

பிற இனத்தார் உனது ஒளியை நோக்கி வருவர்; கடலின் திரள்செல்வம் உன்னிடம் கொணரப்படும்; உலகின் சொத்துக்கள் உன்னை வந்தடையும்; ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னிடம் வந்து நிரம்பும்' என்று ஏசாயா இறைவாக்கினர் இயேசுவைப் பற்றி அவரது பிறப்புக்கு முன்னரே தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறார்.
பாலை வெளியில் வாழ்வோரும் அவரை வணங்கி மகிழ்வர்; புகழ்வாய்ந்த அரசர்களும் அவரைத் தரிசிக்க காணிக்கைகளோடு வருவர். அப்படி வரும் அரசர்கள் அவரது முன் தரையில் தாழ்ந்து வணங்கி மகிழ்ந்து செல்வர் என்றும் விவிலியத்தில் இயேசு பிறப்பதற்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.
கடவுளே இறைமகனாக இந்த உலகில் அவதரித்திருக்கிறார் என்பதை கீழ்த்திசையில் தோன்றிய வால்நட்சத்திரம் மூலம் உணர்ந்து கொண்ட கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்த மூன்று அரசர்கள் எருசலேமுக்குப் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அங்கு அரசனாக இருந்த ஏரோதுவிடம் இறைமகன் எங்கே பிறந்திருக்கிறார் என்று கேட்டார்கள்.
இதைக் கேட்ட ஏரோது அரசன் தனக்குப் போட்டியாக ஓர் அரசர் பிறந்திருக்கிறாரா என்று எண்ணி மனம் கலங்கிப் போனான். அவன் அந்த அரசர்களிடம் நீங்கள் குழந்தை இயேசுவைக் கண்டால் எனக்கு வந்து சொல்லுங்கள். நானும் சென்று அவரை வணங்கி மகிழ்வேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
ஏரோது அரசனின் அரண்மனையை விட்டு வெளியே வந்த அந்த அரசர்களுக்கு விண்மீன் ஒன்று வழிகாட்டி, இயேசு பிறந்திருந்த இடத்தை அடைய அவர்களுக்கு உதவி செய்தது. அவர்களும் இயேசு பிறந்திருந்த மாட்டுக் கொட்டிலுக்கு வந்து அவர் முன் தாழ்ந்து வணங்கினர். அப்போது அவர்கள் தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் இயேசுவுக்குப் பரிசாகத் தந்தனர்.
அவர்கள் கொடுத்த காணிக்கைகளின் அர்த்தம் இதுதான்: பொன்- இயேசு உலகிற்கு அரசனாகப் பிறந்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. சாம்பிராணி - இயேசு இறைமகன் என்பதற்கு அடையாளமாக அவருக்குத் தூபமாகச் சாம்பிராணி புகை போடுவதை எடுத்துரைக்கிறது. வெள்ளைப் போளம் என்பது யூதர்களின் வழக்கப்படி இறந்தவர்களின் உடலில் பூசப்படும் ஒரு பொருள். இயேசு மக்களின் விடியலுக்காகத் தனது இன்னுயிரையே கொடுப்பார் என்பதை இந்த வெள்ளைப் போளம் உணர்த்தியது.
இப்படி மூன்று அரசர்கள் இயேசுவைப் பார்க்க வந்ததைத்தான் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸýக்குப் பிறகு வரும் ஜனவரி 5-ம் தேதி மூன்று அரசர்களின் திருவிழாவாகக் கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். இது இரண்டாவது கிறிஸ்துமஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது கிறிஸ்துமஸ் விடியலுக்கான ஓர் அடையாளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.