குடமுழுக்கு செய்வதின் முக்கியத்துவம்!

ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் ஏன் செய்யவேண்டும்? இதற்கான பதிலை நமது சாஸ்திரங்களே தெரிவிக்கின்றன.
குடமுழுக்கு செய்வதின் முக்கியத்துவம்!

ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் ஏன் செய்யவேண்டும்? இதற்கான பதிலை நமது சாஸ்திரங்களே தெரிவிக்கின்றன.

திருக்கோயில்களின் ஸ்திரத் தன்மைக்கு தொழில் நுட்பம் மட்டுமின்றி மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஜீர்ணோத்தாரணம் என்று சொல்லப்படும் சிற்ப ஆகமவிதி. இது திருக்கோயிலின் அங்கங்கள், கலையம்சங்கள் மற்றும் சிற்ப வடிவங்களை சரி செய்யும் முறைகளை எடுத்துரைப்பதாகும். மேலும் ஜீர்ணோத்தாரண முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயிலை செப்பனிட்டு புதுப்பித்து அங்கே நிலவும் இறைநிலையின் உயிர்ப்புத் தன்மையை ஒளிரச் செய்யவேண்டும். ஜீர்ணோத்தாரண விதியின்படி திருக்கோயில்களை சீரமைக்கும் பொருட்டு, ஆவர்த்தனம், அனாவர்த்தனம், புனராவர்த்தனம் மற்றும் அந்தரீதம் என்ற நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றினை பின்பற்றி செயலாற்றுவதில் கவனம் செலுத்துபவர்கள் சிற்பஆகம வல்லுநர்கள்.

பழைமையான ஓர் ஆலயம் வலுவிழந்து சிதிலமுற்றிருந்தால் அதனுள்ளிருக்கும் இறைத்திருமேனிகள் பூஜைகள் செய்யப்படாமல் ஒளியிழந்து போகும். அத்தகைய கோயில்களை சீரமைத்து குடமுழுக்கு செய்வித்து பூஜைகள் நடைபெற செய்வது ஆவர்த்தனமாகும்.

அதுவே புதிதாக ஒரு கோயிலை சிற்பசாஸ்திர இலக்கண முறைப்படி கட்டுவித்து குடமுழுக்கு நடத்துவது அனாவர்த்தன வகையை சார்ந்ததாகும்.

மேலும் வழிபாட்டில் இருக்கும் திருக்கோயிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாகச் செப்பனிட்டு, உரியவகையில் புதுப்பித்து மீண்டும் குடமுழுக்கு நடத்துவது புனராவர்த்தனமாகும்.

சிலசமயங்களில் பன்றி, நாய், கழுதை போன்ற பிராணிகள் கோயிலுக்குள் வந்துவிட்டாலோ அல்லது கோயிலினுள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விட்டாலோ, அக்கோயிலிலுள்ள உயிர்ப்புத் தன்மைக்கு களங்கம் (தோஷம்) ஏற்படும். அச்சமயம் ஆகம வேள்வி பூஜைகள் செய்து குடமுழுக்கு செய்யப்படுவதை அந்தரீதம் என்பர்.

சிற்பக் கலையின் அடிப்படை மூலாதாரம் அளவியலையும் அழகியலையும் சார்ந்திருப்பதாகும். இவ்விரண்டும் ஒருங்கிணைந்த வடிவங்கள்தான் உயிர்ப்பு நிறைந்த ஆலயங்களாகும். இவ்வாறு நிறுவப்பட்ட ஆலயங்கள், கடவுள் திருமேனிகள் என அனைத்தும் எதனால் வடிவமைக்கப்படுகிறதோ அப்பொருளின் தன்மையைப் பொறுத்து தேய்மானம் கொள்கின்றன. மேலும் இடி, மின்னல், மழை, நெருப்பு போன்ற இயற்கை சீற்றங்களாலும் கோயில்கள் பாதிப்படைகின்றன. அரசு, ஆல் போன்ற செடி கொடிகள் கோயிலின் சுவற்றில் முளைத்துத் தழைத்து வளர்வதாலும் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு நாளடைவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்று ஆலயங்களில் பாதிப்புகள் ஏற்படும்போது அந்தக் குற்றம் குறைகளை களைந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் செய்யவேண்டும். இப்படி செய்யாவிட்டால் என்னவாகும் என்றால், முதல் 12 ஆண்டுகளில் கருவறையில் வீற்றிருக்கும் இறைநிலையானது மண்டபத்திற்கு வந்துவிடுவதாகவும் அதுவே அடுத்த 12 ஆண்டுகளில் தல விருட்சத்துக்கு சென்று விடுவதாகவும் மூன்றாம் 12 ஆவது ஆண்டுகளில் ஜீர்ணோத்தாரணம் செய்யப்படாவிடில் அந்த இறைநிலையானது சூரிய ஒளியில் ஐக்கியமாகி விடுவதையும் ஆகம ஏடுகள் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகின்றது. ஜீர்ணோத்தாரணம் பற்றிய ஆய்வுச் செய்திகள் சிற்பரத்தினம், மானசாரம், ஜீர்ணோத்தாரண தசகம் போன்ற பழம் பெரும் நூல்களில் காணப்படுகின்றன.

பத்மபூஷன் டாக்டர். வை. கணபதி ஸ்தபதி வழங்கியுள்ள ஓர் விஞ்ஞான ஆய்வேட்டில், அளவு பரிமானங்களே ஸ்திர தன்மைக்கும் சாந்நித்தியத்திற்கும் ஆதாரமாகின்றன. அருள் நிறைந்த இவ்வடிவங்களை புனருத்தாரணம் செய்விக்கும்போது அதுவதன் அளவுகளையோ அழகியலையோ சிறிதும் மாற்றிடாமல் அமைத்திட வேண்டும் என்று சொல்லி, "மான ஹீனே மஹாவ்யாதி, மான அதிகே கர்த்ரு நாசனம், தஸ்மாத் சர்வப்ரயத்னேன காரயேத் லஷணான்விதம்' என்ற வரிகளை மானசாரம் என்ற சிற்ப நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அதாவது, அளவுகள் குறையுமாயின் செய்விப்போன் வியாதிகளால் நலிவடைவான் என்பதாகும். அதனால் முறையான லட்சணங்களோடு திருப்பணியினை செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது. அதனால் தொன்மை மிகுந்த நம் ஆலயங்களை காத்திடுவோம். ஆலயத்திருப்பணியில் பங்கு கொண்டு ஆன்மிக பணி செய்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com