பெண்களின் சபரிமலை!
அண்டை மாநிலமான கேரளத்தில், ஆலப்புழை - செங்கனாசேரிக்கு அருகில் உள்ளது சக்குளத்துகாவு பகவதி கோயில். இங்கே கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் வேளையில், ஐந்து லட்சத்துக்கும் மேலான பெண்கள், அம்மனை வேண்டி பொங்கல் வைக்கும் அதிசயம் நிகழ்கிறது.
மாலை போல ஆறுகள்!
பம்பை ஆறும், மணிமலை ஆறும், ஒரு மலர் மாலை போல இருபுறமும் ஓட, இயற்கை வளம் மிகுந்த பகுதியில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ள இடம் "நீரேற்றுபுரம்' என்று அழைக்கப்படுகிறது. புற்றிலிருந்து வெளிப்பட்ட அம்மனின் சுயம்புத் திருமேனியும், அதனுடன் ஆறாகப் பாய்ந்த நீரும் "நீரேற்றுபுரம்' என்ற பெயர் வரக் காரணமானது.
வேடன் ஒருவன் இந்தக் காட்டுப் பகுதியில், விறகு வெட்டுவதற்காக, தனது கோடரியைத் தோளில் சுமந்தவாறு சென்றான். அவனை எதிர்கொண்டது ஓர் அச்சுறுத்தும் நாகம். தனது கோடரியால் அதனைத் தாக்க முற்பட்டபோது அந்த நாகம் தப்பித்து ஓடியது. அடிபட்ட பாம்பு தன்னை மீண்டும் துரத்தும் என்று அஞ்சி, அதனைத் தேடிச் சென்றான். காடு முழுவதும் தேடிக் களைத்துப் போனான். வனத்தின் நடுவே ஒரு குளமும், அருகில் ஒரு பெரிய புற்றும் கண்டான். புற்றின் மேல் அவனைத் துரத்திய பாம்பு படமெடுத்தவாறு இருந்தது. பாம்பை தனது கோடரியால் மீண்டும் பலமுறை வெட்டிட முயற்சி செய்தும், ஒரு வெட்டுகூட பாம்பின் மீது படாது பாம்பு புற்றுக்குள் மறைந்துவிட்டது.
பாம்பை வெட்ட அவன் முயற்சித்து போது, புற்றிலிருந்து வெள்ளம்போல நீர் பெருக்கெடுத்தது. திடுக்கிட்டான் வேடன். அப்போது அங்கே தோன்றிய முனிவர் ஒருவர், ""பாலும் தேனும் சேர்ந்தது போலக் காணும் போது புற்றிலிருந்து நீர் வருவது நிற்கும். அப்போது புற்றைக் கலைத்துப் பார்த்தால், ஒரு விக்ரகம் வெளிப்படும். அதனை "வன துர்கையாக'யாக வழிபடுவோம். நல்லது நடக்கும்'' என்று ஆசி கூறினார்.
முனிவர் கூறியபடியே சிலையை எடுத்து அவரது கரத்தாலேயே பிரதிஷ்டையும் செய்தனர். அன்றிரவு வேடனின் கனவில் தோன்றிய நாரத முனிவர், "நானே காட்டில் முனிவராக வந்து விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தேன்' என்று கூறினார். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பின்னணி இது. காட்டின் நடுவே குளத்து நீர் சர்க்கரைபோல இனித்ததால் அதனை சர்க்கரை குளம் என அழைத்தனர். அதுவே நாளடைவில் "சக்குளம்' என்று ஆனது.
காரிய சித்தி அபிஷேகம்:
கேரள மாநிலத்தில் உள்ள இதர கோயில்களைப் போலவே இங்கும் அன்னபிராசனம்(சோறூட்டல்), துலாபாரம் ஆகியவை பக்தர்களால் செய்விக்கப்படுகின்றன. ஆனால் வேறு எந்தத் திருக்கோயிலிலும் நடைபெறாத "அபூர்வ வழிபாடு' இங்கு நடைபெறும் "காரியசித்தி' அபிஷேகம் ஆகும். அதற்கென்று உரிய சந்நிதியில் உள்ள சிலைகளுக்கு, பக்தர்கள் தங்கள் கரத்தாலேயே நீரால் அபிஷேகம் செய்வித்து ஆராதனை செய்கின்றனர்.
அரவரசனுக்கு சிறப்பு
வழிபாடு:
ஆதிசேஷனே ஆயில்ய நட்சத்திரத்துக்குரிய தேவதை. அரவங்களின் அரசனும் அவனே. சர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டோர் நிவாரணம் பெற, இங்கு விசேஷமாக நீரும் பாலும் சமர்ப்பித்து நாகராஜனையும், நாக கன்னியையும் வழிபடுவது தனிச் சிறப்பு. ஆசார விதிகளோடு, ஆயில்ய நட்சத்திரத்தன்று நடைபெறும் வழிபாட்டில் பங்கேற்று, மக்கள் தோஷம் விலகி, நலம்பெறுவதும் கண்கூடு.
இருமுடி:
"பெண்களின் சபரிமலை' என்ற சிறப்புப் பெயரை சக்குளத்துக்காவு பெற்றுவிட்டதற்குக் காரணம் உண்டு. மார்கழி முதல் நாள் முதல் பன்னிரெண்டு நாட்கள் வயது வேறுபாடின்றி, கடுமையான விரதம் ஏற்கும் பெண்கள் "இருமுடி' கட்டிக்கொண்டு வருகின்றனர். எனவே சபரிமலைக்கு இணையாக சக்குளத்துக் காவு பகவதியும் பெருமை பெறுகிறாள். விரதமிருப்போர் 11ஆம் நாள் "கலச அபிஷேகம்' நடத்துகிறார்கள். அன்று சக்குளத்துக் காவு பகவதி கோயிலில் லட்சத்துக்கும் அதிகமான "கலசங்கள்' பூஜையில் வைக்கப்பட்டு சந்நிதியை அடைகின்றன. 12ஆம் நாள் அனைத்துப் பெண்களும் ஆண்களும், காவடி ஏந்தி அம்மனை வலம் வருவர். "அம்மச்சி காவடி' என்று இதனை அழைக்கிறார்கள்.
கார்த்திகைப் பொங்கல்!
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியன்று "தீபம்' ஏற்றுவது தமிழ்நாட்டின் சிறப்பு. கேரளத்தில் சக்குளத்துக் காவு திருக்கோயிலில் அன்று பல லட்சம் பெண்கள் கூடி, பகவதி அம்மனுக்கு பொங்கல் சமைத்துப் படைக்கிறார்கள். அன்று மாலை சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மூலிகை கஷாயம்:
வெள்ளிக் கிழமை தோறும் பக்தர்களுக்கு 21 மூலிகைகள் கூட்டாகச் சேர்த்துக் காய்ச்சிய அருமருந்தாக "கஷாயம்' அன்னையின் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. தீராத நோய்களையும் தீர்க்கவல்லது இந்த மூலிகை கஷாயம். மலையாள மாதம் முதல் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வருகிறார்கள். அவர்கள் சக்குளத்து அம்மனின் வீர வாள் மீது தீய பழக்கங்களை விட்டுவிடுவதாக சத்தியம் செய்வது மெய்சிலிர்க்க வைக்கிறது.
மேலும் இங்கே வெற்றிலை பிரஸ்னம் மூலம் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.
நாரீ பூஜை:
பராசக்தியின் அம்சமாகக் கருதப்படும் பெண்களின் பாதங்களைக் கழுவி, அவர்களுக்கு நடத்தும் சிறப்பு வழிபாடுதான் "நாரீ பூஜை'. மார்கழி முதல் வெள்ளியன்று இந்த நாரீ பூஜை நடைபெறும். வழிபாடுக்குரிய பெண்ணை தேர்வு செய்து, சகல வாத்தியங்களுடன் திருக்கோயிலுக்குள் அழைத்துச்சென்று பாத பூஜை செய்து, அம்மனின் மறு உருவமாக வழிபடுவதும் சக்குளத்துக் காவு திருத்தலத்தின் சிறப்பு ஆகும்.
இதர கேரள கோயில்களைப் போலவே இங்கும் கன்னி மூலை கணபதி, முருகன், சிவன், விஷ்ணு, 12 அடி உயர ஆஞ்சநேயர், நவகிரக சந்நிதிகளும் உள்ளன.
வெள்ளிக் கிழமைகளில் அம்பலத்தைச் சுற்றி ஏற்றப்படும் "சுற்று விளக்குகள்' நம்மை தேவர் உலகுக்கே அழைத்துச் செல்லும்.
அமைவிடம்:
ஆலப்புழை-செங்கனாசேரி பாதையில் திருவல்லாவில்இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது சக்குளத்துக்காவு.
நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
தொலைபேசி எண்: 0477-2213550
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


