தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

திருமகள் தேடி வந்த தலம்!

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு பகுதியில் கடும் வறட்சி நிலவியது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அம்பு எய்து ஒரு நதியை உற்பத்தி செய்தார். "அர்ஜுனன் நதி' என்று அழைக்கப்படும் அந்த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:19 pm

எஸ். வெட்கட்ராமன்

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு பகுதியில் கடும் வறட்சி நிலவியது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அம்பு எய்து ஒரு நதியை உற்பத்தி செய்தார். "அர்ஜுனன் நதி' என்று அழைக்கப்படும் அந்த நதிக்கரையில் அமைந்துள்ள கிராமம் வத்திராயிருப்பு. இங்குதான் ஸ்ரீபூமிநீளா சமேத அழகிய சாந்த மணவாளப் பெருமாள் அருள்புரிகிறார். இங்குள்ள மலைப்பகுதி "தர்மாத்ரி' என்று அழைக்கப்படுகிறது.



பெயர்க்காரணம்!

மகாலட்சுமி தாயார் இத்தலத்தில்தான் தவம் செய்தார். எனவே ஸ்ரீ (திருமகள்) "வக்த்ரம்' (திருமுகம்) என்பது "ஸ்ரீவக்த்ரபுரம்' என்று அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது வத்திராயிருப்பு என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் இங்கு தவம் செய்து, பெருமாளை கைத்தலம் பற்றிய பகுதி, இங்கிருந்து 38 கி.மீ. தொலைவில் சிவகாசி அருகிலுள்ள "திருத்தங்கல்' என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுகள்!

தற்போது உள்ள ஸ்ரீபூமிநீளா சமேத அழகிய சாந்த மணவாளப் பெருமாள் கோயில் கட்டிடம் கி.பி. 1464ஆம் ஆண்டு, ""வென்று மாலையிட்ட வீரபாண்டிய தேவன்'' என்ற தென்காசிப் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. வீரபாண்டியன் (கி.பி. 1442 - 1469) மற்றும் பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டியன் (கி.பி.1468 - 1481) ஆகியோர் காலத்தில் இக்கோவிலின் திருவிழாக்கள் மற்றும் இதர செலவுகளுக்காக நிலம் வழங்கப்பட்டுள்ளதையும் கல்வெட்டு எடுத்துரைக்கிறது. ஏகாதசி மண்டபத்தில் பெரிய அளவில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களையும் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

பாழடைந்த நிலையில்...!

காலம் குறிப்பிட முடியாத அளவுக்கு மிகப் பழமை வாய்ந்ததும், பஞ்ச பாண்டவர்கள் வணங்கிய பெருமை மிகுந்ததும், பல மன்னர் பெருமக்களால் திருப்பணி செய்யப்பட்டதுமான ஸ்ரீபூமி நீளா சமேத அழகிய சாந்த மணவாளப் பெருமாள் ஆலயம் ஒரு காலத்தில் ஏழு பிராகாரங்களுடன் அழகுறத் திகழ்ந்தது. இன்று மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சக்கரத்தாழ்வார் சந்நிதியுடன் கூடிய உபன்யாஸ மண்டபம் அடையாளம் தெரியாத அளவில் பாழடைந்துள்ளது.

இத்திருக்கோயிலின் வெளியே ஈசான திசையில் கருப்பசாமி காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகிறார். ஆலயத்திற்கு அருகில் பழமையான சிவன் ஆலயம் அழகு சேர்க்கிறது. பிரசித்த பெற்ற நல்லதங்காள் கோயில் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ளது.

திருப்பணி:

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது ஸ்ரீபூமிநீளா சமேத அழகிய சாந்த மணவாளப் பெருமாள் கோயில். ஆலயம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும், அழகிய மணவாளப் பெருமாள் ஆலயம் அழகு பெற வேண்டும் என்பது ஆன்மிக அன்பர்களின் விருப்பம். இக்கோயில் முழுவதும் கல் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிதி ஒதுக்கிய நிலையில் கடந்த 9ஆம் தேதி பாலாலயம் நடைபெற்று திருப்பணி வேலைகள் தொடங்க உள்ளன. உதவும் உள்ளம் கொண்டோர் தொடர்பு கொள்ள: 9443141884.

அமைவிடம்: மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கத்தில் மதுரையிலிருந்து 70கி.மீ. தொலைவில் உள்ளது வத்திராயிருப்பு. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.