தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

நலன் தரும் நல்ணக்கீஸ்வரர்!

 இன்று வீட்டில் தொடங்கி நாடு வரை நல்லிணக்கம் தேவையாக உள்ளது. அண்டை நாடுகளிடையே நல்லிணக்கம் அமையும்போது உலகமே அமைதிப் பூங்காவாக விளங்கும். மத நல்லிணக்கம் இருப்பதனாலேயே இந்தியா ஒரு மத சார்பற்ற நாடாகத் த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:37 pm

எஸ். வெட்கட்ராமன்

 இன்று வீட்டில் தொடங்கி நாடு வரை நல்லிணக்கம் தேவையாக உள்ளது. அண்டை நாடுகளிடையே நல்லிணக்கம் அமையும்போது உலகமே அமைதிப் பூங்காவாக விளங்கும். மத நல்லிணக்கம் இருப்பதனாலேயே இந்தியா ஒரு மத சார்பற்ற நாடாகத் திகழ்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளமாக, எழிச்சூர் தலத்தில் நல்லிணக்கீஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்புரிகிறார். தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் தாம்பரத்திலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். எழிச்சூர் கூட்டுரோட்டிலிருந்து 2.5 கி.மீ. தொலைவு உள்ளே சென்றால் எழிச்சூர் கிராமத்தை அடையலாம். இங்குள்ள பழமையான சிவாலயத்தில் அருள்மிகு தெய்வநாயகி உடனுறை நல்லிணக்கீஸ்வரர் பக்தர்களைக் காத்தருள்கிறார்.

 கல்வெட்டுகள்: இவ்வாலயத்தில் காணப்படும் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டில், முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907 முதல் 940 வரை) ஆட்சியில் ஸ்ரீநல்லிணக்கீஸ்வரர் ஆலயத்தை கற்றளி ஆலயமாக நிர்மாணிக்க பொன் தானமாக அளித்த தகவல் உள்ளது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் திருப்பணி நடந்த தகவலையும் அறியலாம்.

 1429ஆம் ஆண்டு, விஜய நகரப்பேரரசர் வீர நரசிம்மரால் காஞ்சி காமகோடி பீடம் 54வது பீடாதிபதி ஸ்ரீவியாசாசல மகாதேவ சரஸ்வதி சுவாமிகளிடம் இவ்வாலயமும் எழிச்சூர் கிராமமும் தானமாக வழங்கப்பட்டன. இதற்கு தாமிர பட்டயம் சான்றாக உள்ளது. அந்த மகானின் அதிஷ்டானமும் ஆலயத்திற்குள் மூலவர் சந்நிதிக்கு பின்புறம் அமைந்துள்ளது.

 சந்நிதிகள்: சிவதரிசனத்தில் முக்கியமாகவும், முதலாவதாகவும் இடம்பெறுவது நந்தியெம்பெருமான் வழிபாடு. நமது வேண்டுகோளை நந்தியெம்பெருமான் தக்க நேரத்தில் இறைவனிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். அதேபோல் சிவபூஜையின் பலனைத் தரும் அதிகாரம் சண்டிகேசுவரருக்கு மட்டும்தான் உள்ளது.

 ஆலயங்களில் சிவ தரிசனம் முடிந்து இறுதியில் சண்டிகேசுவரரை வணங்க வேண்டும். இவ்விரு மூர்த்திகளின் அதிஅற்புதமான கோலத்தை எழிச்சூர் நல்லிணக்கீஸ்வரர் ஆலயத்தில் தரிசிக்கலாம். நந்தியின் எழில் வடிவம் சிற்பக் கலையின் சிகரமாகத் திகழ்கிறது.

 கருவறையில் மூலவர் நல்லிணக்கீஸ்வரர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் காட்சி தருகிறார். ஆவுடையாரின் வடிவம் மிகப் பெரியது. ஈசனின் கருவறை கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளது.

 ஆறுமுகப் பெருமான் ஆறு சிரங்களோடும், பன்னிரு கரங்களுடனும் மயில் மீது அமர்ந்துள்ள கோலம் அழகு. நந்திமண்டபம், விநாயகர் மண்டபம், மகா மண்டபம், சூரியன், பைரவர், நவகிரகங்கள், கோஷ்ட தெய்வங்கள் என ஒரு சிவாலயத்திற்கே உரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்று திகழ்கிறது

 இவ்வாலயம்.

 தல விருட்சம்: பெண் பனை, வில்வம், ஏரழிஞ்சல் என மூன்று தல விருட்சங்கள் கொண்ட திருத்தலம்.

 திருக்குளம்: ஆலயத்தின் வடபுறத்தில் கிழக்கு - மேற்காக தாமரைக்குளம் அமைந்துள்ளது.

 பரிகாரத் தலம்: திருமணத் தடைகள், தீராத நோய்கள் நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இவ்வாலயம் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

 திருப்பணி: நல்லிணக்கீஸ்வரர் ஆலயத்திற்கு கடைசியாக 1948ஆம் வருடம் குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு காலப்போக்கில் தகுந்த பராமரிப்பு இல்லாததாலும், வருமானம் இல்லாததாலும் மிகவும் சிதிலமடைந்தது. சில வருடங்கள் பூஜைகள் கூட நடக்காமல் இருந்தது. இந்நிலையில் ஆன்மிக அன்பர்கள் ஒன்றுகூடி "நமசிவாய அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏற்படுத்தினர். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. முற்றிலும் கற்கோயிலாக அமைக்க திட்டமிடப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. நிதிப் பற்றாக்குறை காரணமாக திருப்பணி வேலைகள் மீதம் உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் மகாகும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நந்தன வருடத்தில் நல்லிணக்கீஸ்வரரை வழிபட்டு அனைத்து நலன்களும் பெறுவோம். மேலும் தகவலுக்கு 94443 49009 மற்றும் 044-22233857.

 (எழிச்சூர் செல்ல தாம்பரத்திலிருந்து நகரப் பேருந்து எண் 55பி, காஞ்சிபுரம் செல்லும் தடம் எண் 79

 ஆகியவை உள்ளன).

 தகவல், பட உதவி: க. கிருஷ்ணகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.