கரிகாலன் கட்டிய ஸ்ரீவில்லீஸ்வரர் ஆலயம்!
கொங்கு நாடு பல்வேறு திருத்தலங்களைக் கொண்டது. இங்கே பழமையான திருக்கோயில்கள் பல இடங்களில் இருந்தாலும் காலத்தினாலும், அமைப்பினாலும், பாரம்பரியத்தாலும் சில தலங்கள் மிகுந்த சிறப்பு பெற்றவை. அதிலொன்றுதான் ச


கொங்கு நாடு பல்வேறு திருத்தலங்களைக் கொண்டது. இங்கே பழமையான திருக்கோயில்கள் பல இடங்களில் இருந்தாலும் காலத்தினாலும், அமைப்பினாலும், பாரம்பரியத்தாலும் சில தலங்கள் மிகுந்த சிறப்பு பெற்றவை. அதிலொன்றுதான் சுமார் 1400 வருடங்கள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவேதநாயகி ஸமேத ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில். கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ளது துடியலூர். இதன் கிழக்கே என்.ஜி.ஜி. காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இடிகரை. இங்கு அமைந்துள்ளது ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில்.
இருகரை பெருமான்: சைவ சமயம் தழைத்தோங்குவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் சோழ மன்னர்கள். அவர்கள் இச்சமயத்திற்கு ஆற்றியுள்ள தொண்டுகள் அளப்பரியவை. அத்தகைய சோழ மன்னர்களில் சிறந்தவரான கரிகால சோழனால் கட்டப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில்.
வில்வ மரங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டதாலும், வில்லை ஆயுதமாகக் கொண்ட வேட்டை சமுதாயத்து மக்கள் வழிபட்டதாலும் "வில்லீஸ்வரர்' என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கருத்துகள் நிலவுகின்றன.
தொன்மைக் காலத்திலேயே இந்த ஊரின் பெயர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இதற்கு "இருகரை' என்ற மற்றொரு பெயரும் உள்ளதாகப் பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள குருடிமலை, பாலமலை, பொன்னனூத்து மலை ஆகியவற்றில் பெய்யும் மழை நீர் இந்த ஊரின் இருபக்கமும் ஓடி, கோயில்பாளையத்தைக் கடந்து நொய்யல் ஆற்றில் கலப்பதால் இது "இருகரை' எனப்பட்டது என்கிறார்கள்.
""குருடிமலை மிசை மீதினிலே
பெருகியே வரும் பருகமா நதிக்கரைதனில்
வீற்றிருக்கும் இருகரை எனும்
துறையூர் பெருமானே!'' என்கிற பாடலும் அதை உறுதிப்படுத்துகிறது.
கரிகாலன் கட்டினான்: கல்லணையைக் கட்டிய கரிகாலன் நிறைந்த செல்வத்தைப் பெற்றிருந்தாலும் குடும்பத்தில் நிலவிய பிரச்னைகளின் காரணமாக மனதளவில் துயருற்றிருந்தான். மன்னனின் வாட்டத்தைப் போக்க விரும்பிய அமைச்சர் பெருமக்கள் குறி சொல்வதில் கைதேர்ந்த பெண்ணை வரவழைத்துக் குறி கேட்டனர். ""கொங்கு நாட்டில் மக்களைக் குடியமர்த்தி, கோயில் கட்டிக் குளமும் வெட்டினால் மன்னனின் குறைகள் விலகும்'' என்று அந்தப் பெண் சொல்ல, கொங்கு நாட்டில் முப்பத்தாறு பெரிய ஆலயங்களையும், முன்னூற்று அறுபது சிறு ஆலயங்களையும், முப்பத்து இரண்டு அணைகளையும் கட்டினான் கரிகாலன். இவ்வாறு கட்டப்பட்ட பெரிய திருக்கோயில்களில் இருபத்தொன்பதாவதாக இடம் பெற்றுள்ளது ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில்.
இதனைக் கட்டுவதற்காக இருகூறைக் கடந்து, இருண்ட வனத்தில், நகர் அமைக்க இடம் தேடிக் கொண்டிருந்தான் சோழமன்னன். அப்போது இப்பகுதியை ஆண்ட சேரமன்னன், காட்டின் காவல் தெய்வமாக இருந்த வில்லி துர்க்கை பத்ரகாளி தன்னிடம் பலி கேட்டதாகக் கூறினான். இதையடுத்து சோழனும், காட்டை அழித்து ஊராக்கிய பின்னர் கோயில் கட்டி பலி கொடுப்பதாக உறுதியளித்தான். அவ்வாறு காட்டை அழிக்கும் போது ஒரு சிவலிங்கம் கிடைத்தது. இதனை வைத்துதான் வில்லீஸ்வரர் கோயிலை எழுப்பினான் கரிகாலசோழன். கோயில்களின் சுவரில் உள்ள கற்களில் கல்வெட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. சிறந்த கலை விற்பன்னர்களின் கை நுணுக்கத்தால் கட்டப்பட்டது என்பதை இக்கோயிலின் அமைப்பே நமக்கு உணர்த்துகிறது. சோழன் சேர மன்னனுக்கு அளித்த வாக்குப்படியே இடிகரையின் எல்லையில் துர்க்கைக்கு கோயில் எழுப்பி அங்கு ஆடு, பன்றி, கோழி எனும் முப்பலியையும் கொடுத்தான். அதுவே தற்போது உள்ள எல்லை ஸ்ரீமாகாளியம்மன் கோயில் என நம்பப்படுகிறது.
வழக்கு தீர்க்கும் இறைவன்! இத்தலத்தில் ஸ்ரீவில்லீஸ்வரருக்கு அடுத்து ஸ்ரீவேதநாயகி அம்மன் சந்நிதி உள்ளது. நான்கு கைகளுடன், இரண்டு கைகளில் தாமரை மலர்கள் ஏந்தியும், மற்ற இரு கைகளில் வர, அபய முத்திரை காட்டியும் வீற்றிருக்கிறாள் அம்மன். அருகே சுப்பிரமணியருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. சிவன், அம்மன், சுப்பிரமணியர் மூவரும் ஒரே வரிசையில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி வடிவம் என்பர். இந்த அமைப்பு அபூர்வமான ஒன்று.
வழக்கு போன்ற பிரச்னைகளில் கஷ்டப்படுபவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற இங்குள்ள சிவனை அபிஷேகம் செய்து வழிபட்டால் மூன்று மாதங்களுக்குள் பிரச்னை தீரும். சோமாஸ்கந்த அமைப்பில் இத்திருத்தலம் உள்ளதால் நீண்ட காலத் திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இத்திருத்தலத்தின் பெருமைகள் அனைத்தும் 26 கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மன்னர்கள், பொதுமக்கள் மனமுவந்து கோயிலுக்கு அளித்த கொடைகள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இதன் தல விருட்சம் வில்வ மரம். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 14,15,16 ஆகிய தினங்களில் வில்லீஸ்வரருக்கு சூரியன் தன் கிரணங்களால் காலை நேரத்தில் பூஜை செய்வது கண்கொள்ளாக் காட்சி.
திருப்பணி: காலப்போக்கில் இந்தத் திருத்தலம் பராமரிக்கப்படாமையால் அழிந்து போனது. பின்னர் கொங்கு மன்னர்களுள் ஒருவரான விக்கிரமசோழன் கி.பி. 1255-1263ஆம் ஆண்டுகளில் இதனைப் புதுப்பித்தான். அவனுக்குப் பின்னர் வந்தவர்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டதால் சிதிலமடைந்து போனது. 1974ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டு தொடர்ந்து மாதாந்திர கிருத்திகை, பிரதோஷம், சதுர்த்தி மற்றும் சிவனுக்கு முக்கிய நாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. பின்னர் அவையும் நின்று போயின. சிதிலமடைந்த இந்தக் கோயிலைப் புனரமைக்க இப்பகுதியைச் சேர்ந்த நல்லோர் கூடி முடிவெடுத்தனர்.
அதன்படி 2006ஆம் ஆண்டு முதல் திருப்பணிகள் நடக்கின்றன. இந்து அறநிலையத்துறையின் மூலம் திருப்பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் 98942-43633 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...