வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

திருமுறை காட்டித் தந்த விநாயகர்

"திருநாரையூர்' என்னும் திருத்தலம், சிதம்பரம்-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் இடையே சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார்கோயிலிலிருந்து 8 கி.மீ. த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:56 pm IST

"திருநாரையூர்' என்னும் திருத்தலம், சிதம்பரம்-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் இடையே சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார்கோயிலிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற, சோழ நாட்டுக் காவிரியின் வடகரைத் தலங்களில் 33வது திருத்தலமாக விளங்குகிறது. இத்தலத்து இறைவன் திருநாமம் ஸ்ரீசெüந்தரேஸ்வரர், அம்பிகையின் திருநாமம் ஸ்ரீதிரிபுர சுந்தரி.

சுயம்பு விநாயகர்

இங்கு ஸ்ரீ செüந்தரேஸ்வரரின் சந்நிதிக்கு தென்மேற்கு திசையில் தனிச் சந்நிதியில் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் தரிசனம் தருகிறார். நல்லார்க்கும், பொல்லார்க்கும் நலம் கொடுக்கும் அந்நாயகரைப் பொல்லாதவர் எனலாமோ? பொள்ளாப் பிள்ளையார் என்பதே தற்போது மருவி, "பொல்லாப்பிள்ளையார்' என வழங்கப்படுகிறது. "பொள்ளாத' என்றால், "உளியால் செதுக்கப்படாத' அல்லது "கல்லைப் பொளியாமல் தோன்றிய' என்று அர்த்தம். இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றிய காரணத்தால் "பொள்ளாப் பிள்ளையார்' என அழைக்கப்பட்டார். சுப்பிரமணியருக்கு எவ்வாறு ஆறு படை வீடுகள் உள்ளதோ அது போலவே விநாயகருக்கும் உண்டு. அதில் முதன்மையானது திருநாரையூர். மற்ற தலங்கள் திருவண்ணாமலை, திருமுதுகுன்றம், திருக்கடவூர், மதுரை, காசி ஆகியவையாகும்.

ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் இல்லாவிட்டால் தேவாரப்பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்காது. நம்பியாண்டார் நம்பி மற்றும் சோழப் பேரரசன் ராஜராஜன் இவர்கள் இருவர் மூலமாக அவர், தேவாரத் திருமுறைகளை நமக்குக் கிடைக்கச் செய்தார். அந்த வரலாறு இதோ..!

திருமுறை தந்த ஊர்

சைவத் திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிட வேண்டும் என்ற நெடுநாளைய ஆசையுடன் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான் ராஜராஜ சோழன். "திருமுறை இருக்கும் இடம் காட்டியருள வேண்டும்' என்று ராஜ ராஜனும், நம்பியாண்டார் நம்பியும் வேண்ட, "தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும்' என தெய்வவாக்கு ஒலித்தது. (இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள் பிரகாரத்தில் "ஸ்ரீதிருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி' அமைந்துள்ளது.)

ராஜ ராஜசோழன் தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று திருமுறை தொகுக்க அனுமதி கேட்டான். அவர்கள் சொல்படி சைவ மூவர் சிலைகளை வடித்து வைத்துப் பூஜித்து, அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையைத் திறக்கச் செய்தான். ஏடுகள் புற்று மூடியிருக்கக் கண்டனர். உள்ளம் நொந்தனர். "இக்காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துப் பிறவற்றைச் செல்லரிக்கச் செய்தோம்' என எழுந்த திருவருள் வாக்கால் ஒருவாறு அமைதி பெற்றனர். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு அவற்றை பதினோரு திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான் மன்னன். பின்னர் தேவாரப் பதிகங்களுக்கு தக்க பண்களும் முறையாக அமைக்கப்பட்டன.

இவ்விதம் தேவாரப் பதிகங்கள் தக்கப் பண்களுடன் நமக்குக் கிடைக்க நம்பியாண்டார் நம்பி மற்றும் ராஜராஜ சோழன் மூலமாக அருளியவர் திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்.

ஆலய அமைப்பு

அற்புதமான சிவன் கோயில் இது. முகப்பு வாயிலும், அதைத் தொடர்ந்து சிறிய விநாயகரும், நந்தி மண்டபமும் காணப்படுகின்றன. கொடி மரம் இல்லை. அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. நேரெதிரே ஸ்ரீ செüந்தரேஸ்வரர் சுவாமி சந்நிதி அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளும், சோபன மண்டபத்தில் சிவகாமி உடனாகிய ஸ்ரீ நடராஜர் சந்நிதியும் இருக்கின்றன. சுவாமி சந்நிதி வெளிப்புற கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். தென்கிழக்கு மூலையில் வாகன மண்டபமும், மடப்பள்ளியும் உள்ளன. ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் மகாமண்டபத்தில்  நம்பியாண்டார் நம்பியும் ராஜராஜசோழனும் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தின் மேற்கே பிற சந்நிதிகளும், தலவிருட்சமான புன்னை மரமும் உள்ளன.

வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கில் ஸ்ரீதிரிபுர சுந்திரி அம்மன் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற தலம்

இது திருஞானசம்பந்தர் மற்றும் அப்பரால் பாடப்பட்ட தலமாகும். திருநாரையூர் திருத்தலத்தைச் சுற்றி சுமார் 20 கி.மீ. தொலைவிற்குள் தேவாரப் பாடல் பெற்ற பல சைவத் தலங்களும், வைணவ அபிமானத் தலமான காட்டுமன்னார்கோயிலும் அமைந்துள்ளன. பக்தர்கள் ஒரு நாள் செலவிட்டால் இத்தலங்களைத் தரிசித்து புண்ணியம் அடையலாம்.

திருப்பணி

மிகவும் தொன்மையான, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இத்திருத்தலம், 1984ல் குடமுழுக்கு கண்டது. 23 வருடங்களுக்குப் பின் தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் திருப்பணி வேலைகள் மிகவும் தாமதமாகின்றன. இந்நற்பணிக்கு உதவிட விரும்பும் அன்பர்கள், மேலும் விவரங்களுக்கு 04144-262019 அல்லது 04144-239303 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

ஜெ. கணேஷ்

படங்கள் : எம். ஜெயகார்த்திக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.