நிறைவான வாழ்க்கை அருளும் நித்ய கல்யாணி அம்மன்

இறக்க முக்தி நிச்சயம்' எனப் பெருமையுடன் சொல்லப்படும் திருவாரூர் திருத்தலத்திற்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது
நிறைவான வாழ்க்கை அருளும் நித்ய கல்யாணி அம்மன்

'இறக்க முக்தி நிச்சயம்' எனப் பெருமையுடன் சொல்லப்படும் திருவாரூர் திருத்தலத்திற்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது "தப்பளாம்புலியூர்'. தமிழ்நாட்டில் உள்ள நவவியாக்கிரபுர தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இவ்வூரின்கண் கோயில் கொண்டு அருள்புரிகிறார் அருள்மிகு நித்ய கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீவியாக்ரபுரீஸ்வர சுவாமி. பழமையான இந்த சிவாலயத்தில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தருணத்தில் இவ்வாலயத்தின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வோம்:

புராணப் பெருமை: கிருதயுகத்தில் "தற்பரவனம்' என்றும், த்ரேதாயுகத்தில் "மதுவனம்'மென்றும், துவாபர யுகத்தில் "தேவவன'மென்றும் கலியுகத்தில் "வ்யாகரபுர'மென்றும் அழைக்கப்படுகிறது " தற்பரன்புலியூர்' என்கிற "தப்பளாம்புலியூர்'. தற்பர மகரிஷி என்பவர் இங்கு வந்து தவம் புரிந்து அருள் பெற்றமையால் தற்பரன் புலியூர் என்றும், மண்டூகம் (தப்பளை என்றும் சொல்லப்படும் தவளை) பூஜித்ததால் தப்பளாம்புலியூர் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம் காசியில் வசித்து வந்த அந்தணர் ஒருவர் துவாதசி தினத்தன்று தைல(எண்ணெய்) ஸ்நானம் செய்ததால் குரூரமான புலி ஜென்மாவை அடைய நேரிட்டது. சாப விமோசனம் வேண்டி இத்திருத்தலத்து இறைவனை மூன்றுமுறை வலம் வந்து வணங்கிய மாத்திரத்தில் அதற்கான நிவர்த்தி கிடைக்கப் பெற்றதாம்.புலிக்கு அருள்புரிந்ததால் வியாக்ரபுரீஸ்வரர் என இத்தலத்து இறைவன் அழைக்கப்படுகிறார். மேலும் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் பூஜித்ததாலும் வியாக்ரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இறைவியின் பெருமை: தன்னை தரிசித்தோர்க்கு நித்யமான கல்யாண குணங்களை அளிப்பதனால் இத்தலத்து இறைவி நித்யகல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். வட நாட்டில் இருக்கும் உஜ்ஜயினி மற்றும் தென்னகத்தில் உள்ள சில தலங்களில் பிரசித்தியுடன் வீற்றிருக்கும் ஸ்ரீகல்யாணி அம்மனுடன் இந்த கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யகல்யாணி அம்மனை ஒப்பிடலாமென்று ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் ஒரு சமயம் சிலாகித்து கூறியுள்ளார்கள். இன்றளவும் இந்த அம்மன் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள்.

ஆலயத்தின் சிறப்புகள்: சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்றான அபூர்வமான ஏகபாத ருத்திர மூர்த்தி தனி சந்நதி கொண்டு அருள்புரிகிறார். ஸ்ரீ நடராஜப் பெருமான் மூலஸ்தானமாக தனி சந்நிதி கொண்டுள்ளார். "ஜ்வரதேவர்' என்று அழைக்கப்படும் சகலவியாதிகளையும் போக்கும் ஈஸ்வரன் இவ்வாலயத்தில் வீற்றிருக்கிறார். அவருக்கு புளி இல்லாமல் மிளகு உப்பு மற்றும் கடுகு போட்டு பொரித்த ரசம் படைக்கப்படுகிறது. பல்வேறு நன்மைகளை அருளும் சப்தகன்னிகைகள் சந்நிதி, சூரியன் மற்றும் சனீஸ்வர பகவான்களுக்கு தனி சந்நிதி, காலபைரவர், வைஷ்ணவி,துர்க்கையம்மன், சந்நிதிகள் ஆகியவை இத்தலத்தில் அமைந்துள்ளன. மேலும் புத்திரபாக்கியம் அடைய ஸ்ரீ நித்திய கல்யாணி அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு வளையல் சாற்றுதல், தொட்டில் கட்டுதல், நெய் மொழுகுதல் முதலிய வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுகிறார்கள்.

திருப்பணி: சோழமன்னர்களால், திருப்பணிகள் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த ஆலயத்திலும், இவ்வூரின் கண் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீநித்திய கல்யாணி அம்மன் சேவா சமிதி என்னும் டிரஸ்ட் கிராமவாசிகள் மற்றும் பொதுமக்கள் போராதரவுடனும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆதரவுடனும், செய்து வருகிறது. முதல் கட்டமாக சிவாலயத்தின் மகா கும்பாபிஷேகம் ஏப்.27 காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. பூர்வாங்க பூஜை ஹோமங்கள் ஏப் 21இல் தொடங்குகிறது.

அமைவிடம்: திருவாரூலிருந்து நாகலூர் மற்றும் தேவூர் செல்லும் வழியில் தப்பளாம்புலியூர் உள்ளது.

தொடர்புக்கு: 044-24311096.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com