ஐயப்பன் அருள்பாலிக்கும் கீழ்ப்புதுப்பட்டு!
சுகன் என்பவன் ஓர் அசுரன். இளவயதினன். அவனுக்கு விருகாசுரன் என்றொரு பெயரும் உண்டு.


சுகன் என்பவன் ஓர் அசுரன். இளவயதினன். அவனுக்கு விருகாசுரன் என்றொரு பெயரும் உண்டு. அவனுக்கு உலக சுகங்களை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று ஆசை. அதிலும் தான் சுகம்
அனுபவித்த பிறகு, அந்தப் பொருள்கள் யாருக்கும் கிடைக்காதவகையில் அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அதற்காக, அந்தச் சக்தியைப் பெற, சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான்.
சுகன் தவம் செய்துக்கொண்டிருக்க அவனைச்சுற்றி புற்றுக்கள் உருவாயின. அவன் விடாமல் தவம் செய்தான். புற்றுகள் வளர்ந்து அவனை மூடின. புற்றுக்குள்ளும் அவன் தவம் செய்துகொண்டே இருந்தான். முக்கண்ணனார் உரியகாலத்தில் அவன் முன்னே தோன்றினார். "பக்தனே! வேண்டுவது கேள்!' என்றார்.
அவனும் கண் விழித்து, "நான் எதன் மீது கை வைக்கிறேனோ அது எரிந்து சாம்பலாக வேண்டும்'' என்று வேண்டினான். சிவனும் தயங்காமல் வரம் தந்தார்.
தன் தவம் பலிக்குமா என அறிய சிவ பெருமான் தலையில் கைவைக்க ஓடினான் சுகன். சிவனோ தப்பித்துச் சென்று, புற்றுகள் நிறைந்த வனத்திற்குள் ஓடி, ஒரு புற்றுக்குள் ஒளிந்தார்.
ஆனாலும் அவன் விடவில்லை. அவன் காட்டில் நுழைந்து தன்னைத் தேடிவதை அறிந்த சிவன், காட்டில் இருந்த ஐவேலமரத்தின் காய்களில் ஒன்றாக மாறித் தொங்கினார். அவனோ வேலங்காய்களை உண்ணும் ஆடாக மாறி சிவபெருமானைத் தேடினான். இக்கட்டான சூழலில் திருமாலை துணைக்கழைத்தார் சிவனார்.
நிலைமை உணர்ந்த திருமால், மோகினி வடிவம் கொண்டு சுகன் முன்பு நின்றார். சுகன், தவம் செய்திருந்த கோலத்திலேயே இருந்தான். அவனது உடலில் மண்ணும் பறவைகளின் எச்சமும் இருந்தன. அவன் சிவனை மறந்து மோகினியின் பின்னால் சென்றான்.
"உன் உடலில் இருக்கும் அழுக்கு, எச்சத்தையெல்லாம் சுத்தப்படுத்திக்கொண்டு வா!' என்றாள் மோகினி.
எங்கும் தண்ணீர் இல்லை. ஓர் இடத்தில் கால்நடைகளைக் கழுவும் "கழுவெளி' (தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதி) பகுதிக்குச் சென்றான். குளித்து கழுவும் வகையில் தண்ணீர் இல்லை. தண்ணீரைத் தொட்டுத்தொட்டு முகம், மார்பு என்று உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான். பின்னர் கடைசியாக தலையை சுத்தப்படுத்த தண்ணீரைத் தொட்டு தலையை தடவினான்.
என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பாகவே தீப்பற்றி எரிந்து போனான்!
துர்க்கையால் அழிக்கப்பட்ட மகிஷனின் தங்கை மகிஷி. பிரம்மாவை நோக்கி தவம் செய்து யாராலும் தன்னை கொல்ல முடியாத வரம் தருமாறு கேட்டாள். "இயலாது' என்று விட்டார் பிரம்மன். "ஹரி- ஹரர்களுக்கு பிறந்த குழந்தை மட்டுமே தன்னைக் கொல்லவேண்டும்' என நடக்காத விஷயம் என்று நம்பி, இது போன்ற வரத்தைக் கேட்டாள் மகிஷி. பிரம்மனும் அவள் கேட்ட வரத்தை அளித்தார்.
சுகன், பஸ்பமானபோது பஸ்மாசுரன் எனப்பட்டான். பஸ்மாசுர வதத்திற்குப்பிறகு தனது மோகினி வடிவோடு சிவனாரைக் காண புற்று அருகில் சென்றார் திருமால். சிவனின் சக்தியும் திருமாலின் சக்தியும் இணைந்து குழந்தையாக உருவெடுத்தது. அக்குழந்தையே ஹரிஹரபுத்திரன் என அழைக்கப்பட்ட ஐயப்ப சுவாமி.
மேற்கண்ட வரலாறுகள் அனைத்தும் நிகழ்ந்த இடம், சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள "கீழ்ப்புதுப்பட்டு' என்னும் வனமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு மஞ்சனீஸ்வரர் திருக்கோயிலே ஐயப்பன் அவதரித்தத் தலமாகும்.
ஐவேலம் என்னும் மரங்கள் நிறைந்திருந்து பச்சை மரகதக் குடையாய் கவிழ்ந்திருந்தன. அதன் அடியில் புற்றுகள் இருந்தன. அவற்றின் அருகில் பட்டுப் போன்ற ஐயப்பன் அவதாரம் ஆனதால் புற்றுப்பட்டு என்பது புதுப்பட்டானது. பின்னர் கீழ்ப்புதுப்பட்டு எனவும் பெயர் பெற்றது.
கீழ்ப்புதுப்பட்டில் அவதரித்த ஐயப்ப சுவாமிக்கு, மகிஷியை அழிக்க வேண்டிய கடமை ஒன்று இருந்தது. தேவகுரு பிரஹஸ்பதி சிறுவன் ஐயப்பனை பந்தள ராஜா வேட்டைக்குச் செல்லும் வழியில் கொண்டு சென்று விட்டது, ஐயப்பன் மகிஷியை அழித்தது, புலியில் ஊர்ந்தது போன்றவை ஐயப்பன் சரிதத்தில் பின்னர் நிகழ்ந்தவை.
ஐயப்ப சுவாமி, தன் அவதாரத் திருத்தலமான கீழ்ப்பதுப்பட்டில் பூரணை புஷ்கலை உடனாய அருள்மிகு மஞ்சனீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
ஆடி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் மற்றும் திங்கள் கிழமை மிகவும் விசேஷமானவை. இத்தலத்தில், திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டி பக்தர்கள் சிறப்பான வழிபாடுகள் நடத்துகிறார்கள்.
குடிப்பழக்கம் நீங்கவும் திருடு போன பொருள்கள் கிடைக்கவும் ஐயப்பன் காலில் சீட்டு கட்டி வணங்கும் வழக்கமும் உண்டு.பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கவும் கீழ்ப்புதுப்பட்டு ஸ்ரீ ஐயப்பனை வணங்கி நலம் பெறுகின்றனர்.
தொடர்புக்கு: 99947 07957.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...