சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வாரம் ஒரு பாடல்

இங்கோ அந்தக் கண்ணனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கித் தவித்து அரற்றுகிறார் ஆழ்வார்.

News image
Updated On :1 டிசம்பர் 2012, 1:01 pm

இறைவனின் அருட்பார்வைக்கு அன்றோ அன்பர் இரங்கிக் கிடப்பர். இங்கோ அந்தக் கண்ணனின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கித் தவித்து அரற்றுகிறார் ஆழ்வார்.
 திருமாலை அறியாதார், திருமாலை அறியார் என்ற சொல்வழக்கின்படி, திருமாலையாகிற இந்த 45 பாசுரங்களைப் படித்தாலே திருமாலை அணுகிச் செல்ல அன்பர்க்கு வழியுண்டாகும். இந்தப் பாசுரம் திருமாலை பாசுரத் தொகுப்பில் 36வது. தொண்டரடிப் பொடியாழ்வார் தேவதேவி எனும் பெண்பால் சிறிதுகாலம் மயங்கிக் கிடந்தார். தெளிவு கண்டபின் தம் அறியாமை நினைந்து அரங்கனை அழைத்துப் பாடுகிறார்.
 ""மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே,
 உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு,
 உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே, உன்னை யன்றே
 அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே''
 - ஆழ்வார்கள் மொழியில், மழை என்றால், அன்று கல் மழைப் பொழிவில் இருந்து ஆய்ப்பாடி மக்களைக் காக்க கோவர்த்தனக் குன்றைக் குடையாய் எடுத்துக் காத்ததைக் கூறும். "அன்று ஆயர்களும் பசுக்களும் இந்திரனின் கல் மழைக்கு நடுங்கினாற் போன்று, நான் இன்று உலக விவகாரங்களில் அகப்பட்டுத் துன்புறுகின்றேன். அன்று அவர்களைக் காத்ததுபோல் இன்று நீ எனைக் காக்க வேண்டும்' என்கிறார்.
 மதுரமாகிய ஆறாக வருபவனே என்று அழைக்கிறார். கடல்நீராகிய உப்பு கரிக்கும். ஆறு நன்னீர் கொண்டது என்பதுபோல் அவன், நாம் இருக்கும் இடம்தேடி வரும் ஆறுபோல் வருகிறான். தடைகளாகிற அணையை உடைத்து, எம்பெருமானின் அருளைப் பெறத் தயாராயிருக்கும் ஆழ்வாரின் மீது கருணையைக் காட்ட அவன் ஆறுபோல் தேடி வருகிறான். குன்றக்குடை எடுத்து அன்று காத்ததுபோல், இன்று மான் குட்டி போலும் மருளும் கண் அழகு படைத்திட்ட பாவையர் வலையில் அகப்பட்டுத் தவிக்கும் எனைக் காத்தருள வேண்டும் என்கிறார்.
 அன்பு என்பது மனத்தில் சிறிதும் இலாத இப் பெண்கள், என்னையே எல்லாமுமாக நம்பியிருத்தல்போலும், போக்கிடம் வேறு அற்றவர் போலும். வெளிவேஷத்தால் கட்டி, இவர்களிடமிருந்து தப்பித்துச் செல்லாதபடி வலைவீசி வளைத்து விட்டார்கள்.
 எம்பெருமானே உன் அழகில் ஈடுபட முடியாதபடி என்னைத் தடுக்கிறார்கள். அதை மீறிச் செயல்பட முடியாத சக்தியற்றவனாயிருக்கிறேன். நான் அழைத்துத் தான் நீ வரவேண்டுமோ! எனைக் காத்தருளும் கடமை உனக்கு உண்டன்றோ! உன்னையே அழைக்கிறேன். எனக்கு உன் கைங்கரியத்தில் சுவையை உண்டாக்கி உன்னிடம் அழைத்துக் கொள்ளத்தானே அரங்கத்தே கிடக்கின்றாய்! அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி.. உன்னிடத்தில் ஈடுபாட்டை உண்டாக்கிவிட்டுப் பேசாதிருப்பதேன் என்று அரற்றுகின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.