சுடச்சுட

  
  nakkirar

  கடைச்சங்கத்தில் இருந்த தமிழ்ப் புலவர்கள் நாற்பத்தொன்பது பேர்களும் பெரும் புலமை பெற்றவர்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கியவர் நக்கீரர் என்றால் அவரது பெருமை சாமான்யமானதா? கீரம் என்றால் சொல் என்று பொருள்! நக்கீரர் என்றால் நல்ல

  இனிய சொற்களையுடையவர்.

  நக்கீரர் ஆழ்ந்த புலமையோடு அஞ்சா நெஞ்சமும் படைத்தவர். சிவன் பாடிய பாடலிலேயே குற்றம் கண்டு அவர் தம் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியும் "குற்றம் குற்றமே' என்று அஞ்சாத நெஞ்சுடன் சிவனிடமே வாதாடியவர். இவ்வளவு அரும் புகழ்வாய்ந்த நக்கீரர் தனது புகழ்பெற்ற "திருமுருகாற்றுப்படை' நூலைப் படைத்ததற்கு ஒரு வரலாறு உண்டு.

  "கற்கிமுகி' என்று ஒரு பெண்பூதம். சிவபெருமானிடம் அளவற்ற பக்தி உண்டு அந்த பூதத்திற்கு. என்னமாதிரி பக்தி தெரியுமா? சிவபூஜை செய்பவர்கள் அதைச் சரியாகக் கவனத்துடன் செய்யாமல் முறை வழுவிச் செய்தால் உடனே அது அவர்களைத் தூரத்தில் கொண்டுபோய் ஒரு குகைக்குள் அடைத்துப் போட்டு விடும்!

  ஆனால் அவர்களுக்கு வேளா வேளைக்கு நல்ல சத்துள்ள சாப்பாடு போட்டு விடும்! அதனால் குகைக்குள் அடைபட்டு கிடக்கும் ஆசாமிகளுக்கு பெரும் மகிழ்ச்சி! எந்த வேலையும் செய்யாமல் சும்மா கிடப்பவர்களுக்கு யார் நேரம் தவறாமல் நல்ல அருமையான சாப்பாடு போட்டு வளர்ப்பார்கள்? ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இந்தப் பூதம் இவர்களுக்குச் சத்தான சாப்பாடு போட்டு இவர்களைக் கொழுக்க வைப்பது எதற்குத் தெரியுமா? சரியாக 1000 பேர் குகைக்குள் கைதிகளாய் வந்து விட்டால் ஒரு சுபயோக சுப தினத்தில் அந்த ஆயிரம் பேரையும் ஒரேயடியாய் விழுங்கித் தன் பசியைத் தீர்த்துக் கொள்ளும்!

  அப்போது குகைக் கைதிகளாய் இருந்தவர்கள் 999 பேர். இன்னும் ஒரு நபர் கிடைத்து விட்டால் 1000 பேராகி விடும். அந்த ஒருவருக்காக அந்தப் பூதம் எங்கும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்தது.

  அப்போது நக்கீரர் தலயாத்திரை மேற்கொண்டு ஒவ்வொரு தலமாக சிவனைத் தரிசனம் செய்து கொண்டு வந்தார்.

  ஒரு நாள் ஓர் ஊரின் குளத்தில் நீராடித் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு குளக்கரையில் அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தார்.

  அந்த நேரத்தில் "கற்கிமுகி' என்ற அந்த பூதம் குளக்கரைக்கு அருகில் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் மீது வந்து அமர்ந்து நக்கீரரை பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கிளையை அசைத்து ஓர் இலையை உதிர்த்தது.

  மரத்திலிருந்து உதிர்ந்த இலை பாதி நீரிலும் பிரதி நிலத்திலுமாய் விழுந்தது. நக்கீரர் இதைப் பார்க்க நேரிட்டது. அதேநேரத்தில் நீரில் விழுந்த பாதி இலை மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி பறவையாகவும் மாறியது! மீன் பறவையை நீரினுள் இழுக்கிறது. பறவை மீனை நிலத்துக்கு இழுக்கிறது! இந்த அதிசயப் போராட்டத்தைப் பார்த்த வியப்பில் நக்கீரர் மனம் சிவபூஜையில் பதியவில்லை! இதைத்தானே பூதம் எதிர்ப்பார்த்தது. ஆஹா...

  ஆயிரமாவது ஆள் அகப்பட்டு விட்டான் என்று அகமகிழ்ந்து

  நக்கீரரைத் தூக்கிக் கொண்டு போய் தனது குகையில் அடைத்து விட்டது!

  சிவபூஜை வழுவியவர்கள் எண்ணிக்கை இந்த நபரோடு ஆயிரம் ஆகிவிட்டது. எல்லோரும் எனக்கு விருந்து படைக்கத் தயாராய் இருங்கள். நான் போய்க் குளித்துவிட்டு

  வருகிறேன்!'' என்று அந்தப்பூதம்

  ஸ்நானம் செய்து வரக் கிளம்பிற்று!

  குகையில் ஏற்கெனவே அடைபட்டுக் கிடந்தவர்கள் எல்லாம் புதிதாய் உள்ளே வந்த நக்கீரரைப் பார்த்து கண்டபடி திட்டினார்கள்! ""மகாபாவி! நீதான் எங்களுக்கு எமனாக வந்து சேர்ந்தாய். நீ மட்டும் வராமல் இருந்தால் அந்தப் பூதம் இன்னும் எத்தனையோ காலம் எங்களுக்கு அருமையாய் சாப்பாடு போட்டு வளர்த்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டாயே! நீ வந்ததால் எண்ணிக்கை ஆயிரம் ஆகிவிட்டது. இப்போது அந்தப் பூதம் நம் எல்லோரையும் ஒரேயடியாய் விழுங்கப் போகிறதே... அய்யோ...

  அய்யோ!'' என்று நக்கீரரைத் திட்டியும் தங்களுக்குள் புலம்பியும் அழுது தீர்த்தார்கள்!

  நக்கீரருக்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. அதனால் அவர்களைப் பார்த்து, ""நீங்கள் எவரும் இப்படி பயந்து சாகவேண்டாம். என் அப்பன் முருகப்பெருமான் இருக்கிறான். அவனை மனதார நினைத்து உருகி வேண்டினால் ஒரு கணத்தில் நம் துயரைத் தீர்த்தருள்வான். முன்பு லட்சக்கணக்கானவர்களை சிறைபடுத்தி கிரவுஞ்ச மலையில் அடைத்து வைத்திருந்த அரக்கர்களைத் தன் வேலால் அவனையும் அந்த மலையையும் பிளந்த எம்பெருமான் முருகன், நிச்சயம் நம்மைக் காப்பான். அச்சம் அகற்றுக!'' என்று கம்பீரமாகக் கூறினார்.

  நக்கீரர் பேசிய பேச்சில் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தோன்றுவதைக் கண்ட அவர்கள் முருகப் பெருமானை மனதார நினைத்துத் துதித்தார்கள்.

  நக்கீரரும் முருகவேளைப் பலவாறு துதித்து, "உலகம் உவப்ப' என்று தொடங்கி "திருமுருகாற்றுப்படை' என்று பிற்காலத்தில் பெரிதும் புகழப்பட்ட அந்த இனிய பாடலை உள்ளன்புடன் பாடினார்.

  அந்த தேனினும் இனிய பாடலைச் செவியுற்ற செந்தமிழ்க் கடவுளாகிய கந்தபெருமான் தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை வீச அது அந்த மலைக்குகையையும் கற்கிமுகி என்ற அந்த பூதத்தையும் பிளந்து நக்கீரரையும் மற்றவரையும் காப்பாற்றியது!

  திருச்செந்தூர் திருப்புகழ் பாடல், "முலைமுகந்திமிர்ந்த கலவையுந்துலங்கு'' என்ற பாடலில் ""மலைமுகஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு வழிதிறந்த செங்கை வடிவேலா'' என்ற அடிகளில் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

  - மயிலை சிவா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai