தலைநகரில் ஓர் "உத்தர சுவாமிமலை'!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பது தமிழகத்தில் முருகப்பெருமான் குறித்த பக்தர்களின் கூற்று.


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பது தமிழகத்தில் முருகப்பெருமான் குறித்த பக்தர்களின் கூற்று. தமிழகத்தில் மட்டுமன்றி, நாட்டின் தலைநகரான தில்லியிலும் குன்று மீது வீற்றிருந்து வடவருக்கும், தென்னவருக்கும் சுவாமி மலை சுவாமிநாதராக அருள்பாலித்து வருகிறார் முருகப்பெருமான்.
தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள "உத்தர சுவாமிமலை' எனும் மலைமந்திர்தான் அந்தப் புண்ணிய ஸ்தலம்.
தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகே உள்ள ஸ்ரீ தட்சிண சுவாமிமலை போன்று வடக்கில் உள்ள இந்த மலைமந்திர் "உத்தர சுவாமிமலை'யாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
தந்தைக்கு உபதேசம் செய்த சற்குருநாதன் ஸ்ரீ சுவாமிநாதப் பெருமான், உத்தர சுவாமிமலையின் கண்கண்ட தெய்வமாக அருள்பாலிக்கிறார். மலைக் கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தென்னிந்தியர் மட்டுமன்றி வட இந்தியரும் அதிகம் வழிபடுகின்றனர்.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தில்லிக்கு வந்த தமிழர்கள் பலரும் ராமகிருஷ்ணாபுரத்தில் வசித்து வந்தனர். அப்பகுதியில் சிறு குன்று இருந்தும், முருகன் கோயில் இல்லாத குறை இருந்து வந்தது. தில்லி சரோஜினி நகரில் 1961-ஆம் ஆண்டில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தில் பக்தர் ஒருவரின் கனவில் வந்த முதியவர் அவரது கையைப் பற்றி ஒரு குன்றுக்கு அழைத்துச் சென்று இதுதான் "எனது இருப்பிடம்' என்று கூறிவிட்டு மறைந்தாராம். கனவில் வந்த முதியவர் முருகன் என்பதும், அவர் சுட்டிக்காட்டிய இடம்தான் ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள சிறு குன்று என்பதும் பக்தர்களுக்கு பின்னர் தெரியவந்ததும், அங்கேயே முருகனுக்குக் கோயில் கட்டத் தீர்மானித்தனர்.
கோயில் நிர்மாணப் பணிகள் 1973-ம் ஆண்டு வரை நடைபெற்றன. கோயில் சிற்பங்கள் செய்வதற்கு வாலாஜாபாத் அருகே உள்ள பட்டுக்குப்பம் பகுதியில் இருந்து கற்கள் எடுத்துவரப்பட்டன. முருகன் திருவுருவச் சிலை செய்வதற்கு நெல்லை மாவட்டம், குறுக்குத்துறை, தாமிரபரணி ஆற்றில் இருந்து கல் எடுக்கப்பட்டது. கோயில் கும்பாபிஷேகத்தை காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார்.
இக்கோயிலில் சேர, சோழ, பாண்டியர் காலக் கட்டடக் கலையை நினைவுகூரும் வகையில் சந்நிதிகளும், மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோயில் வளாகத்தில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் பாண்டியர் காலக் கட்டடக் கலையையும், ஸ்ரீ கற்பக விநாயகர் சந்நிதி சேரர் காலக் கட்டடக் கலையையும், மலை மீது அமைக்கப்பட்டுள்ள முற்றிலும் கருங்கல்லால் ஆன முருகன் கோயில் சோழர் காலக் கட்டடக் கலை வடிவத்தையும் காண்போரின் கண் முன் நிறுத்துகின்றன.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "சில்ப கலா' மண்டபத்தின் நடுப் பகுதியில் ஒரே கல்லில் ஆன கோயில் மணி, இசைத் தூண், கல் பலகணி ஆகியவை தமிழர்களின் கட்டக் கலைத் திறத்தை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளன. அதேபோன்று, நந்தி சிலையின் மூக்குத் துவாரத்தில் நீளமான குச்சியைச் செருகினால் அதன் முனைப்பகுதி நந்தியின் காது வழியே வருவது காண்போரை ஆச்சரியத்தில் மூழ்கிடச் செய்வதாக அமைந்துள்ளது. இக்கோயில் பகுதியில் சித்தர்கள் சூட்சுமமாக இருந்து அருள்பாலிப்பதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்தரத் திருவிழா, கந்த சஷ்டி விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தின் தெற்கு நுழைவு வாயிலில் ஒரு ராஜகோபுரமும், மேற்கு நுழைவு வாயிலில் ஒரு நேர்த்தியான விமானமும் கட்டுவதற்கான திருப்பணிகள் தற்போது நடைபெறுகின்றன.
ஆலய திருவிழாக் காலங்களில் ஆண்டவன் பவனி வருவதற்கு ஏற்பாடாக ஒரு தங்கத் தேரும் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் நான்காவது மகா கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தகவலுக்கு: 011- 26175104
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...