பள்ளி கொண்டான் ரங்கநாதர்!
பள்ளி கொண்ட திருக்கோலம், மனிதருக்கு இகபர சுகத்தை அளிக்கும் அவதாரத் திருவுருவம்!


பள்ளி கொண்ட திருக்கோலம், மனிதருக்கு இகபர சுகத்தை அளிக்கும் அவதாரத் திருவுருவம்! அனந்தசயனம் எனப்படும் இத்திருக்கோலம், ஆச்சாரியர்களாலும் ஆழ்வார்களாலும் பெரிதும் போற்றப்படுகிறது. இத்திருக்கோலம் திருவரங்கத்தில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. அவர் தென்னரங்கன்!
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டான் எனும் இடத்தில் உள்ள திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டுமான அமைப்புடையதாகும். முதன் முதலில் பிரம்மாவுக்காகவும் அம்ப மகாராஜாவுக்காகவும் எம்பெருமான் பள்ளி கொண்ட நிலையில் காட்சி தந்த திருத்தலமாகும்!
அம்ப மஹாராஜா: இந்த பகுதியை அம்பராஜா எனப்படும் அம்பரீஷ மஹரிஷி ஆண்டு வந்தார். அவர் தன் வாழ்நாளில் அனைத்து சுகபோகங்களையும் எய்தியவர். ஆனாலும் அவருக்குள் பகவான் விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற வேண்டும் என்றும் பகவான் தமது நாட்டில் நிரந்தரமாக எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிய வேண்டும் எனவும் ஆசை. அதன் பொருட்டு வனத்தில் விஷ்ணுவை நோக்கி தவம் செய்தார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்த முயற்சியில் வெற்றி பெற முடியாததால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது ஒரு குரல் அசரீரியாக ஒலித்தது. ""மன்னா... உன் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்ற, நான் உனக்காகவும் உன் நாட்டு மக்களுக்காகவும் இங்கு வந்து பள்ளி கொள்வேன்'' என்றது. அதைக் கேட்டு ஆனந்தமடைந்தார் அம்பரீஷர்.
பிரம்மனின் யாகம்: அதே நேரத்தில் பிரம்ம லோகத்தில் பிரம்மா, அவர், எம்பெருமானை போக மூர்த்தியாக தரிசனம் செய்ய வேண்டும் என்று அஸ்வமேத யாகத்துக்கு இணையான ஒரு யாகம் செய்யத் துவங்கினார். அப்போது பிரம்மாவுக்கும் அவர் மனைவி சரஸ்வதிக்கும் இடையில் ஒரு விவாதம் நடந்தது. பிரம்மா, விஷ்ணுவின் ஸ்ரீ லஷ்மி தேவி, சரஸ்வதி தேவியை விட உயர்ந்தவள் என்கிறார்.
இதனால் கோபம் அடைந்த சரஸ்வதி அங்கிருந்து சென்று விடுகிறார். பிரம்மா பெருமாளை வேண்டி நின்றார். அசரீரியாக பதில் கிடைத்தது. ""காஞ்சி, சத்ய வ்ரத ஷேத்திரம் உட்பட மூன்று இடங்களில் மூன்று கட்டமாக இந்த யாகத்தை செய்தால், ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தப் பலன் கிடைக்கும். யாகமும் பூர்த்தி ஆகும். அச்சமயம் நேரில் வேண்டியபடி நான் காட்சி தருவேன்'' என்றார்.
இன்றைய பள்ளிகொண்டான் எனப்படும் இடத்தில் பூர்வாங்க யாகம் துவங்கினார் பிரம்மா. சரஸ்வதி தேவி, யாக சாலையை மூழ்கடிக்க, வேகவதி எனும் நதியாய் உருவெடுத்து சீறிப் பாய்ந்து வந்தாள்.
திருமால் பெரிய உருவமெடுத்து நதியின் குறிக்கே ஆதிசேஷன் மீது சங்கு சக்ரதாரியாக படுத்துக் கொள்ள, பாய்ந்து வந்த நதி அடுத்த யாகசாலைகளை நோக்கி பாய்ந்து சென்றது. திருப்பாற்கடல் மற்றும் திருவெக்காவில் இருந்த இரண்டு யாக சாலைகளில் பாய வந்த நதியை, தடுத்து நிறுத்தும் வகையில் நாராயணன் மீண்டும் ஆதிசேஷன் மீது சயனமானார். திருவெக்காவில் விஷ்ணுவை பார்த்த சரஸ்வதிக்கு கல்வியினால் ஏற்பட்ட அகங்காரத்தால் தான் செய்ய இருந்த தவறு புரிந்தது. திருமாலிடம் மன்னிப்புக் கேட்டு யாகசாலைக்குச் சென்று பிரம்மனுடன் சேர்ந்து யாகத்தில் கலந்து கொள்ள,
யாகம் நிறைவு பெற்றது. பிரம்மன் விரும்பியபடி விஷ்ணு பகவான் காட்சி தந்தருளினார்.
பின்னர், பள்ளிகொண்டானில் எம்பெருமான், பள்ளி கொண்ட ஸ்ரீ ரங்கநாதராக காட்சி தந்து அம்பரீஷ மகாராஜாவை ஆசிர்வதித்தார். நதிக்கரையில் எழுந்தருளி இருந்த பெருமாளை, பின்னர் வந்த விஜயநகர மன்னர்கள் காலத்தில் தற்போது உள்ள இடத்தில் ஸ்தாபித்து திருக்கோயிலை புதுப்பித்து அமைத்துள்ளனர். இவ்வாலயத்தில் ரங்கநாயகி தாயார், ஆண்டாள், ராமர், கண்ணன் சந்நிதிகளை வெவ்வேறு காலங்களில் நிறுவியுள்ளனர்.
கருவறைக்குள் நுழையும் முன் வலப்புறத்தில் கஸ்தூரி ரஙகன் என்ற சந்நிதி உள்ளது. இவரை சோட்டா ரங்கநாதர் என்கின்றனர்.
கருவறையில் பள்ளிகொண்ட ரங்கநாதர், ஆதி சேஷன் மீது சங்கு சக்ரதாரியாக பெரிய அழகிய திருமேனியுடன் ஆகிருதியாக நிமிர்ந்து படுத்து, தெற்கில் சிரசும் வடக்கே திருப்பாதங்களும் வைத்து போக சயன மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளார். எம்பெருமான், ஆதிசேஷன் மீது முதன் முதலில் பள்ளி கொண்ட ஊர் இந்த பள்ளி கொண்டா ஆகும்.
பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டது போல் பாலாற்றின் கரையில் பள்ளி கொண்டதால், இந்த ஆற்றிற்கு பாலாறு என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. தேவேந்திரனின் தோஷத்தை நீக்கிய தலம் என்பதால் இத்தலம், தோஷம் நீக்கும் தலமாக கருதப்படுகிறது.
உத்திர ரங்கம்: ஸ்ரீ ரங்கம் என்று அழைக்கப்படும் திருவரங்கம் தமிழக வைணவத் திருத்தலங்களில் தென்னரங்கம் என்று அழைக்கப்படுவதால் இத்தலம், வடவரங்கம் என்னும் பொருளில் உத்திரரங்கம் என்று வழங்கப்படுகிறது.
சித்திரை பிரம்மோத்சவம், வைகாசி விசாக கருட சேவை, ஸ்ரீஜயந்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, மாசித்தெப்பத் திருவிழா, வைகுண்ட எகாதசி போன்றவை இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள்.
வைகுண்ட எகாதசி: சொர்க்கவாசல் என தனி பரமபத வாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசி அன்று கோபுர வாயிலே சொர்க்க வாசலாக பாவிக்கப்படுகிறது.
01-01-2015 அன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
பள்ளிகொண்டா திருத்தலம், வேலூரிலிருந்து 23 கி.மீ தொலைவில் குடியாத்தம் செல்லும் சாலையில் அமைந்து உள்ளது.
விவரங்களுக்கு: 9994384769/ 9994689735/ 8695095633.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...