அன்னையின் கருணை
வீடுகளில் மகிழ்ச்சியை வாரி வழங்கும் நிகழ்வுகளில் முக்கியமானதொன்று பிறந்த நாள் கொண்டாட்டம்.


வீடுகளில் மகிழ்ச்சியை வாரி வழங்கும் நிகழ்வுகளில் முக்கியமானதொன்று பிறந்த நாள் கொண்டாட்டம். புத்தாடை அணிய சந்தர்ப்பம் கிடைப்பதாலோ, இனிப்புகளை பிறர்க்கு வழங்க வாய்ப்பு கிடைப்பதாலோ, கேக் வெட்டி மெழுகுவர்த்தியை அணைத்து மேலை நாட்டு பாணியில் கொண்டாட முடிவதாலோ எதுவாயிருந்தாலும் குழந்தைகள் புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் இதில் கலந்துகொண்டு அனைவரையும் மகிழ வைக்கின்றனர்.
இத்தகைய சந்தோஷம் தரும் நாட்களில் ஒன்றுதான் வரும் செப்டம்பர் 8ஆம் நாள். அன்றுதான் தேவ அன்னையான மரியாளின் பிறந்த நாள்- வேளாங்கண்ணி மாதாவின் திருநாள்.
ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே கொடியேற்றப்பட்டு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. நவ நாட்களான ஒன்பது நாட்களிலும், செப மாலை, தேர் பவனி போன்ற செப வழிபாடுகள் பக்தி சிரத்தையோடு நடைபெறுகின்றன. தமிழ்நாடு, கேரளம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வேறுபாடின்றி மக்கள் வந்து இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
ஆற்றுவோர் அற்று அரற்றுகின்ற பலருக்கும் வேளாங்கண்ணியில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமைகள் வாரந்தோறும் ஆற்றுப் பெருக்கினைப் போல் நிகழ்வதை நாம் காணலாம். வழிபாட்டின் வல்லமையை நமக்கு சந்தேகமின்றி எடுத்துக்காட்டுகிறது அன்னையின் திருத்தலத்தில் நம்பிக்கையோடு வேண்டும் கோடானு கோடி பக்தர்களின் காட்சி.
உலகம் நினைப்பதைவிட ஓராயிரம் புதுமைகளை வலிமையுடன் நிகழ்த்திக் காட்டுகிறது வழிபாடு என்று கவிஞர் டென்னிசன் பாடினார். தவித்த பலரின் வாழ்வை செபம் மாற்றியிருக்கிறது. குவிந்த துன்ப மேகத்தைத் துரத்தியிருக்கிறது. இறுகிய இதயங்களை இளக வைத்திருக்கிறது.
ஆம், நம்பிக்கையுடன் வேளைநகர் அன்னையை தரிசிக்கச் சென்ற எவருமே வெறுங் கையுடன் திரும்பியதில்லை. குருடர் பார்க்கின்றனர்; செவிடர் கேட்கின்றனர்; தீராத நோய்கள் குணமாகின்றன; சிக்கல்களில் மாட்டியுள்ள மனிதர் தெளிவான தீர்வு காண்கின்றனர்; மன அழுத்தம் மாறியிருக்கிறது; உறவுப் பிரச்னைகளில் தெளிவு பிறக்கிறது; தகுதியான துணை தேடும் இளையோர் கண்டடைகின்றனர்; பிள்ளைப் பேறின்றி தவிக்கும் பெண்கள் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். கேட்கும் எதுவுமே கிடைக்காமற் போயினும் கேட்காமலேயே மன மகிழ்வையும் அமைதியையும் அருள்கிறாள் அன்னை. அன்னையின் கருணைக்கும் எல்லை உண்டோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...