51 சக்தி பீடம்: ஹிங்லாஜ் கோடரீ

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் அமைந்துள்ளது கோடரீ தேவியின் ஆலயம்.
51 சக்தி பீடம்: ஹிங்லாஜ் கோடரீ
Updated on
2 min read

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் அமைந்துள்ளது கோடரீ தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 45வது பீடமாக விளங்குகிறது இது, அன்னையின் உடற்கூறுகளில் உச்சந் தலைப் பகுதி விழுந்த  இடமாகக் கருதப்படுகிறது. இங்கே பாயும் ஹிங்கோல் நதிக்கரையில் உள்ள ஹிங்லாஜ் என்ற அமைதியான இடத்தில் உள்ளது இந்துக்களின் புண்ணியத் தலமான கோடரீ தேவியின் ஆலயம்.

சிந்தி மொழியில் ஹிங்குலி என்றால், முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு அல்லது செந்தூரம் என்று பொருள். அன்னையின் உச்சந்தலை இப்பகுதியில் விழுந்ததால்தான் இப்புனித இடத்துக்கு ஹிங்லாஜ்  என்று பெயர் வந்ததாம். அன்னையின் ஹிங்லாஜ் ஆலயம், கராச்சி நகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த மகாசக்தி பீடேஸ்வரியின் திருநாமம் கோடரீ. இங்கே காவல் தெய்வமாக விளங்கும் இறைவன், பீமலோசனர். அன்னையின் இடது கண் போல், கிழக்கிலுள்ள அஸ்ஸôம் மாவட்டத்தில் காமாக்யா  மகாசக்தி பீடமும், தேவியின் வலது கண் போல் மேற்கிலுள்ள பலுசிஸ்தானின் ஹிங்லாஜ் மகாசக்தி பீடமும், பராசக்தியின் நெற்றிக் கண் போல் காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவி தேவி சக்தி பீடமும்  முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.

ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசத்தின்போது இப்பீடத்துக்கு வந்து கோடரீ தேவியை வழிபட்டார்கள் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடு பிரிக்கப்படுவதற்கு முன், தங்களது  நேர்த்திக் கடனைச் செலுத்த, வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹிங்லாஜ் தலத்துக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்து மதத்தின் சைவத்தில் ஒரு பிரிவாக உள்ள நாத் எனும் மதத்தினர், இங்கே ஏராளமானோர் இருந்துள்ளனர். இன்றும் நாத் யோகிகள் பலரை அங்கே காண முடிகிறது. உஜ்ஜைனி ராஜ வம்சத்தைச்  சேர்ந்த ஒருவர் நாத் சம்பிரதாயத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. நாத் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் சாதுக்களை கான்படா யோகிகள் என்று அழைக்கின்றனர். கான் என்றால்  இந்தியில் காது. படா என்றால் கிழிந்த என்று பொருள். இவர்கள் துறவறம் செல்வதற்கு முன், இவர்களின் இரு காதுகளிலும் ஓர் அங்குல நீளத்தில் நீண்ட துளை இடப்படும். அத்துளையில் வெள்ளித்  தகட்டால் செய்யப்பட்ட வளையங்களை அணிந்த இந்த சந்நியாசிகளை, அங்கே நடக்கும் பெருந் திருவிழாக்களில் கூட்டம் கூட்டமாகக் காணலாம்.

பிரயாணத் தலமாகவும் தீர்த்த யாத்திரை தலமாகவும் ஹிங்குலாஜ் மகாசத்தி பீடம் அக்காலங்களில் விளங்கியதாம். அழகாகத் தோற்றமளிக்கும் ஹிங்கோல் நதிக்கரையிலுள்ள ஒரு மலைக்குகையில் ஹிங்லாஜ் பீடம் உள்ளது. இப்பீடத்தின் கருவறையை அடைய, உயரம் குறைவாகத் தென்படும் குகைவாயில் வழியாக ஊர்ந்துதான் செல்ல வேண்டும். கருவறையில் அம்மனை உருவமாகவோ,  அருவமாகவோ வழிபட இயலாது. அன்னைக்காக ஹோமம் நடத்தப்படும்போது, ஹோமத்தின் பூர்ணாஹூதியின் போது எழும் உயர்ந்த ஜுவாலையில், கோடாரீ அன்னையின் திருவுருவம் ஒரு நொடி  நேரத்தில் சிலருக்குத் தென்படும் என்பார்கள். ஆனால், ஹிங்லாஜ் பீடத்துக் குகைக் கருவறையில், வருடம் முழுவதும் இடைவிடாமல் எரியும் தீ ஜுவாலையில், அன்னையின் திருவுருவத்தைக்  காணலாம் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com