கொடை பட்டியல் நீளுகின்றது.
அடுக்கடுக்காய்ப் படிக்கட்டுகள் ஏறி ஆலயத்தினுள் பிரவேசித்ததும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மார்பிலே தரித்து சந்நிதி பீடத்தில் சலேத் அன்னை நிற்கும் கோலம் அனைவரையும் பரவசப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆலயத்தின் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றி, திருவிழா கொண்டாடுவது வழக்கம். 15-ம் தேதி மரியாளின் விண்ணேற்பு விழா கொண்டாடப்படும். கொடைக்கானல் மக்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து இத்திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கு கொள்வர். மேலும், நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் பொது மக்கள் இந்த ஆலயத் திருவிழாவில் பங்கேற்று, தங்களது நேர்த்திக் கடனையும் செலுத்தி வருகின்றனர்.
சீஸனில் கொடைக்கானலுக்கு வரும் கிறிஸ்துவர்கள், இந்த ஆலயத்திற்கு வராமல் செல்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வசதிக்காக திரு இருதய ஆலயப் பங்கு சார்பில் தண்ணீர் வசதி, தங்குமிடம், நற்செய்தி அரங்கம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நடைபெறுகின்றது. திருவிழா நாள்களில் ஜெப வழிபாடு, நற்கருணை வழிபாடு நடைபெறுகின்றன. இந்த நாட்களில் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து இங்கு பாதயாத்திரையாய் வருபவர்களும் உண்டு.
மதுரையிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும், பழனி மற்றும் வத்தலகுண்டிலிருந்து 60 கி.மீ. தூரத்திலும் இந்த ஆலயம் உள்ளது. மதுரை, திண்டுக்கல், கொடை ரோடு ரயில் நிலையங்களில் இறங்கி பஸ்ஸில் செல்லலாம். கொடைக்கானல் பஸ் நிலையத்திலிருந்து சலேத் அன்னை ஆலயத்துக்குச் செல்வதற்கு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...