

நவராத்திரியில், நல்வாழ்வு அளிக்கும் இறைவி சக்தியை வழிபடுகிறோம். கல்வி, செல்வம், வீரம் மூன்றுமே தேவை என்றாலும், நல்லது கெட்டதை உணர்ந்துகொள்ள "கல்வி' அவசியம்.
திருக்கோயில்களில், கல்வித் தெய்வம் கலைமகளுக்கு தனி இடம் தந்திருக்கின்றனர். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் முதன்முதலாக சரசுவதியின் வடிவம் இடம்பெற்றது. பின்னர் சோழர் காலத்தில் துடையூர் (திருச்சி அருகில்), தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல கோயில்களில் கலைமகளை எழுந்தருளச் செய்தனர். சோழர் காலத்தில் செப்புத் திருமேனி செய்து வழிபட்டனர்.
நவராத்திரி நாட்களில் "சரசுவதி பூஜை' செய்து வழிபடுகிறோம். தேவி தன் மேல் இரு கரங்களில் அக்கமாலையும், கமண்டலமும் தாங்கியிருக்கிறாள். கீழ் இரு கரங்களில் வியாக்கியான முத்திரையும்- சுவடியும் தாங்கி, பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கூத்தனூரில் சரசுவதிக்கென்று தனிக்கோயில் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தர் வழிபட்டு பேறு அடைந்த சிறப்புத் தலம் கூத்தனூர்.
சரசுவதி பண்டாரம்:
கல்வியின் மேன்மைக்கு அடையாளமாக விளங்கும் ""நூலகங்கள்'', திருக்கோயில்களில் இருந்துள்ளன. இதனை ""சரசுவதி பண்டாரம்'' என அழைத்தனர். ""பண்டாரம்'' என்றால் கருவூலம். இங்கே ஓலைச் சுவடிகள் சேமித்து வைக்கப்பட்டன.
ஓலைச் சுவடிகள்:
ஓலைச்சுவடிகள், ஞானம் - அறிவின் அடையாளம். ஓலைச்சுவடியை கையில் ஏந்திய நிலையில் கலைமகள், தட்சிணாமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். திருவாவடுதுறை- மாசிலாமணிசுவரர் கோயிலில் சிற்ப வடிவில் காணப்படும் அகத்தியர், தமது கரத்தில் சுவடியைத் தாங்கி உள்ளார். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தன. திருமுறைகள் ஓலைகளில் எழுதப்பட்டு சிதம்பரம் கோயிலில் இருந்தன. அவற்றை இராஜராஜசோழன் வெளிப்படுத்தினான். ஓலையில் இருந்தால் அவை அழிந்துவிடும் என்பதால் விக்கிரமசோழன் காலத்தில் வாழ்ந்த நரலோகவீரன் திருமுறைகளை செப்பேடுகளில் பொறிக்கச் செய்தான்.
குடவோலை
அக்காலத்தில் எல்லாமே ஓலைச் சுவடிகளில்தான் எழுதப் பட்டன. அரசன் இடும் ஆணையை ஏற்று ஓலையில் எழுதும் அதிகாரிக்கு ""திருமந்திர ஓலை'' என்றும், இவர் எழுதியதை ஒப்பிட்டுப் பார்ப்பவருக்கு ""திருமந்திர ஓலை நாயகம்'' என்றும் பெயர். சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த ""குடவோலை'' பற்றி நாம் அறிவோம். உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயிலில் உள்ள பராந்தக சோழனின் கல்வெட்டு பண்டைய தேர்தல் முறையை அறிவிக்கும்.
நூலகங்கள்:
திருக்கோயில் நூலகங்களில் நூல்களை படியெடுக்கவும், பாதுகாக்கவும், பராமரிக்கவும் தானம் அளிக்கப் பெற்றது. சிதம்பரம் கோயிலில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த ராஜகுரு சுவாமி தேவர் ஒரு நூலகத்தை நிறுவினார்.
சேரன்மாதேவி திரௌபதி அம்மன் கோயிலில் 13ஆம் நூற்றாண்டில் ஒரு நூல் நிலையம் அமைக்க பிரம்மாதிராயர் என்பவர் பொருள் கொடுத்துள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலில் நீலகண்ட நாயக்கர் சரசுவதி பண்டாரத்தை நிறுவி, அதில் சரசுவதி, ஹயக்கிரீவர், வேதவியாசர் திருமேனிகளை அமைத்துள்ளார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் இரண்டாவது பிராகார வடக்குச் சுவர் கல்வெட்டால் இங்கு 14ஆம் நூற்றாண்டில் ஒரு நூலகம் இருந்துள்ளதை அறியமுடிகிறது.
கலைமகளைப் போற்றி கம்பர் அருளிய "சரசுவதி அந்தாதியும்', குமரகுருபரர் அருளிய "சகலகலாவல்லிமாலையும்' சிறப்பானவை. மகாகவி பாரதியார் கலைமகளைப் போற்றிப் பாடியுள்ள பாடல்களும் இனிமையானவை.
"கலைமகளை வழிபட்டால் எல்லா உயிர்க்கும் பொருந்திய ஞானம் தரும்! திருந்திய செல்வம் தரும்! அழியாப் பெருஞ்சீர் தருமே!' என்று கம்பர் தமது சரசுவதி அந்தாதியில் போற்றுகின்றார். நவராத்திரி நன்னாளில் கலைமகளைப் போற்றி அழியாத கல்விச் செல்வம் பெறுவோம்.
வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி I
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா II
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.