'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!
பகவத் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஸ்ரீமன் நாராயணனின் மூல மந்திரம் பற்றி உபதேசம் கேட்டார். அதற்காக அவர் 18 முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சென்று வந்தார்.


பகவத் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஸ்ரீமன் நாராயணனின் மூல மந்திரம் பற்றி உபதேசம் கேட்டார். அதற்காக அவர் 18 முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சென்று வந்தார்.
18வது முறை சென்றபோதுதான் ராமானுஜருக்கு திருமந்திரமான எட்டெழுத்தை உபதேசித்தார் நம்பிகள். அப்போது, "இந்தத் திருமந்திரத்தை யாருக்கும் உபதேசிக்கக் கூடாது' என்றும், "அப்படிச் செய்தால் உயிராபத்து ஏற்படும்' என்றும் நிபந்தனை விதித்தார். ராமானுஜருக்கு எந்த அளவில் திருமந்திரத்தின் மீது பற்று உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவே நம்பிகள் ராமானுஜரை அலைக்கழித்தார். இருந்தபோதிலும் ராமானுஜரிடம் அவருக்குப் பற்று இருந்தது. ஆனால் ராமானுஜரோ "மந்திரோபதேசம்' முடிந்த உடனே திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, அங்கு கூடியிருந்தவர்களையெல்லாம் அழைத்து, அனைவருக்கும் காதில் விழும்படியாக "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்தை உரக்கக் கூவினார். ""இந்த நாம ஜெபம் செய்தால் நீங்கள் அனைவரும் நல்ல கதியடைவீர்கள்'' என்று கூறினார்.
இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பிக்கு மிகவும் கோபம் வந்தது. தான் இட்ட நிபந்தனையை மீறி அரியதொரு திருமந்திரத்தை நாடறியச் சொன்ன ராமானுஜரைக் கண்டித்து, "இதனால் என்ன விளைவு நேரிடும் என்று தெரிந்தும் இவ்வாறு செய்துவிட்டீரே?' என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், ""இதனால் அடியேன் ஒருவனுக்கு நல்லது நடக்காமல் போனாலும், இதைக் கேட்ட மக்களுக்கு நல்ல கதி கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இதைச் செய்தேன்'' என்றார். ராமானுஜரின் பதில் நம்பிகளின் மனதை வாட்டியது. "இந்த எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டதே' என்று நினைத்த அவருக்கு ராமானுஜர் மீது பற்று அதிகமாயிற்று. அவரைப் பாராட்டி, ""உமக்குள்ள பரந்த மனப்பான்மை எனக்கு இல்லாமல் போய்விட்டதே. இனி வைணவ மதம் உமது பெயராலே "எம் பெருமானார் தரிசனம்' என்ற புகழுடன் விளங்கும்'' என்று வாழ்த்தி அனுப்பினார்.
எம்பெருமானார் திருவரங்கத்தில் வசித்துக் கொண்டிருந்தபோது தினந்தோறும் பிûக்ஷக்குச் சென்று அதைக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தார். ராமானுஜரின் கொள்கைகளைப் பிடிக்காத சிலர், அவரைக் கொன்றுவிட தீர்மானித்தனர்; ஒரு பெண்மணியிடம் ராமானுஜர் பிûக்ஷக்கு வரும்போது விஷம் கலந்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். அது அந்தப் பெண்மணிக்கு கவலையையும், பயத்தையும் உண்டு பண்ணிய போதிலும் ஒரு நாள் ராமானுஜர் வந்தபோது விஷம் கலந்த உணவை இட்டாள். இருந்தபோதிலும் தான் செய்த தவறை வெளியில் சொல்ல முடியாமல், தான் தவறு செய்துவிட்டதையும் உணர்ந்து கண்ணீர் மல்க ராமானுஜரின் பாதக் கமலங்களில் அடி பணிந்து கதறி அழுதாள்.
ராமானுஜருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் கொடுத்த உணவை உட்கொள்ளாமல், அன்று முதல் உண்ணா நோன்பிருந்து வெறும் நீர் அருந்தியே வாழ்க்கையைத் தொடர்ந்தார். இதனால் அவரது உடலில் தளர்ச்சி ஏற்பட்டது. இவ்விஷயம் திருக்கோட்டியூர் நம்பிகளுக்கு எட்டியது. அவர் உடன் ராமானுஜரைக் காண திருவரங்கம் வந்தார். அவர் வரும் விவரமறிந்த ராமானுஜர், அவரை நோக்கி காவிரி மணலில் (நடுப்பகலில் ஆற்று மணல் மிகவும் சூடாக இருந்த நிலைமையிலும்) ஓடி வந்து வரவேற்றார்; அவர் பாதங்களில் வீழ்ந்து சரணடைந்தார்.
நடுப்பகலில் சூடான ஆற்று மணலில் நம்பிகளின் காலடியில் ராமானுஜர் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அனைவருக்கும் கவலை எழுந்தது. இதனால் "ராமானுஜரின் உடலுக்கு என்ன தீங்கு வருமோ?' என அஞ்சினர். நம்பிகளும் இதைக் கண்டும் காணாதவாறு இருந்தார். ஆனால் அக்குழுவிலே இருந்த கிடாம்பியாச்சான் என்பார், திருக்கோட்டியூர் நம்பிகளைப் பார்த்து, ""இது என்ன பரிதாபம்! ஆற்று மணலில் அடிபணிந்திருக்கும் ராமானுஜரை எழுந்திருக்கச் சொல்லும். இது என்ன ஆசார்ய-சிஷ்ய பாவம்...''
எனத் தானே ராமானுஜரைக் கைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். அப்போது நம்பிகள் கூடியிருந்தோரிடம், ""உங்களில் யாருக்காவது ராமானுஜன் மீது அபிமானம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வெறுமனே இருந்தேன். அப்படி அபிமானம் உள்ள கிடாம்பியாச்சான் கிடைத்துவிட்டான்'' என்று மகிழ்ச்சியோடு கூறி, ""இனி ராமானுஜரின் ஆகார வசதிகளைக் கவனிக்கும் பொறுப்பை நீர் ஏற்க வேண்டும்'' என்று அவரிடம் கூறினார். அதன்படி ஆச்சானும் ராமானுஜருக்குத் தமது கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். கிடாம்பியாச்சானின் குமாரரும், குமாரத்தியும் ராமானுஜரைக் குருவாக ஏற்றனர்.
இவ்வாறு ராமானுஜர் மீது பரிவு கொண்ட நம்பிகளின் ஏற்பாட்டால் பின்னாளில் ராமானுஜருக்கு அந்தரங்க சிஷ்யராக கிடாம்பி ஆச்சான் விளங்கினார்.
திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய ராமானுஜர் அந்தாதியில் தெரிவித்துள்ளபடி ராமானுஜரின் அடியாரான கிடாம்பி ஆச்சானைப் பணிந்து ராமானுஜரின் அருளுக்கு இலக்காகலாம். பகவத் ராமானுஜர் ஜெயந்தி 20.4.2010 (சித்திரை- திருவாதிரை), கிடாம்பி ஆச்சான் திருநட்சத்திரம் 26.4.2010 (சித்திரை-ஹஸ்தம்) ஆகும். இந்தப் புண்ணிய தினங்களில் இந்த இரண்டு அருளாளர்களையும் வழிபட்டு, ஸ்ரீமந் நாராயணனை அடைவோமாகுக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...